அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆகிறாரா டி.டி.வி தினகரன்? | Is the T.T.V.Dinakaran who will be a deputy general secretary of AIADMK?

வெளியிடப்பட்ட நேரம்: 07:12 (15/02/2017)

கடைசி தொடர்பு:10:24 (15/02/2017)

அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆகிறாரா டி.டி.வி தினகரன்?

சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள 4 ஆண்டுகால சிறைத்தண்டனை தீர்ப்பினை அடுத்து சசிகலாவின் தமிழக முதல்வர் கனவு தகர்ந்துபோனது. இதையடுத்து அடுத்தக்கட்ட நகர்தலுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறது மன்னார்குடி சொந்தங்கள்.   

சசிகலா

 தீர்ப்புக்கு முந்தைய தினம் கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களோடு தங்கியிருந்த நாளிலும்கூட, ''அம்மாவின் ஆன்மா நம்மை எப்போதும் வழிநடத்திச் செல்லும். சிங்கம் போன்ற அவரது ஆளுமையை அருகில் இருந்து பார்த்தவள் நான். இப்போது நமக்கு ஏற்பட்டுள்ள இடர்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை. நீங்கள் எல்லோரும் நம்பிக்கையோடு இருங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும். தமிழக முதல்வர் பொறுப்பில் நான் அமர்வேன். உங்களுக்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் செய்துதருவேன். இக்கட்டான இந்த நேரத்தில், நமக்கு நம்பிக்கையும் தைரியமும்தான் முக்கியம். அம்மாவின்  துணிச்சலை மனதில்கொண்டு சவால்களை முறியடிப்போம்'' என்று உணர்ச்சிமிக்க உரை ஆற்றியிருக்கிறார் சசிகலா. 

ஆனால், 14-ம் தேதி காலையிலேயே உச்சநீதி மன்றத் தீர்ப்பு சசிகலா தரப்பினரது நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கும் வகையில், இடியாக இறங்கியது. ஒட்டுமொத்த அரசியலையே அதிரவைத்த தீர்ப்பைக் கேட்டு அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆடிப்போனார்கள். மன்னார்குடி சொந்தங்களும் இப்படியொரு தீர்ப்பை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும், சோதனையான இந்தக் காலகட்டத்தில், தங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்க ஆரம்பித்தனர்.

சசிகலாவும் டி.டி.வி தினகரனும் காரில்...

தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, அப்செட்டாகிப்போன சசிகலா உடனடியாக தங்களது சட்ட ஆலோசகர்களைக் கூப்பிட்டு, ''மேல் முறையீடு செய்ய வழி இருக்கிறதா?'' என ஆலோசித்துள்ளார். அவர்களோ எடுத்த எடுப்பிலேயே, ''வழிகள் இருக்கின்றன. முதல்கட்டமாக சரண்டர் ஆவதில் நாள் நீட்டிப்பு கேட்டுப் பெறலாம். இரண்டு அல்லது மூன்று வார கால இடைவெளி கிடைக்கும். அடுத்தக்கட்டமாக மேல் நடவடிக்கை முயற்சிகளை முடுக்கிவிட்டு தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்'' என்று அடுக்கியிருக்கிறார்கள். நம்பிக்கையூட்டும் இந்த வார்த்தைகளில் தெம்பான சசிகலா, எம்.எல்.ஏ-க்களுக்கும் தைரியம் ஊட்டியிருக்கிறார். அவசரகதியில் சசிகலாவிடம் நம்பிக்கை வார்த்தைகளைக் கொட்டிய சட்ட ஆலோசகர்கள் அதன்பிறகு சட்டப் புத்தகங்களைத் தலைகீழாகப் புரட்டிப்பார்த்தும், டெல்லி நிபுணர்களிடம் விவாதித்தும் தெரிந்துகொண்ட ஒரே விஷயம்.... 'தண்டனையில் இருந்து தப்பிக்க இனி வாய்ப்பே இல்லை.' என்ற ஒற்றை வரிப் பதிலைத்தான்.

தயங்கித் தயங்கி இந்தத் தகவலை சசிகலாவின் காதுகளுக்குக் கொண்டுபோயிருக்கின்றனர். ஆனாலும் சசிகலா முகத்தில், பெரிய அதிர்ச்சி அலைகள் எதுவும் தென்படவில்லை. நடப்பவற்றை எல்லாம் முன்கூட்டியே அவதானித்திருந்த தெளிவோடு, அமைதியாக இருந்தவர் உடனடியாக தனது அடுத்தக்கட்ட முடிவுகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார். முதல்கட்டமாக,  அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவர் நியமனம் குறித்து மன்னார்குடி சொந்தங்களோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, ''அதிகார ருசி ஒரு மனிதனை எந்தளவுக்கும் கொண்டுபோகும். அதனால், நமக்கு வேண்டியவர்களை தீர ஆலோசித்தே பொறுப்புகளில் நியமிக்கவேண்டும். அதன்பிறகும் அவர்களது செயல்பாடுகளை எந்நேரமும் நம் உறவுகள் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும்'' என்ற ரீதியில் நடப்புச் சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து சிலர் ஆலோசனை கூறியுள்ளனர்.

