வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (14/02/2017)

கடைசி தொடர்பு:08:39 (15/02/2017)

'தமிழக முதல்வர் ஆவாரா எடப்பாடி பழனிச்சாமி?!' - ஆளுநர் அலுவலகத்தின் அதிர்ச்சி

சசிகலா-ஆளுநர் வித்யாசாகர் ராவ்

.தி.மு.கவின் சட்டசபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ' பன்னீர்செல்வத்தின் அதிகாரமும் கார்டன் வட்டாரத்தின் ஈகோ பாலிடிக்ஸும் முடிவுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. ஆட்சிக் கலைப்பை நோக்கித் தமிழக அரசு சென்று கொண்டிருக்கிறது' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 

' சசிகலாவா? பன்னீர்செல்வமா?' என ஏழு நாட்களாக தமிழக அரசியலைச் சுற்றிச் சுழன்ற புயல், இன்று வலுவிழந்துவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைவாசத்தை எதிர்கொள்ள இருக்கிறார் சசிகலா. ' என்னுடைய எம்.எல்.ஏக்களை நான் பார்க்கச் செல்கிறேன்' என அறிவித்துவிட்டு, கூவத்தூர் செல்ல இருக்கிறார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். இதனால் அசாதாரண சூழல் ஏற்படலாம் என்பதால், 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமி. ' அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா கட்டுப்பாட்டில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் அனைவரும், ஆளுநர் மாளிகையை நோக்கிச் செல்வார்கள்'  என்ற தகவல் பரவியதால், ஆளுநரை சந்திக்க அமைச்சர் எடப்பாடிக்கு நேரம் கிடைத்திருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி" எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆறு ஆண்டுகளாக அமைச்சரவையில் இருக்கிறார். செங்கோட்டையனை முன்னிறுத்தும் முடிவை எம்.எல்.ஏக்களில் பலர் விரும்பவில்லை. ' ஜெயலலிதாவால் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார். அவரை முன்னிறுத்தினால் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா?' என்ற ஒற்றை வாதத்தை முன்வைத்து, முன் வரிசைக்கு வந்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டும் சேலம், கூட்டுறவு வங்கிகளில் நடத்தப்பட்ட சோதனையும் எடப்பாடியை முன்வைத்து நடந்ததுதான். இப்போது அவர் முன்னிறுத்தப்படுவதை ஆளும்கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை. வரும் நாட்களில் சேகர் ரெட்டியின் வாக்குமூலம் வெளியில் வந்தாலும் ஆச்சரியமில்லை. கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் மற்றும் நகை குறித்து வருமான வரித்துறை ஆய்வு நடத்தி வருகிறது. ஒவ்வொரு எம்.எல்.ஏவின் குடும்பத்துக்கும் ஒன்றரை கிலோ வரையில் தங்கம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. அவர்களின் வீடுகளில் சோதனை நடப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

" முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 89-ம் ஆண்டில் கை கொடுத்தது கொங்கு மண்டலம்தான். 2016 சட்டமன்றத் தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் கிடைத்த எம்.எல்.ஏக்கள் பலம்தான், ஜெயலலிதாவை அரியணையில் அமர்த்தியது. இதை மனதில் வைத்துக் கொண்டுதான், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் சசிகலா. இந்த வியூகம் ஆட்சியைத் தக்க வைக்குமா என்பது கேள்விக்குறிதான். பன்னீர்செல்வத்தின் கரத்தை வலுப்படுத்த மேலும் பல எம்.எல்.ஏக்கள் வர உள்ளனர். ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தைக் கொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம். டெல்டா மாவட்டங்களில் உள்ள சசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏக்களும் கொங்கு மண்டலத்தில் அமைச்சர்களின் கைப்பிடிக்குள் உள்ள எம்.எல்.ஏக்களும் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் மனநிலையில் இல்லை. எப்படிப் பார்த்தாலும், முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பில்லை. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும். ' நம்மை வீழ்த்திய பன்னீருக்கு நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும். நாம் வராவிட்டாலும் பரவாயில்லை. அவர் எந்தக் காலத்திலும் ஆட்சி அமைத்துவிடக் கூடாது' என்பதில் சசிகலா உறவினர்கள் உறுதியாக உள்ளனர். இப்படியொரு சூழலில் தி.மு.கவும் ஆட்சி அமைக்கவே விரும்புகிறது. ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு கொடுக்கும் மனநிலையில் ஸ்டாலின் இல்லை. ' சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு வாய்ப்பு கிடைக்குமா?' என்ற கேள்விக்கு, இன்று மாலைக்குள் விடை தெரிந்துவிடும். பேரவையில் அவரால் பலத்தை நிரூபிக்க முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். வாக்கெடுப்பில் அவர் தோற்றுவிட்டால், ஆட்சிக் கலைப்பைத் தவிர்க்க முடியாது" என்றார் விரிவாக. 

" எம்.எல்.ஏக்கள் வெளியில் வந்துவிட்டால், அவர்களை தன்பக்கம் இழுப்பதற்கான வேலைகளைத் துரிதப்படுத்தியிருக்கிறார் பன்னீர்செல்வம். ' ஆட்சி கலைந்துவிட்டால், தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது வரும். அம்மா ஆட்சி தொடர நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்' என வேண்டுகோள் வைத்து வருகிறார். கொங்கு மண்டலத்தில் இருந்து 2 எம்.எல்.ஏக்களை தன்பக்கம் சாய்த்துவிட்டார். இதையே காரணமாக வைத்து, 'டெல்டா மாவட்டங்களில் இருந்தும் சிலர் வந்துவிட்டால், பெரும்பான்மை எம்.எல்.ஏக்களும் தன்பக்கம் வந்துவிடுவார்கள்' என நம்புகிறார். 'ஆட்சி அதிகாரம் கைக்கு வந்துவிட்டால், கட்சி அதிகாரத்தைப் பெறுவதில் சிரமம் இருக்காது' என்பது எங்களுடைய எண்ணம். இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து விவகாரங்களும் முடிவுக்கு வந்துவிடும். போயஸ் கார்டனை நினைவுச் சின்னமாக்கும் பணிகளும் வேகம் பெறும்" என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். 

- ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்