வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (14/02/2017)

கடைசி தொடர்பு:08:38 (15/02/2017)

சிறை சீருடை, சிகிச்சை, விடுதலைக்குப் பின் அரசியல்...! - சசிகலாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? #DACase #VikatanExclusive

சசிகலா

மிழக அரசியலின் பரப்பரப்பான சூழலில் இன்னும் கொஞ்சம் வேகத்தைத் தூவியிருக்கிறது சசிகலா உள்ளிட்டோர் மீதான தீர்ப்பு. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை என்று அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதன் காரணமாக சசிகலா தண்டனை முடிந்த பிறகான ஆறு ஆண்டுகள் பதவிக்கு வரமுடியாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதால், இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், சசிகலாவின் அரசியல் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, உடல் நிலை உள்ளிட்டவற்றில் இந்தத் தீர்ப்பு என்னவிதமான மாற்றங்களைக் கொண்டுவரும் என வழக்கறிஞர், மருத்துவர், அரசியல் பிரமுகர்களின் கருத்துகள் இதோ...

சிறைக்குள்ளே. சுதாராமலிங்கம்- சசிகலாவைப் பற்றி..

இனி வரும் நான்கு ஆண்டுகள் அவரது சிறை வாழ்க்கை குறித்து வழக்கறிஞர் சுதாராமலிங்கம் கூறுகையில், ‘‘ஒருவர் வழக்கு விசாரணைக் கைதியாக இருக்கும்போது, ஒருசில சலுகைகளை அனுபவிக்கின்றனர். கைதிக்கான சீருடைக்குப் பதிலாக தங்களின் இயல்பான உடையில் இருக்கலாம். A கிளாஸ், B கிளாஸ் என விசாரணைக் கைதியின் தன்மைக்கு ஏற்ப சிறையில் வசதிகள் வழங்கப்படுகிறது. ஆனால், ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு எந்தச் சலுகையும் வழங்கப்படுவதில்லை. மற்ற கைதிகளைப் போல சிறைக்கான சீருடையில்தான் இருக்க வேண்டும். மற்ற கைதிகளுக்கு என்ன செளகரியம் உள்ளதோ, அது சசிகலாவுக்கும் இருக்கும். கைதிகளுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்போது அதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சைகள் சிறையில் வழங்கப்படும். அவர் மற்ற கைதிகளைப் போலவே சமமாக நடத்தப்படுவார்" என்றார்.

உடல் நிலை எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள்...

சிறை வாழ்க்கையை சசிகலாவின் உடல்நிலை எதிர்கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து சென்னையைச் சேர்ந்த மருத்துவர் விஜயா கணேஷ், ‘சசிகலாவுக்கு சிறுநீரகம் பாதிப்பு, நீரிழிவு குறைபாடு, பிரஷர் போன்ற உடல் பிரச்னைகள் இருக்கின்றன. இதற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் விஜயா கணேஷ்-சசிகலாவைப் பற்றி...எடுத்துக்கொள்வதோடு, சரியான உணவு மற்றும் தேவையான உடற்பயிற்சியும் தேவை. சீரான இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைச் செய்துகொள்வதும் அவசியம். மிக முக்கியமாக மனஅழுத்தம் இல்லாத நிலை வேண்டும். சிறையில் இந்த வசதிகள், எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியே. சசிகலாவுக்கு ஏற்ற வகையில் உப்பு குறைவாக, சர்க்கரை இல்லாத உணவு கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. சரியான நேரத்தில் புரோட்டீன், கார்போஹைட்ரேட் சரியான அளவிலான உணவைச் சாப்பிட வேண்டும். சிறையில் அதிகளவில் அரிசி சாதம்தான் கொடுப்பார்கள். அந்த உணவில் கார்போஹைட்ரேட்தான் அதிகளவில் கிடைக்கும். மனஅழுத்தம், தூக்கமின்மை, மாறுபடும் சிகிச்சையின் தன்மை உள்ளிட்டவை சசிகலாவின் உடல்நிலையை மேலும் பாதிக்கக்கூடும். சர்க்கரை அளவு அதிகரிப்பு என்பது உடலின் அனைத்துப் பாகங்களையும் பாதிக்கும். இவருக்கு கிட்னி பாதிப்பு இருக்கும்பட்சத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கிட்னியின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும். அப்படிப் பாதித்தால், மாதத்துக்கு ஒருமுறையாவது டயாலிசிஸ் செய்யவேண்டியதிருக்கும். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் சசிகலாவின் உடல்நிலைக்கேற்ற முறையான உணவு, சிகிச்சை முறைகள் கிடைக்காவிட்டால், இப்போது போல சுறுசுறுப்பாக சசிகலா இயங்க முடியுமா என்பது சந்தேகமே. வயது மூப்பின் காரணமாக எலும்புகளிலும் தேய்மானம் ஏற்படும். குறிப்பாக, தண்டுவடம், கால் மூட்டு, கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும். சுத்தமான, சுகாதாரமான உணவு, தண்ணீர், தனக்கேற்ற மருத்துவர் என சசிகலா இப்போது இருக்கும் சூழலில் இருந்து சிறை வாழ்க்கைக்குப் பழகுவது எளிதானதல்ல" என்றார்.

மக்கள் மனதில் என்ன மாற்றம்!

