வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (11/02/2017)

கடைசி தொடர்பு:18:01 (12/02/2017)

இரட்டை இலை சின்னம் யாருக்கு? சசிகலாவை மிரட்டும் பன்னீர்செல்வம் வியூகம் #OpsVsSasikala #VikatanExclusive

 

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா ஆகிய இருவருக்கு இடையே மல்லுக்கட்டு தொடங்கி உள்ளது. 

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் கட்சியினரும், மக்களும் அடுத்தடுத்த காட்சிகளைக் ஆர்வமாக கவனித்து வருகின்றனர். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலாவின் கட்டுப்பாட்டில் பெரும்பான்மையாக எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 5 எம்.எல்.ஏ.க்கள், 4 எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதுதவிர அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் என பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, அவைத் தலைவர் மதுசூதனனை நீக்கி விட்டு அந்த பதவிக்கு செங்கோட்டையனை நியமிப்பதாக அறிவித்தார். அதற்கு மதுசூதனன், சசிகலாவை நீக்கி விட்டதாக பதிலடி கொடுத்தார். இவ்வாறு அ.தி.மு.க.வில் களேபரம் நடந்து வரும் நேரத்தில் மீண்டும் 1987ல் நடந்த நிகழ்வுகள் திரும்பும் என்று சொல்லத் தொடங்கி உள்ளனர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள். 

 இதுகுறித்து நம்மிடம் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், "எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு ஜெயலலிதாவுக்கும், ஜானகிக்கும் இடையே போட்டி நிலவியது. அப்போது கட்சியில் பிளவு ஏற்பட்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதனால் அடுத்து வந்த தேர்தலில் ஜானகியும், ஜெயலலிதாவும் இரட்டை புறா, சேவல் சின்னத்தில் போட்டியிட்டனர். இதையடுத்து தேர்தலில் ஜானகி அணியை விட கூடுதல் தொகுதிகளைப் பெற்ற ஜெயலலிதா, சட்டபேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். அதே சூழ்நிலை தற்போதும் நிலவுகிறது. 
 அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவின் தேர்வு செல்லாது என்று பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் கமிஷனிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல கட்சியின் பொருளாளரும், முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், வங்கிகளுக்கு வரவு, செலவு தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் சந்திப்பில் கூட சசிகலாவின் தேர்வு குறித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சசிகலா, 23 நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். அந்த நியமனமும், நீக்கமும் செல்லாது என்று சொல்கின்றனர். இதை சட்ட ரீதியாக அணுக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆலோசித்து வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அவைத் தலைவராக இருக்கும் மதுசூதனன், இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சசிகலா தரப்புக்கு அது நிச்சயம் சிக்கலை ஏற்படுத்தும். நீதிமன்றத்தில் ஒரு வேளை இரட்டை இலை சின்னத்தை முடக்க உத்தரவிட்டாலும், அல்லது மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கான உரிமையை கொடுத்தாலும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் மதுசூதனனுக்கு கட்டுப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை நிச்சயம் பலப்படுத்தும்" என்றார்.

இதுகுறித்து சசிகலா தரப்பில் கேட்டதற்கு, "எம்.ஜி.ஆர். காலக்கட்டத்தில் ஜெயலலிதாவுக்கும், ஜானகிக்கும் இடையே போட்டிக்கும் தற்போது நடக்கும் இந்த நிகழ்வுக்கும் வேறுபாடு இருக்கிறது. அன்றைக்கு மக்களிடமும், கட்சியினரிடமும் செல்வாக்கு ஜெயலலிதாவுக்கு இருந்ததைப் போல சின்னம்மாவுக்குத்தான் செல்வாக்கு இருக்கிறது. மேலும் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியை நிரூபிக்கும் அளவுக்கு எங்களிடம் எம்.எல்.ஏ.க்களின் பலமும் இருக்கிறது. அந்த அணி சட்டரீதியாக போராடினால் நாங்களும் அதை எதிர்கொள்ள தயார்" என்றனர். 

-எஸ்.மகேஷ்