இன்றைக்குள் சென்னை வரவேண்டும்! தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு திடீர் உத்தரவு!

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக சென்னை திரும்ப தி.மு.க கொறடா சக்கரபாணி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். தி.மு.க.வின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவியது. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பத்து எம்.எல்.ஏ.க்கள், 12 எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையே, சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும், உடனடியாக பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் நான்கு பேரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனிடையே, விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய இரண்டு வாரம் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உடல் நிலையை கருத்தில் கொண்டு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா மனுவை தள்ளுபடி செய்தது.

சசிகலாவுக்கு சிறைத் தண்டனை உறுதியானதைத் தொடர்ந்து அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. இதையடுத்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மைத்ரேயன் எம்பி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏ.க்களை வெளியேவிடாமல் சசிகலா தரப்பினர் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

ஆட்சியமைக்க இரண்டு பேரும் கோரிக்கை வைத்துள்ளதால் முதலில் யாரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆளுநர் எப்போது வேண்டுமானாலும் இரண்டு பேரில் ஒருவரை அழைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் இன்றைக்குள் சென்னைக்கு வரவேண்டும் என்று தி.மு.க கொறடா சக்கரபாணி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!