இந்தத் தீர்ப்பு தமிழக மக்கள் மனதிலும் அரசியல் சூழலிலும் என்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாலபாரதியிடம் கேட்டபோது, "கடந்த மற்றும் தற்போதைய காலகட்டத்தின் ஏராளமான வழக்குகள், நீதிமன்ற தீர்ப்புக்கே உட்படுத்தப்படாமல் இருக்கின்றன. இந்தச் சூழல், 'நீதிமன்றங்களும் விலை போகக்கூடியதுதான்' என்ற எண்ணத்தை சாமானிய மக்கள் மனங்களில் எழுப்பின. ஆணாதிக்க அரசியலில், பெண்கள் தலைமைப் பதவிக்கு வருவதே அபூர்வம். அது தெரிந்தும் தங்களுக்கு மக்கள் கொடுத்துள்ள மிகப்பெரிய பொறுப்பில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடம்கொடுப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தத் தீர்ப்பு, அதிமுக கட்சியைக் கட்டாயம் பாதிக்கும். அக்கட்சியில் இருக்கும்பாலபாரதி-சசிகலாவைப் பற்றி... உண்மையான தொண்டர்களின் மனநிலையிலும் இத்தீர்ப்பு ஒரு நல்ல மாறுதலை கொண்டுவரும். தற்போதே, அதிமுக பலவீனம் அடைந்துள்ளது உண்மை. அதிமுக கட்சியை மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டுசென்ற ஜெயலலிதா மறைந்துவிட்டாலும், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்பது, ஜெயலலிதாவுக்கும் சேர்த்துதான். அதனால், ஜெயலலிதா, சசிகலா இருவர் மீதும் மக்கள் அவநம்பிக்கை கொள்ள நேரலாம். இதனால், ஓபிஎஸ் அணிக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களும், தொண்டர்களும் சென்றுவிடலாம். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா அணிக்குச் சென்ற அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும், தற்போது ஓபிஎஸ் அணிக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. சசிகலா சிறைக்குச் செல்வதால், அவரது அரசியல் வாழ்க்கை இன்னும் கடும் சிக்கல்களுக்கு உள்ளாகும். சிறைவாசம் முடிந்து வெளியே வந்தபின், மக்களின் எதிர்ப்பு மனநிலையை மாற்றுவது, கட்சித் தொண்டர்களை தன் பக்கம் தொடர்ந்து தக்கவைப்பது, அரசியல் பணியில் தன் உடல்நிலை ஒத்துழைக்கும் வகையில் இருக்குமா போன்ற அடுக்கடுக்கான சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டும். நீதிமன்றம் எந்தப் பார்வையில் தீர்ப்பை வழங்கி இருக்கிறது என்பதைப் பற்றி தொண்டர்கள் ஆழமாக சிந்தித்து, மக்களும் தமிழகமும் வளமாக இருக்க நல்ல தலைமையைத் தேர்வுசெய்ய வேண்டும்" என்றார்.

சசிகலாவின் அரசியல் வாழ்க்கை:

சசிகலாவின் அரசியல் வாழ்க்கையில் இந்தத் தீர்ப்பு என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணியிடம் கேட்டபோது,

 "சசிகலா உள்ளிட்டவர்கள் மீதான தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம், ஊழல் செய்த அரசியல்வாதிகள் மக்கள் மன்றத்தில் ஏற்கப்பட்டாலும் நீதி மன்றத்திலிருந்து தப்ப முடியாது என இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை ஏற்படும். இந்தத் தீர்ப்பின் தண்டனையிலிருந்துதான் விடுவிக்கப்பட்டிருக்கிறார் குற்றத்திலிருந்து அல்ல. இதை மனதில் வைத்தே இந்தத் தீர்ப்பை அணுக வேண்டும். 1 ரூபாய் சம்பளம் வாங்குவதாக சொன்ன ஜோதிமணி-சசிகலாவைப் பற்றிமுதல்வர், எப்படி இவ்வளவு சொத்துகளைக் குவிக்க முடியும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்த ஒன்றுதான். இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக ஆட்சி செய்த காலங்களை மீள்பார்வை செய்ய வேண்டும். ஏனெனில் இந்த ஊழல் நடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்தார். இப்போது இந்தத் தீர்ப்பைக் கேட்டு மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை. சசிகலா தண்டிக்கப்பட்டதும் உடனே ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் செய்த குற்றமாக மட்டுமே பார்க்கக் கூடாது. அதிமுக ஆட்சியில் நடந்த குற்றம் என்றே பார்க்க வேண்டும். ஏனெனில் மன்னிப்பதையும் மறப்பதையும் மக்களிடம் இருப்பதைக் கொண்டு உணர்ச்சி வசப்பட்ட கருத்துகளைக் கூறுவதையும் பார்க்க முடிகிறது.

 நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் பத்தாண்டுகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்கிற இந்தத் தண்டனைக் காலம் முடிந்த நிலையில் சசிகலா அரசியலில் இருப்பாரா என்பதே சந்தேகம்தான். பத்தாண்டுகள் தண்டனை முடிந்து வரும் ஒருவரை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அதிமுக கட்சி வேண்டுமானால் இருக்கலாம். இந்திய அரசியலில் அவருக்கான இடம் இருக்காது. ஏனெனில் அன்றைக்கு இன்றைய விட இன்னும் விழிப்பு உணர்வோடு இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டிருப்பார்கள்." என்றார்.

காலம் தனக்குள் என்ன புதைத்து வைத்திருக்கிறது என்பதை வருகின்ற ஆண்டுகள் நமக்கு தெளிவாக காட்டிவிடும். பொறுத்திருப்போம்.

-  சரவணன்,கு.ஆனந்தராஜ்,யாழ் ஸ்ரீதேவி, ஜெயலட்சுமி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்