வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (14/02/2017)

கடைசி தொடர்பு:14:53 (14/02/2017)

'ஒற்றுமையாக இருப்போம்!' எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உருகிய சசிகலா  

கூவத்தூரில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க. சட்டப் பேரவைக் குழுத் தலைவராக அறிவித்துள்ளார். அப்போது ஜெயலலிதாவின் ஆட்சி, கனவை நிறைவேற்ற அனைவரும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்று உருக்கமாக பேசியுள்ளார் சசிகலா. 

 அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது சசிகலா தரப்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் பன்னீர்செல்வம் தரப்பினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சசிகலா, அங்குள்ள எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அடுத்த முதல்வர் யார், கட்சியை வழிநடத்துபவர் யார் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது. 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். அப்போது யாரை அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யலாம் என்று கேட்டுள்ளார். செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரண்டு பெயர்களை கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சில நிமிடம் அமைதியாக இருந்த சசிகலா, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லி உள்ளார். அடுத்து உடனடியாக கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. 
கூட்டத்துக்கு வந்த சசிகலாவைப் பார்த்த பெண் எம்.எல்.ஏ.க்கள் கண்ணீர் விட்டு கதறியுள்ளனர். அதைப்பார்த்த சசிகலாவின் கண்களும் கலங்கி உள்ளது. இதன்பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சசிகலா, எம்.எல்.ஏ.க்களிடம் 20 நிமிடம் பேசி உள்ளார்.  அவர் பேசுகையில், "தற்போதைய அரசியல் சூழ்நிலை அனைவருக்கும் தெரியும். இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அம்மாவின் கனவை நிறைவேற்றவும், அ.தி.மு.க. ஆட்சி தொடரவும் அனைவரும் அமைதியாக இருங்கள். தற்போது புதிய சட்டப்பேரவை குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுப்போம் என்றார். அதை எம்.எல்.ஏ.க்கள் ஆமோதித்துள்ளனர். 

கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவர் கூறுகையில், "செங்கோட்டையனைத்தான் முதலில் தேர்வு செய்வதாக இருந்தது. அவருக்கு அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமியை சின்னம்மா தேர்வு செய்துள்ளார். ஜெயலலிதா மறைந்த போதும் கூட முதல்வர் ரேஸில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் பெயர் இருந்தது. மத்திய அரசின் உறுதுணையால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தற்போது சின்னம்மாவுக்கு துரோகம் செய்து விட்டார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல. அவர் சின்னம்மாவின் விசுவாசி. எடப்பாடி பழனிச்சாமியின் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கு கட்சிப் பதவி மற்றும் அமைச்சரவையிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது" என்றார். 

எஸ்.மகேஷ்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்