இதில், முதல்கட்டமாக சட்டமன்றக் குழுத்தலைவர் பொறுப்புக்கு கட்சியின்  மூத்த தலைவர்கள் மூவரது பெயர்கள் முதலில் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. கட்சியின் சீனியர், ஏற்கெனவே ஓ.பி.எஸ்-க்கு சாய்ஸாக பரிந்துரைக்கப்பட்டவர், கொங்கு மண்டலத்தில் கட்சியின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டவர்... என பல ப்ளஸ்களில் எடப்பாடி பழனிச்சாமியின் பெயருக்குப் பின்னால் டிக் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அவரையே அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராகவும் தேர்வு செய்துவிட்டனர். அதன்பிறகு எடப்பாடியார் அமைச்சர்கள் புடைசூழ கவர்னரை சந்தித்து முடித்ததும், சசிகலா தரப்பு கூவத்தூரில் இருந்து கிளம்பி போயஸ் கார்டன் வந்தடைந்தது. சசிகலா வந்த காரின் பின் சீட்டில், டி.டி.வி தினகரனும் அமர்ந்திருந்தார்.

காரை விட்டு இறங்கியதும், வேதா நிலைய வாசலில் நின்றுகொண்டு மைக் பிடித்த சசிகலா, ''நான் எங்கே இருந்தாலும் எனது எண்ணம் முழுவதும் கட்சியைப் பற்றியும், தொண்டர்களையுமே நினைத்துக்கொண்டிருக்கும்'' என்று உருக்கமாகப் பேசி முடித்தார். இதையடுத்து வேதா இல்லத்துக்குள் சென்ற சசிகலாவோடு, மன்னார்குடியின் இரண்டாம் தலைமுறை சொந்தங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த ஆலோசனையில் முடிவில், ''ஓ.பி.எஸ் நமக்கு பெரிய பாடத்தைக் கற்பித்துவிட்டார். இனிமேலும், நாம் யாரையும் நம்பி ஏமாற முடியாது. அதற்குத் தோதாக நமது குடும்ப உறுப்பினர் ஒருவரே நேரில் கட்சிப் பொறுப்பேற்று வழி நடத்த வேண்டும்.'' என்ற  கருத்து ஓங்கி ஒலித்திருக்கிறது. 

சசிகலா

ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பட்டியல் அடங்கிய கடிதத்தை கவர்னரை சந்தித்துக் கொடுத்தபோது சசிகலாவோடு டி.டி.வி தினகரனும் உடன் சென்றிருந்தது பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. கட்சிப் பொறுப்பிலோ, ஆட்சி அதிகாரத்திலோ இல்லாத ஒருவர் எப்படி சசிகலாவோடு கவர்னர் மாளிகை வரை செல்லலாம்? என்ற கேள்வி இப்போது வரையிலும் அ.தி.மு.க எதிர்தரப்புகளால் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், 'கட்சி நடைமுறைகள் அறிந்த, எந்த விஷயத்திலும் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுக்கும் அனுபவம் வாய்ந்த தனது அக்காள் மகன் டி.டி.வி தினகரனுக்கு தனக்கு ஈடான கட்சிப் பொறுப்பை வழங்கிக் கவனித்துக்கொள்ளச் செய்யலாம்' என்ற யோசனை சசிகலாவுக்குத் தோன்றியிருக்கிறது.

''நான் கர்நாடகாவில் இருந்தாலும், கட்சியையும் தொண்டர்களையும் நேரடியாகக் கண்காணித்து வழிநடத்திச் செல்வதாக ஏற்கெனவே உறுதி அளித்திருக்கிறேன். அந்தவகையில், டி.டி.வி தினகரனை அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்து கட்சிப் பணிகளைக் கவனிக்க முடிவெடுத்துவிட்டேன்.'' என்று அமைதியான குரலில் உறுதியாகக் கூறியிருக்கிறார்.  சுற்றி நின்றிருந்த சொந்தங்களும் சசிகலாவின் முடிவை எந்தவித எதிர்ப்பும் இன்றி வரவேற்றுள்ளது. 

இன்று காலையில், பெங்களூர் கிளம்பும் முன்னதாக, 'டி.டி.வி தினகரன் அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க இருக்கும் அறிவிப்பு கார்டனில் இருந்து வெளியாகலாம் என்கிறார்கள் கார்டனுக்கு நெருக்கமானவர்கள்!

- த.கதிரவன்,

படங்கள் - சொ.பாலசுப்பிரமணியன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்