இதுவரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபலங்கள் யார் யார்? #OPSVsSasikala

பன்னீர்செலவம்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு... அந்தக் கட்சியில், பலவித மாற்றங்கள்  நிகழ்ந்துவரும் வேளையில், கடந்த ஏழாம் தேதி இரவு, முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டிக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் புயல் வீசத் தொடங்கியது. அதனால், ஓ.பி.எஸ்., சசிகலா என அ.தி.மு.க-வில்  இரண்டு அணிகள் பிரிந்தன. இதன் காரணமாக பன்னீர்செல்வத்துக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதுதவிர, கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் அவருக்குக் கிடைத்துவருகிறது. இன்னும் சிலர், அவர் அணியில் இணையும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இதுதவிர்த்து, திரை பிரபலங்களின் ஆதரவும் அவருக்கு அதிகமாக உள்ளது. அப்படி, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த திரை பிரபலங்களின் கருத்துகள் இதோ...

கமல்ஹாசன்: ''நான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நண்பனும் அல்ல... எதிரியும் அல்ல. அவர், திறமையற்றவர் அல்ல. ஜல்லிக்கட்டு விஷயத்தில்... அவர் திறமையாகச் செயல்பட்டு வெற்றி கண்டுள்ளார். அவர், மீண்டும் முதல்வராகி ஆட்சி நடத்த வேண்டும். ஜனநாயக ரீதியான என்னுடைய விருப்பமும் இதுதான். சசிகலாவின் தகுதி பற்றி எனக்குத் தெரியாது. அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்தது இல்லை. ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் உடன் இருந்தார் என்பதை அரசியல் தகுதியாகக் கருத முடியாது. சட்டத்துக்கு முன்பாக அனைவரும் சமம்.''

எஸ்.வி.சேகர்:  ''அரசியலைப் பொறுத்தவரை எப்போதுமே எதிர்ப்பு அரசியலுக்குத்தான் சக்தி அதிகம். அந்த வகையில், சசிகலாவுக்கு எதிரான மனநிலைதான் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மக்கள் மத்தியில் இருக்கிறது. இது தானாகவே ஓ.பி.எஸ்ஸுக்கான ஆதரவாக மாறிவிடும். ஜெ. சமாதியில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, 'இதுவரை நடந்தவை' என்று ஓ.பி.எஸ் அறிவித்தது எல்லாமே அரசியலின் உச்சபட்ச சாணக்கியத்தனம். இனிமேல், இதற்கு எதிராக யார் எந்த அஸ்திரத்தை வீசினாலும் அது முனை மழுங்கிப்போன விஷயமாகத்தான் பார்க்கப்படும்.'' 

ராமராஜன்: ‘'ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பி.எஸ். சமூக வலைதளங்களின் கதாநாயகன் ஓ.பி.எஸ். அண்ணா மூன்றெழுத்து; எம்.ஜி.ஆர் மூன்றெழுத்து; அம்மா மூன்றெழுத்து. இந்த மூவரின் பெருமையை நிலைநாட்டும் ஓ.பி.எஸ் மூன்றெழுத்துத்தான்.''

பன்னீர்செல்வம்

விசு: ''இந்த மக்களோட தலையெழுத்து 135 (எம்.எல்.ஏ-க்களை) பேர்கிட்ட இருக்கு. நான் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன். எங்க வாழ்க்கை உங்ககிட்ட இருக்கு. ப்ளீஸ்... ப்ளீஸ். சப்போர்ட் மிஸ்டர் ஓ.பி.எஸ் அண்ட் டெஃபனட்லி நாட் சசிகலா." 

பாக்யராஜ்: ''எது எப்படி இருந்தாலும் மக்கள் ஆதரவு என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் இருக்கிறது. அதனால், கட்டாயம் அவர் ஜெயிப்பார்.  ஓ.பி.எஸ்-ஸைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியினர்கூட அவரது அமைதியான சுபாவத்தை மதிக்கக்கூடியவர்கள். ஆட்சிப் பொறுப்பிலும் ஜல்லிக்கட்டு, வர்தா புயல்... என்று ஒவ்வொரு விஷயத்திலும் அவரால் என்னென்ன செய்யமுடியுமோ, அதனையெல்லாம் செய்துமுடித்தார்.''

சீமான்: ''முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் போன்று சசிகலாவால் திறம்பட பணியாற்ற முடியாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைப்பதாக ஓ.பி.எஸ் கூறியிருப்பது காலம் தாழ்ந்த ஒன்று.''

கங்கை அமரன்: ''வர்தா புயல், ஜல்லிக்கட்டு விவகாரம் போன்ற பிரச்னைகளில் ஓ.பி.எஸ் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் எனக்குப் பிடித்துள்ளன. சசிகலா மீண்டும் பணம் சம்பாதிக்கத்தான் வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவருக்கு, மக்கள் செல்வாக்கு இல்லை. என்னையும் மிரட்டிக் கையெழுத்து வாங்கினார்கள். அதேபோன்று பன்னீர்செல்வத்தையும் மிரட்டித்தான் கையெழுத்து வாங்கியுள்ளார்கள். அவரை ஒடுக்கிவைக்கப் பார்த்தார்கள். அவரும், பொறுமையாகத்தான் இருந்தார். எத்தனை நாள் பொறுமையாக இருப்பார். வெடித்துவிட்டார்'' என்றார்.

- ஜெ.பிரகாஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!