வெளியிடப்பட்ட நேரம்: 13:48 (11/02/2017)

கடைசி தொடர்பு:18:03 (12/02/2017)

செங்கோட்டையன் நள்ளிரவில் சந்தித்த எம்.எல்.ஏ..!

சசிகலாவால் அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையன், நேற்றிரவு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரியை சந்தித்துப்  பேசினார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. 

 அ.தி.மு.க.வில் அரங்கேறும் உள்கட்சி பூசல் வீதிக்கு வந்துவிட்டது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் சசிகலா ஆகிய இரண்டு அதிகார மையங்களுக்குப் பின்னால் கட்சியினர் அணிவகுத்து வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக கூறி சசிகலாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இதனால் சசிகலா தரப்பு அணி தாவுதலைத் தடுக்க பல்வேறு வியூகங்களை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கெனவே சசிகலாவின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் கூவாத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த எம்.எல்.ஏ.க்களில் சிலர், தங்களின் சுயவிருப்பத்தின் பேரிலேயே தங்கி இருப்பதாக பேட்டி அளித்துள்ளனர். இதற்கிடையில் கூவாத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் சிலர் உண்ணாவிரதம் இருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அறிக்கை அளிக்கும்படி காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் இன்று கூவாத்தூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் இதுவரை 5 பேர் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் ஆதரவு அளிப்பது தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையெல்லாம் தடுக்கும் வகையில் சசிகலா தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கட்சியின் முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசனையில் சசிகலா ஈடுபட்டார். அடுத்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூவாத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடமும் சசிகலா ஆலோசனை நடத்தியதாக கட்சியினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, கடந்த சட்டசபை தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் வரும் தமிமுன் அன்சாரியின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெரியவில்லை. கட்சி தலைமை அலுவலகத்தில் பொது மக்களின் மனுக்களை பார்த்துக் கொண்டு இருந்த அவரிடம், 'முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் சசிகலா ஆகிய இரண்டு பேரில் யாரை நீங்கள் ஆதரிக்கப்போகிறீர்கள் என்று கேட்டால் சிரித்துக் கொண்டே மக்கள், கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி விட்டு முடிவு சொல்கிறேன்' என்றார். அடுத்து கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் தமிமுன்அன்சாரி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தற்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் தமிமுன்அன்சாரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தோழமைக் கட்சியான அ.தி.மு.க.வில் நிலவி வரும் சூழல் குறித்து கவலையடைந்திருக்கிறோம். இப்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து மாவட்ட நிர்வாகிகளிடமும் கருத்து கேட்டறிவது என்றும் கூடுதலாக சமுதாய தலைவர்களிடமும் இதுகுறித்து ஆலோசனை கேட்பது என்றும் நாகப்பட்டிணம் தொகுதி மக்களின் உணர்வுகளையும் கவனத்தில் கொள்வது என்றும், இப்பிரச்னையை கண்ணியமான முறையில் அணுகுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கூட்டம் முடிந்தபிறகு சசிகலாவால் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கோட்டையன், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அரைமணி நேரம் அவர் தமிமுன்அன்சாரி மற்றும் கட்சியின் நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது, உங்களின் ஆதரவு எங்களுக்கு வேண்டும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதற்கு கட்சி நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் நகலை செங்கோட்டையனிடம் கொடுத்தனர்.

இதுகுறித்து தமிமுன்அன்சாரியிடம் கேட்டதற்கு, எங்களை சந்தித்த செங்கோட்டையனிடம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் நகலை கொடுத்துள்ளோம். ஆலோசனைக்குப் பிறகு என்னுடைய முடிவு தெரிவிக்கப்படும்" என்றார்.

- எஸ்.மகேஷ்  

 


டிரெண்டிங் @ விகடன்