வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (14/02/2017)

கடைசி தொடர்பு:12:10 (14/02/2017)

முதல்வர் பட்டியலில் மூன்று பெயர்! கூவத்தூரில் அடுத்த அத்தியாயம்..!.! #OpsVsSasikala #DACase #JudgementDay

சசிகலா

சிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு  உச்சநீதிமன்றத்தில் நாளை வழங்கப்படுகிறது.  தமிழக  முதல்வராகும் எண்ணத்தில் இருக்கும் சசிகலாவுக்கும், அவரை நம்பிக் கொண்டிருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் இந்தத் தீர்ப்பின் முடிவைப் பொறுத்தே எதிர்காலம் அமைய இருக்கிறது...!

தமிழக அரசியல் பரபரப்பைக் கூட்டும் விதமாக எதிர்க்கட்சியான தி.மு.க-வும்  அவசர, அவசரமாக கட்சியின்  உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது. 

கடந்த 5-ம் தேதி, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா பெயரை, முன்மொழிந்தார் ஓ.பன்னீர்செல்வம். கூடவே, சசிகலா முதல்வராவதற்கு ஏதுவாக  தன்னுடைய முதல்வர் பதவியையும் ராஜினாமா  செய்தார்.

சசிகலா தலைமையிலான புதிய தமிழக அரசை ஆட்சியில் அமர்த்த உரிமை கோரும் மனுவும் ஆளுநர் மாளிகையில் கொடுக்கப்பட்டது. சசிகலா தரப்பில் ஐந்தாம் தேதி கொடுக்கப்பட்ட அந்த மனு மீதான பதில் என்னவென்று தெரியாமலே,  13--ம் தேதியும் முடிந்துவிட்டது.
சசிகலாவை முதல்வராக முன் மொழிந்த  பன்னீர்செல்வமே, 'கொடுத்த ராஜினாமாவை திரும்பப் பெறுகிறேன்' என்று அறிவித்து முதல்வர் ரேஸில் குதிக்க.... தமிழக அரசியலின் போக்கே தலைகீழாக மாறிவிட்டது.

கைக்கெட்டும் தூரத்தில் இருந்த முதல்வர் பதவி, திடீரென்று கியாஸ் பலூன் போல் உச்சத்தில் போய்நின்றதால், டென்சனாகிப்போனார் சசிகலா.

இதையடுத்து, 'அ.தி.மு.க-வின் அனைத்து எம்.எல்.ஏ-க்கள் ஆதரவும் தனக்கு இருப்பதாக' சசிகலாவும், 'நிரூபிக்க வேண்டிய இடத்தில், என் பெரும்பான்மையை நிரூபிப்பேன்' என்று காபந்து முதல்வரான பன்னீர்செல்வமும் மாறி மாறி சொல்லி வருவது  மக்களை குழம்ப வைத்திருக்கிறது. ஆனால், முதல்வர் பதவிக்காகக் காத்திருக்கும் சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மட்டும் தெம்பில் குறைவில்லை.

ஒரேநாளில் பல எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து சால்வை அணிவிக்கிற காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. ஓ.பி.எஸ் ஏரியாவில்  கைத்தட்டல், மாலை 'சவுண்ட்'  எழுந்தாலே, போயஸ் கார்டனில், 'சின்னம்மா வாழ்க' என்றக் கோஷமும்  அதே அளவுக்கு எழுகிறது.

 'கோல்டன் -பே' ஹோட்டலில்  அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு எம்.எல்.ஏ-க்களிடம்  ஆறுதல் மீட்டிங் போட்டு அவர்களுக்கு  நம்பிக்கை அளித்த பின் சென்னை திரும்புகிறார் சசிகலா. 

 

கோடன் பே

காபந்து முதல்வரான ஓ.பி.எஸ்., கடந்த 12-ம் தேதி, 'நாளை கோட்டைக்குப் போய்  அலுவலைப் பார்க்க இருக்கிறேன்' என்று சொன்னதும், அதேபோல் அடுத்தநாள்   கோட்டைக்கு வந்ததும் சசிகலா தரப்புக்கு கடுமையான சவாலாகவே அமைந்துள்ளது.
 என்னதான் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப் பட்டிருந்தாலும், சுற்றுச்சூழல், உணவு, குடிநீர் என்று அவர்களுக்கு கிடைக்கும் அனைத்தும்  புதிது...

வெளியே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளமுடியாத ஒரு  சூழ்நிலையும் இதில் சேர்ந்துகொண்டால் என்ன ஆகும்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் பலரும்  இப்படித்தான் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒவ்வாமை, ரத்த அழுத்தம், மயக்கம், சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளால் அவர்கள் மனதளவில் சோர்ந்துவிடக் கூடாதே  என்று சசிகலா தரப்பில் பதற்றம் நிலவுகிறது.  ஆறு நாட்களாய் அடைந்து கிடக்கும் எம்.எல்.ஏ-க்களை நேரில் போய்ப் பார்த்து சசிகலா பேசி வருகிறார்.

மூன்றாவது முறை ஆறுதல் சொல்லப் போன போதுதான்  எம்.எல்.ஏ-க்கள் 15 பேருக்கு  உடல்நலக்குறைவு என்ற தகவல் சசிகலாவுக்கு கிடைத்திருக்கிறது. மருத்துவக் குழுவினரும், ஆம்புலன்சும் பின்னால் வர, கூவத்தூருக்கு முன்னே சென்றிருக்கிறார் சசிகலா. 
ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கொடுத்த மனுவும், கூவத்தூர் விடுதியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களும்  ஒரே இடத்தில் நகரமுடியாமல் இருக்கும் நிலையே தொடர்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், நேற்று கூவத்தூர் சென்ற சசிகலா அங்கேயே தங்கியதாக தகவலும் வெளியாகி இருக்கிறது. எப்போதையும் விட அதிகளவில் தமிழகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் தரப்பில் பேசும்போது, "அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜன், 'முதல்வரின் கையை எடுப்பேன்' என்று மிரட்டுகிறார்.  'எப்படி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தெரியும்' என்று சசிகலா சொல்கிறார்.... இந்தப் பேச்சுக்கள்தான் இப்படி பாதுகாப்பு  போடும்படி வைத்துள்ளது." என்கிறார்கள்.

கூவத்தூரில் தங்கியுள்ள எம்.எல்.ஏ-க்களில் ஒருசிலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இப்படிப் பேசியுள்ளனர்... " நாளை தீர்ப்பு எப்படி வந்தாலும் நாங்கள்  சின்னம்மா பின்னால்தான் நிற்போம். சின்னம்மா கைகாட்டும்  எங்களில் சீனியரான ஒருவர் முதல்வர் ஆவார். ஓ.பி.எஸ்-ஸுக்கு மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பை அளிக்க மாட்டோம்." என்றே கூறியுள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமியின் முகத்தில் அளவு கடந்த தேஜஸ் தெரிகிறது. செங்கோட்டையனும், ஜெயகுமாரும் கொஞ்சம் தேஜஸோடு இருக்கிறார்கள். என்ன நடக்கவிருக்கிறது என்று பார்க்கலாம்...!

- ந.பா.சேதுராமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்