பிறந்தநாள் நாயகர் தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் எப்படி...?

ஆளுநர்

டந்த ஏழாம் தேதி இரவிலிருந்து தமிழகத்தில் அடித்துவரும் அரசியல் புயலுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். இன்று பிறந்த நாள் காணும் அவரை நாம் வாழ்த்தி மகிழும் வேளையில், அவர் தமிழகத்துக்கு ஆற்றிய செயல்பாடுகள் என்னவென்பதை இங்கே காண்போம்...
  
தமிழகத்தில் ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம், கடந்த 2016 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்ததையடுத்து... 'அடுத்த தமிழக ஆளுநராக யாரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கப் போகிறார்' என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி, பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், 'மகாராஷ்டிர மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமிழகத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்' என்று அறிவிக்கப்பட்டது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வித்யாசாகர் ராவ், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர்... 1985 முதல் 1998 வரை பி.ஜே.பி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதன் பின்னர், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக பதவி வகித்தார். பிறகு, 2014-ல் மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு... தற்போது கூடுதலாக, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற வித்யாசாகர் ராவுக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சிகிச்சை செய்ய வெளிநாட்டு மருத்துவர்களும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழகம் வரவழைக்கப்பட்டனர். அவருடைய நிலை என்ன என்பதை தமிழகமே கேட்டுக்கேட்டு களைத்துப்போனது. அப்போலோ நிர்வாகமோ, யாரையும் உள்ளே அனுமதிக்கவிலை. நாட்கள் நகர நகர ஜெ-வைப் பற்றி பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கின. இதனையறிந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகம் விரைந்து முதல்வர் உடல்நலம் குறித்த அறிக்கைகளை வெளியிட்டார். அத்துடன், ஜெயலலிதா வகித்துவந்த துறையையும் கூடுதலாக ஓ.பி.எஸ் கவனித்துக்கொள்வார் என்று அறிவித்தார்.

முதல்வர் பன்னீர்செல்வம்

அதன்பிறகு, ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமாக சென்னை வந்த ஆளுநர், ஓ.பி.எஸ்ஸை... தமிழக முதல்வராக நள்ளிரவில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதன்பின், ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வராகத் தன் பணியைச் செய்து ஒப்புதல் அறிக்கையை ஆளுநருக்கு அனுப்பிவைத்தார் ஓ.பி.எஸ். அதன்பின் நடந்த சட்டசபைக் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றினார். அதுவே, தமிழக சட்டசபையில் அவர் முதலில் ஆற்றிய உரை. தமிழகத்துக்கு முறைப்படி ஆளுநர் இல்லாததால், குடியரசுத் தினத்தன்று முதல்வர் பன்னீர்செல்வம் தேசியக் கொடி ஏற்றிவைத்தார். குடியரசுத் தினத்தன்று ஆளுநர் இல்லாமல் முதல்வர், தேசியக் கொடி ஏற்றியது இதுவே முதல்முறை. 

பிறகு, டெல்லி பயணம் மேற்கொண்ட ஆளுநர், மும்பையிலேயே தங்கியிருந்தார். அந்தச் சமயத்தில் அ.தி.மு.க பொதுக்குழு அவசரமாகக் கூடி... கட்சி விதிகளுக்கு அப்பாற்பட்டு சசிகலா பொதுச் செயலாளாராக நியமிக்கப்பட்டார். அதற்குப் பின் தம் ஆளுகையால், தன்னை முதல்வராய் தேர்வு செய்யப்படுவதற்கான காய்களை கட்சி நிர்வாகிகள் மூலம் நகர்த்தினார். இதனையடுத்து, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் வித்யாசாகர் ராவும் அதை ஏற்றுக்கொண்டார். ஒரு நிகழ்ச்சிக்காக ஊட்டிக்கு வந்த ஆளுநர், சசிகலா முதல்வராக தீவிர ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில்... அதைக் கண்டும் காணாததுமாய் வந்தவேகத்திலேயே மீண்டும், டெல்லிக்கு பறந்துவிட்டார். சசிகலாவை முதல்வராகத் தேர்வு செய்வதற்கான தமிழக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்கள் ஆளுநரைச் சென்றடையவில்லை என்று அதற்குக் காரணமும் சொல்லப்பட்டது. அதன் பின்னர், மும்பைக்குத் திரும்பி தன் அலுவலக வேலைகளை பார்க்கத் தொடங்கினார் வித்யாசாகர் ராவ்.

சசிகலா

இந்தநிலையில் கடந்தவாரம் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியால் தமிழகமே தலைகீழாக மாறியிருக்கிறது. இதனால் தமிழகத்தில் பலவித மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதனையடுத்து, தமிழகம் வந்த ஆளுநரை ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்து மனுக் கொடுத்தனர். ஓ.பி.எஸ், ``என்னை மிரட்டி ராஜினாமா செய்யவைத்தனர். என் ராஜினாமாவை ரத்து செய்யுங்கள்`` என்று தன் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். சசிகலா, ``பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஆகவே, தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்'' என்று ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகக் களமிறங்கினார். இதுதவிர, ''நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும்'' என்று எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். 
    
இவ்வாறு பல தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வருவதால் என்ன செய்வதென்று அறியாமல் மிகுந்த குழப்பத்தில் உள்ளார் வித்யாசாகர் ராவ். தமிழக அரசியலின் நிலைமையும் தமிழ்நாட்டின் தலைமையும் இவர் எடுக்கும் முடிவில்தான் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழகமே இன்றைய பர்த்டே பேபியின் பதிலுக்குதான் காத்துக்கிடக்கிறது என்றே சொல்லலாம். 
    

- உ.சுதர்சன் காந்தி
(மாணவப் பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!