'சசிகலாவும் வேண்டாம்... பன்னீர்செல்வமும் வேண்டாம். ஆனால்...?!' என்ன சொல்கிறார் மதுரை நந்தினி?

madurai Nandhini


யார் முதல்வர் என்ற அதிகாரப்போட்டியின் காரணமாக தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலை சந்தித்து வருகிறது. தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாகக் கூறி சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அமைச்சர் உட்பட 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக குரல் வலுத்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வமும் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்' எனச்சொல்லி பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி.

மது ஒழிப்புப்போராளியான மதுரை நந்தினி, மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், madurai Nandhiniதற்போது அ.தி.மு.க.வில் முதல்வர் பதவிக்கு அதிகார சண்டை நடப்பதை அடுத்து, தமிழக சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பான பிரச்சாரத்தையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக நந்தினியிடம் பேசினோம். "செப்டம்பர் 22ம் தேதி, ஜெயலலிதா அப்போலோவுக்கு சென்றது முதல் தற்போது வரை தமிழக அரசியலில் நடப்பவை அனைத்துமே மர்மமாகவே உள்ளது. தற்போதைய சூழலில் தமிழக ஆட்சி நிர்வாகம் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவே தெரிகிறது. இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது.

மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைமையின் கீழ் சுதந்திரமாக தமிழக அரசு செயல்படும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தற்போதைய சட்டமன்றத்தில் அதற்கான சாத்தியம் இல்லை. ஆகவே தான் மறுதேர்தல் நடத்த சொல்கிறோம். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இருவருமே ஊழல் பின்னணி உள்ளவர்கள்தான். தமிழகம் சீரழிந்ததற்கு இருவருமே காரணம்.

இந்த சூழலில் சட்டசபையை கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்ட இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து மக்களின் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்புக்கு செல்ல வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டு மக்கள் சந்தித்து வரும் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க முடியும், " என்றார்.

- செ.சல்மான்.
படம் : ஈ.ஜெ.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!