வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (13/02/2017)

கடைசி தொடர்பு:17:25 (13/02/2017)

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டும்- அன்புமணி

தமிழகத்தில் பரவும் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை ஏற்பாடு செய்யவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. கோவை மற்றும் திருச்சி மண்டலங்களில் தான் இந்த நோயால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த ஜனவரி 27-ம் தேதி தொடங்கி இன்று வரையிலான 18 நாட்களில் 20-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் 9 பேரும், திருச்சி அரசு மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் மன நிறைவளிப்பதாக அமையவில்லை. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சலால் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவற்றைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இப்போது பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அதற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தனிமை வார்டுகள் ஏற்படுத்தப்பட வில்லை. பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் டாமி ஃபுளு மாத்திரைகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று சிகிச்சை பெற வேண்டியிருப்பதால், அது சாத்தியமாகாதவர்கள் சிகிச்சை பெறாமலேயே உயிரிழக்கும் கொடுமையும் நடைபெறுகிறது. இத்தகைய நிலைக்காக அரசு வெட்கப்பட வேண்டும். பன்றிக்காய்ச்சலை குணப்படுத்துவதைவிட, அதுகுறித்த விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதுதான் மிகவும் முக்கியமாகும். இவற்றின் மூலம் பன்றிக்காய்ச்சல் நோயால் தமிழகத்தில் இனி எவரும் உயிரிழக்க மாட்டார்கள் என்ற நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க