''எங்கே இருந்தாலும் கட்சியையும், தொண்டர்களையும் மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பேன்''- தொண்டர்களிடம் உருகிய சசிகலா | '' Where is I am...only reminded the party and the volunteers '' - melted Sasikala

வெளியிடப்பட்ட நேரம்: 06:14 (15/02/2017)

கடைசி தொடர்பு:08:49 (15/02/2017)

''எங்கே இருந்தாலும் கட்சியையும், தொண்டர்களையும் மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பேன்''- தொண்டர்களிடம் உருகிய சசிகலா

சொத்துகுவிப்பு வழக்கில், தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் சிக்கல்கள் அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகிவிட்டது. கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களோடு இரண்டு நாட்களாகத் தங்கியிருந்த சசிகலா நேற்று இரவு அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டார். அவர் கார்டனுக்கு வரும் தகவல் அறிந்து சாலையெங்கும் அவரது ஆதரவாளர்கள் குவிய ஆரம்பித்தனர். சசிகலா வரும்வரையில், சாலை ஓரம் காத்திருந்த தொண்டர்கள் ஓ.பி.எஸ் அணியினரைத் திட்டிக் கோஷமிட்டபடி இருந்தனர். சரியாக இரவு 11 மணி அளவில் சசிகலாவின் கார் போயஸ் கார்டன் வந்தடைந்தது. 

வழிநெடுகிலும் குவிந்திருந்த தொண்டர்களைப் பார்த்ததும் காரின் வேகத்தைக் குறைக்கச் சொன்ன சசிகலா தொண்டர்களைப் பார்த்துக் கலங்கிய கண்களுடன் கையெடுத்துக் கும்பிட்டார். அவர் கலங்குவதைப் பார்த்த பெண் தொண்டர்களும் கூக்குரலிட்டு அழ ஆரம்பித்துவிட்டனர். 11.05 மணிக்கு வேதாநிலையம் வந்தடைந்த அவரது காரைத் தொடர்ந்து கட்டுக்கடங்காத தொண்டர்களும் திபுதிபுவென உள்ளே புகுந்தனர். உள்ளே வாசலுக்கு நேர் எதிரே மாட்டப்பட்டிருந்த ஜெயலலிதா புகைப்படத்தைத் தொட்டு அழுத பெண்களில் சிலர், 'நீங்க உசுரோட இருந்திருந்தா இப்படியெல்லாம் நடக்குமாம்மா...' என்று கண்ணீர்விட்டுக் கதறினர். 

சசிகலா போயஸ்கார்டன் வரும்வரையிலும் 'சின்னம்மா வாழ்க' என்று கோஷமிட்டுக் கொண்டிருந்த தொண்டர்கள், சசிகலா வந்தபிறகு அவரது கலங்கிய முகத்தைப் பார்த்து உணர்ச்சிக் குவியலானார்கள். அதன்பிறகு, 'துரோகி ஓ.பி.எஸ் ஒழிக', 'மந்திரவாதி ஓ.பி.எஸ் ஒழிக', 'டீக்கடை ஓ.பி.எஸ். ஒழிக' என விதவிதமாக ஒழிக கோஷம் போட ஆரம்பித்துவிட்டனர். வேதா இல்லத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த சசிகலா, ''புரட்சித் தலைவரின் நூறாவது ஆண்டு நினைவு வாயில் ராமாவரம் தோட்டத்தில் கட்டிக் கொடுக்கவேண்டும். இதையெல்லாம் நாம் செய்துமுடிக்க வேண்டும். அதனால், நம்மை யாரும் எதுவும் செய்யமுடியாது. நீங்கள் எல்லோரும் தைரியமாக இருக்கவேண்டும். ஒரு ஆள், பத்து ஆள் செய்யிற வேலையை செய்துமுடிக்கும் அளவுக்கு நீங்கள் உறுதுணையாக இருந்தால் எனக்கு அதுபோதும். 

 

நான் எங்கேயும் பிரிஞ்சிட்டேன்னு நினைக்காதீங்க.... எல்லோரோட மனசுக்குள்ளேயும் நான் இருக்கேன். என்னை எங்கே கொண்டுபோய் எத்தனைக் கூண்டுகளுக்குள் அடைத்தாலும், அ.தி.மு.க-கட்சிப்பணியை நடத்திக்கொண்டே இருப்பேன். (தொண்டர்களின் பலத்தக் கைத்தட்டல்). அதனால் நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம். நமது ஒரே நினைவு ஒன்றுதான்... அது காலத்துக்கும் நமது அ.தி.மு.க-தான் தமிழகத்தை ஆளவேண்டும். மக்களுக்கு நல்லதை நாம் செய்யவேண்டும். இந்த ஒரே எண்ணத்திலேயே நீங்கள் எல்லோரும் பயணிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. 

பேரறிஞர் அண்ணா சொல்வார் 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்று. புரட்சித் தலைவரது பாடல்களைக் கேட்டாலே நமக்குத் தைரியம் தானாக வரும். அதேபோல், சிங்கம்போல் இருந்த நமது அம்மாவோடு பயணித்த எனக்கு எந்தப் பயமும் இல்லை. நீங்களும் உங்களுடைய பணிகளே செவ்வனே செய்யுங்கள்.'' என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசப்பேச தொண்டர்களும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு மாறினார்கள். 

சசிகலா பேசிக்கொண்டிருக்கும்போதும் 'அம்மா... அம்மா' அரற்றியபடியே இருந்த தொண்டர்கள், அவர் பேசி முடித்து வீட்டுக்குள் சென்றதும், சிறிது நேரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகக் கோஷம் போட்டுமுடித்து அமைதியாகினர். 

வேதா நிலையம் வாசல் முன்பு பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி தொண்டர்கள் சிலர் ஆவேசக் குரல் எழுப்பி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், போலீஸார் பிடிவாதமாக காரை நகர்த்த மறுத்து நின்றனர். சிறிது நேரத்தில், சலசலப்பு அதிகரிக்க... காரின் விளக்குகளை மட்டும் அணைத்துவிட்டு தொண்டர்களை சமாதானப்படுத்தினர். 

 

இதற்கிடையில், சசிகலா கர்நாடகா புறப்படுவதற்கான ஏற்பாடுகள் குறித்துப் பேசியவர்கள், ''அதிகாலை 4 மணி அளவில், ஜெ. சமாதிக்கு சென்று வணங்கிவிட்டு, காரிலேயே பெங்களூர் செல்லத் திட்டமிட்டிருக்கிறார்'' என்றனர். இதையறிந்த தொண்டர்களும் வேதா நிலைய வாசலிலேயே கலையாமல் நிற்க ஆரம்பித்ததைக் கண்டதும், ''சின்னம்மா காலை 8 மணிக்குத்தான் பெங்களூர் போறாங்க.... எல்லோரும் போயிட்டு காலையில வாங்க...'' என்று சொல்லி கூட்டத்தைக் கலைக்க ஆரம்பித்தனர்.

'போயஸ் வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த, 'முதல்வர் சசிகலா' போஸ்டரைப் பார்த்தபடியே கலங்கிய கண்களோடு அங்கிருந்து நகர ஆரம்பித்தனர் தொண்டர்கள்!

- த.கதிரவன்,

படங்கள் - சொ.பாலசுப்பிரமணியன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்