எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆளுநரின் விசாரணை!  - அதிர்ச்சியில் உறைந்த சசிகலா தரப்பு   #VikatanExclusive  #OPSvsSasikala | Sasikala in shock as governor questions Edappadi Palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (14/02/2017)

கடைசி தொடர்பு:08:39 (15/02/2017)

எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆளுநரின் விசாரணை!  - அதிர்ச்சியில் உறைந்த சசிகலா தரப்பு   #VikatanExclusive  #OPSvsSasikala

அ.தி.மு.க. சட்டசபைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதும், உடனடியாக அவர், இன்று மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கச் சென்றார். அப்போது அவரிடம் ஆளுநர், எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்கு கடைசி வரை ஆதரவு அளிப்பார்கள் என்ற கேள்வியை கேட்டபோது சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

எடப்பாடி பழனிச்சாமி

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் அவரின் முதல்வர் ஆசை கனவாகி விட்டது. உடனடியாக கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் சசிகலா ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அ.தி.மு.க.வின் புதிய சட்டசபைத் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அவர், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தைக் கொண்டு இன்று மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அப்போது ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமைக் கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆளுநர் சில கேள்விகளைக் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இதுகுறித்து ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், "ஏற்கெனவே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநரை சந்தித்துப் பேசினார். அடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவும் ஆளுநரைச் சந்தித்து ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலைக் கொடுத்தார். 
ஆளுநரைச் பன்னீர்செல்வம் சந்தித்தபோது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கவும் குறிப்பிட்டு இருந்தார்.  சொத்துக் குவிப்பு வழக்கு, எம்.எல்.ஏ.க்களின் மனநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் ஆளுநர், ஆட்சி அமைக்க யாரையும் அழைக்கவில்லை.  இந்த சூழ்நிலையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்கச் சொல்லுங்கள் என்று ஆளுநருக்கு தகவல் வந்தது.

 
 தற்போதுள்ள சூழ்நிலையில் சசிகலா, குற்றவாளி என்று தீர்ப்பு வந்துள்ளதால் மீண்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்து ஆளுநரைச் சந்திக்க அனுமதி கேட்கப்பட்டது. அப்போது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலும் பேக்ஸ் மூலம் ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஏற்கெனவே சசிகலா கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும், எடப்பாடி பழனிச்சாமி கொடுத்தப் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.


மேலும், நீங்கள் கொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் கடைசி வரை உங்களுக்கு ஆதரவு அளிப்பார்களா என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி கேட்கப்பட்டதாம். இதற்கு உறுதியாக ஆதரவளிப்பார்கள் என்று டி.டி.வி. தினகரன் பதிலளித்துள்ளார். இதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்ற அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் உடனடியாக ஆளுநர் அலுவலகத்திலிருந்து வெளியேறினர். "என்றனர்.


அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறுகையில், "எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு பிரச்னையைக் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் ஆட்சி அமைக்க எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதன்பிறகும் ஆளுநர் தரப்பிலிருந்து காலதாமத்தப்படுத்தப்பட்டால் சட்டரீதியாக இந்தப்பிரச்னையை எதிர்கொள்ளவும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர். 


எடப்பாடி பழனிச்சாமியிடன் சென்ற அமைச்சர் ஒருவர் கூறுகையில், "சின்னம்மா கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பட்டியலில் உள்ள எண்ணிக்கையிலும்  தற்போது கொடுக்கப்பட்ட ஆதரவு பட்டியலில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையிலும் வித்தியாசம் உள்ளது. ஏனெனில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தின்போது எங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் சிலர் பன்னீர்செல்வம் அணிக்குத் தாவி உள்ளனர். இதனால் அவர்களை சின்னம்மா கட்சியிலிருந்தே நீக்கம் செய்து விட்டார். அவர்களைத் தவிர்த்து கடைசி வரை எங்களை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை மட்டுமே கொடுத்துள்ளோம். எங்களுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.க்களை விட கூடுதலாகவே ஆதரவு  இருக்கிறது" என்றார். 


'எத்தனை பெயர் ஆதரித்துள்ளனர்' என்று அவரிடம் கேட்டதற்கு அமைச்சர் பதில் சொல்ல மறுத்து விட்டார்.

 
எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்த நேரத்தில் கூவாத்தூரில் தங்கி இருக்கும் சசிகலா, டி.வி. மூலம் அந்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆளுநர் அலுவலகத்திலிருந்து வெளியேறிய டி.டி.வி.தினகரன், ஆளுநர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகளை அப்படியே ஒப்பித்துள்ளார். அதையெல்லாம் கேட்டபிறகு கூவாத்தூரில் மீண்டும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் சசிகலா ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையில் கூவாத்தூர் ரிசார்ட்டிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றும் முயற்சியில் போலீஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'ரிசார்ட்டுக்குள் சசிகலா இருப்பதால் போலீஸார் தயக்கம் காட்டுகின்றனர். ஆளுநர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் மட்டுமே ரிசார்ட்டுக்குள் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற முடியும்' என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரிசார்ட்டுக்குள் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற வாய்ப்புள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுநர் சந்திப்பைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள மைத்ரேயன் எம்.பி., மனோஜ்பாண்டியனும் இன்று இரவு 7 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துவிட்டு சென்றார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியவர்களின் தரப்பிலிருந்து ஆளுநரைச் சந்திப்பது அடுத்தக்கட்ட நகர்வை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 - எஸ்.மகேஷ் 
 


டிரெண்டிங் @ விகடன்