'காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வேண்டும்' - ஜோதிமணி

ஜோதிமணி


யார் முதல்வர் என அ.தி.மு.க.வில் நிலவும் அதிகாரப்போட்டியின் காரணமாக தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக கூறி, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தபோதும், இன்று வரை அவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை.

பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் தனக்கு ஆதரவு உள்ளதாக சசிகலா சொல்லும் நிலையில், அவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது, சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நெருங்குவது போன்றவை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 233 பேர் தற்போது உள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி சட்டமன்றத்தில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உடையவர்கள் ஆட்சியமைக்க முடியும்.

தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 135 பேரும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 89 பேரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும், முஸ்லீம் லீக் சார்பில் ஒருவரும் என மொத்தம் 233 பேர் உள்ளனர். சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்றால், 117 பேரின் ஆதரவு தேவை. தற்போது 129 பேர் தனக்கு ஆதரவாக உள்ளதாக சசிகலா தெரிவித்து வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வத்தை இதுவரை 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரித்துள்ளனர். மேலும் சிலர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கக் கூடும் என சொல்லப்படுகிறது. எம்.எல்.ஏ.க்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதால் எந்தெந்த எம்.எல்.ஏ.க்கள் யார் யாருக்கு ஆதரவு என்பதை உறுதியாக கூற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜோதிமணி

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. இதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி. நம்மிடம் அவர் கூறியதாவது.

"வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு, அ.தி.மு.க தயவு தேவைப்படுகிறது. இதை மனதில் வைத்தே, பன்னீர்செல்வத்தை ஆட்சியமைக்க விடாமல், சசிகலாவுடன் மறைமுக பேரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு நலனை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி பன்னீர்செல்வம் ஆட்சியமைக்க உதவ வேண்டும்

கவர்னர் தமிழக மக்களை ஏமாற்றுகிறார். ஓ.பி.எஸ்.ஸை ஏமாற்ற பார்க்கிறார். இந்திய பிரதமரின் கைப்பாவையாக செயல்படுகிறார் ஓ.பி.எஸ். தமிழகத்தில் எழுந்திருக்கும் அசாதாரண அரசியல் சூழலை தங்களுக்கு சாதகமாக்கி, அ.தி.மு.க ஓட்டுக்களை வரும் ஜனாதிபதி தேர்தலின்போது பா.ஜ.க நிறுத்தும் வேட்பாளருக்கு சாதகமாக விழ வைக்க பேரம் நடக்கிறது. அதற்கு கவர்னர் துணை போகிறார்.

இப்போதைக்கு தமிழகத்தில் ஓ.பி.எஸ் ஆட்சி அமைப்பதே பயன் தரும். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியில் இருப்பது வாஸ்தவம்தான். ஆனால்,எல்லா நேரத்திலும் அரசியலை மட்டுமே பார்க்க கூடாது. மக்கள் நலனுக்காகவே கட்சிகள் இயங்கனும். அந்த வகையில் தமிழக மக்கள் விரும்புகிற ஓ.பி.எஸ் ஆட்சியமைய, அரசியலை தாண்டி காங்கிரஸ் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு கொடுக்க வேண்டும்" என்றார்.

- துரை.வேம்பையன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!