எப்படி தேர்வானார் எடப்பாடி பழனிச்சாமி? - சசிகலாவின் புதிய கணக்கு #OpsVsSasikala #DACase

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா தேர்வு செய்ததற்குப் பின்னணியில் பல அரசியல் உள்விவகாரங்கள் மறைந்துள்ளன. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், மன்னார்குடி குடும்பத்தினருக்கும் ஏற்கெனவே நெருக்கம் இருப்பதை இது வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வருவதற்கு முன்பே சசிகலாவும், மன்னார்குடி குடும்பத்தினரும் அவரது அறையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த முடிவை கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா தெரிவித்தபோது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் மட்டும் சசிகலா தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. இதன்பிறகு அவர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். 
தீர்ப்பு வெளியானதும் ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களின் அரசியல் வழிகாட்டியிடம் ஆலோசனை நடத்தி உள்ளனர். 10 முதல் 15 எம்.எல்.ஏ.க்கள் ஒரு குழுவாக செயல்பட்டு கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது அடுத்த அ.தி.மு.க. சட்டப்பேரவைக் குழுத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு சசிகலாவின் தீவிர விசுவாசிகள் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரைச் சொல்லி உள்ளனர். இதன்பிறகே எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்” என்றார். 

எடப்பாடி பழனிச்சாமிக்கும், மன்னார்குடி குடும்பத்தினருக்கும் நீண்ட காலமாக நெருக்கம் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது,” பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்திய மன்னார்குடி குடும்பத்தினரே எடப்பாடி பழனிச்சாமியின் விசுவாசத்தை ஜெயலலிதாவிடம் தெரிவித்துள்ளனர். பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் செயல்பாடு ஆகியவை மன்னார்குடி குடும்பத்தினருக்குப் பிடிக்காமல் போனது. அப்போது அடுத்த விசுவாசி என்ற பட்டியலில் இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன்பிறகு அனைத்து கட்சியின் உள்விவகாரங்களும் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. கரூர் அன்புநாதனிடம் நடத்தப்பட்ட சோதனைக்குப்பிறகு கட்சியில் பழனிச்சாமியின் கை ஓங்கியது.

கட்சிக்கு வருவாய் வரும் அனைத்து விவகாரங்களையும் எடப்பாடி பழனிச்சாமியே கவனித்து வந்தார். இதனால்தான் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க சசிகலா விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த வாய்ப்பைக் கொடுக்க செங்கோட்டையன் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது செங்கோட்டையனிடமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடமும் மன்னார்குடி குடும்பம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்ட பிறகே எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் வருகையை, அவரது நெருங்கிய உறவினரான அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர். இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பும் நீறுபூத்த நெருப்பாக எம்.எல்.ஏ.க்கள் மனதில் இருக்கிறது” என்றனர். 

- எஸ்.மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!