சொல்வீர்களா... சொல்ல மாட்டீங்களா..! ஆளுநரை கலாய்க்கும் விஜயசாந்தி

எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மெஜாரிட்டியில் இருக்கும் சசிகலாவை அழைக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்து கொண்டிருப்பது என்னவென்று புரியவில்லை என்று கூறிய நடிகை விஜயசாந்தி, குழப்பத்தில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு வாரத்தில் சொல்வீர்களா, பத்து நாளில் சொல்வீர்களா, ஒரு மாதத்தில் சொல்வீர்களா அல்லது சொல்ல மாட்டீங்களா என்று கலாய்த்தார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு முன்னாள் எம்பி நடிகை விஜயசாந்தி அளித்த பேட்டியில், "ஜெயலலிதா எப்போதும் ஒருவார்த்தை சொல்வார். எனக்கு பிறகு அதிமுக நூறு ஆண்டு இருக்கணும் என்று. அ.தி.மு.க ஒரு கட்டுப்பாடான கட்சி. மக்களுக்கு எத்தனையோ நன்மைகளை செய்துள்ள கட்சி அது. இன்று தமிழ்நாட்டின் அரசியலை பார்க்கும்போது ஒரு குழப்பத்தில் இருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சசிகலா முதலமைச்சராக வரனும் என்று ஒட்டுமொத்த எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தார்கள். கையெழுத்து போட்டுக் கொடுத்தார்கள். அப்போது, எம்எல்ஏக்கள், "இன்றைக்கு நிரந்தரமாக முதலமைச்சர் யாருமில்லை. கட்சியை காப்பாற்ற வேண்டும்; ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் சேர்க்க வேண்டும்; ஒரு நிலையான அரசு வேண்டும்" என்று சொன்னார்கள்.

இதனால் சசிகலா சம்மதம் தெரிவித்தார். அதன்பிறகு எம்எல்ஏக்கள் தெரிவித்த ஆதரவு கடிதத்தை கையில் வைத்துக் கொண்டு, ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க சசிகலா அனுமதி கேட்டார். அப்போது, ராஜ்பவனில் இருந்து என்ன சொன்னார்கள் என்றால், ஆளுநர் இல்லை, ஊட்டிக்கு சென்றிருக்கிறார்கள் என்றார்கள். இதனால், சசிகலா அந்த கடிதத்தை பேக்ஸ் பண்ணினார். அதற்கு பிறகு ஆளுநர் அதிக நேரம் எடுத்துக் கொண்டார். ஐந்து நாள்கள் கழித்து வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார். அதன் பிறகு சசிகலாவை அழைத்தார். அப்போது, சசிகலா ஆளுநரிடம், 130 எம்எல்ஏக்கள் ரெடியாக இருக்கிறோம். எல்லோரும் வருகிறோம் என்று கூறினார். அப்போது ஆளுநர், இல்லை, பத்துபேர் மட்டும் போதும் என்றார். 130 எம்எல்ஏக்கள் ரெடியாக இருக்கும்போது ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கலாம் அல்லவா. பத்து பேர்தான் வரனும் என்று ஏன் சொன்னார் என்று எங்களுக்கு தெரியாது.

பின்னர் சசிகலா பத்து பேருடன் ராஜ்பவனுக்கு சென்று ஆளுநரை சந்தித்து, இப்போது இருக்கிற சூழ்நிலை குறித்து தெளிவாக கூறினார். "130 பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். உங்கள் அபிப்பிராயத்தை சொல்லுங்கள்" என்றார். அந்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், பின்னர் சொல்வதாக கூறினார். சசிகலாவும் வந்துவிட்டார். அடுத்த நாள் ஆளுநர் என்ன சொல்வார் என்று ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்பார்த்தது. ஆனால் ஆளுநர் எதுவும் சொல்லவில்லை. அறிக்கையும் விடவில்லை. தமிழ்நாட்டை பார்த்தால் வித்தியாசமாக இருக்கிறது. எந்த பதிலும் சொல்லாமல் காலதாமதம் செய்து கொண்டிருப்பது என்னவென்று புரியவில்லை. எம்எல்ஏ ஆதரவு இல்லாத பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக அனுமதிப்பாரா.

இப்போது, தமிழ்நாடு குழப்பத்தில் இருக்கிறது. ஒரு வாரத்தில் சொல்வீர்களா, பத்து நாளில் சொல்வீர்களா, ஒரு மாதத்தில் சொல்வீர்களா அல்லது சொல்ல மாட்டீங்களா. நாங்கள் எதிர்பார்க்கிறது என்னென்னா, ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெளிவுப்படுத்த வேண்டும். "இப்படி நாங்கள் நினைக்கிறோம், பிராப்ளம் இருக்கு. இதனால் காலதாமதம் பண்ணுகிறோம்" என சொன்னா புரியும். இப்போ, ஏன் காலமாதப்படுத்துகிறார் என்றுதான் தெரியவில்லை. வெளியில் சில தீயசக்திகள், அதிமுகவை தூக்கி எறிய வேண்டும் நினைக்கின்றன. இதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். ஒரு நிலையான அரசு வர வேண்டும், சுதந்திரமான முதலமைச்சர் வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், தற்போது நிலையான அரசும் இல்லை, நிலையான முதலமைச்சரும் இல்லை. நாங்கள் ஆளுநரை கேட்டுக் கொள்வது என்னவென்றால், உறுதிக் கொடுங்க. தாமதப்படுத்தாதீங்க" என்று கூறினார்.

-சகாயராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!