‘டி.டி.வி தினகரன் ஏன் முன்னிறுத்தப்படுகிறார்?’ - எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலங்கிய சசிகலா | This is why TTV Dhinakaran was announced as ADMK's Deputy General Secretary - Sasikala

வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (15/02/2017)

கடைசி தொடர்பு:10:00 (16/02/2017)

‘டி.டி.வி தினகரன் ஏன் முன்னிறுத்தப்படுகிறார்?’ - எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலங்கிய சசிகலா

டி.டி.வி.தினகரன்-சசிகலா

'கூண்டில் இருந்தாலும் அ.தி.மு.கவை வழிநடத்துவேன்' என அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மத்தியில் உருகினார் சசிகலா. 'கசப்பை மறப்போம்' என எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். 'இப்படியொரு தீர்ப்பை சசிகலா எதிர்பார்க்கவில்லை. கட்சியை வழிநடத்த டி.டி.வி தினகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அதிகாரங்கள் வழங்குவது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

அ.தி.மு.க சட்டசபைத் தலைவராக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. நேற்று மாலை ஆளுநரை சந்தித்து, ஆட்சிமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தார். ஆளுநர் மாளிகையில் இருந்து இதுவரையில் எந்த அழைப்பும் வரவில்லை. " உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வேறு கோணத்தில் எதிர்பார்த்திருந்தார் சசிகலா. 'இரண்டு நீதிபதிகளும் ஆளுக்கொரு கருத்தை வெளியிட்டால், சிறைக்குச் செல்வதில் இருந்து கால அவகாசம் கிடைக்கும்' என நம்பினார். கழக வழக்கறிஞர்களும் அவருக்கு நம்பிக்கை கொடுத்திருந்தனர். 'நான்கு ஆண்டு சிறை உறுதி' என்ற தகவல் வந்ததும், அவர் முகம் மாறிவிட்டது. எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் கலங்கினார். அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பியிருந்தார். சரண்டர் ஆவதில் இருந்து நான்கு வார கால அவகாசம் கேட்டு இன்று காலை கர்நாடக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விண்ணப்பத்திருந்தார். அவரது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. நேற்று விடிய விடிய நடந்த ஆலோசனையில் டி.டி.வி.தினகரனுக்குப் புதிய பதவி வழங்குவது குறித்து ஆலோசித்தார். 'அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்வதாக' நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டிருந்தார் சசிகலா. தற்போது துணைப் பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுவிட்டார் டி.டி.வி தினகரன்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

பன்னீர்செல்வம்"சசிகலா குடும்பத்திலேயே டி.டி.வியை முன்னிலைப்படுத்துவதில் திவாகரன் உள்ளிட்டவர்கள் விரும்பவில்லை. 'அவருடைய ஆதிக்கம் தலைதூக்குகிறது. அமலாக்கப் பிரிவு வழக்கையும் எதிர்கொண்டு வருகிறார். சிங்கப்பூர் சிட்டிசன் என நீதிமன்றத்திலேயே தெரிவித்தவர். அவரை முன்னிறுத்துவதால் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்' எனக் கடந்த சில வாரங்களாக சசிகலாவிடம் புகார் சொல்லிய வண்ணம் இருந்தனர். இந்தக் கருத்துக்களையெல்லாம் புறக்கணித்த சசிகலா, போயஸ் கார்டனில் நடந்த அனைத்து ஆலோசனைகளிலும் டி.டி.வியை முன்னிறுத்தினார். பொதுச் செயலாளராக பதவியேற்ற நாளில், நிகழ்த்திய உரையை முழுக்கத் தயாரித்தது டி.டி.வியின் ஆட்கள்தான். சசிகலாவுக்கான உடையை வடிவமைத்தது தினகரனின் மனைவி அனுராதாதான். ஆளுநரை சந்திக்கச் சென்றபோதும், தினகரனையே அழைத்துச் சென்றார் சசிகலா. கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவருக்கு உள்ள 'ஜென்டில்மேன்' இமேஜ்தான் காரணம்.

சசிகலா குடும்பத்தில் உள்ளவர்களில் நான்கு பேருக்குப் பதவி வழங்கி இருந்தார் ஜெயலலிதா. அவர்கள் நடந்து கொண்ட விதத்திற்கும் தினகரன் நடந்து கொண்ட விதத்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருந்தன. அதனால்தான், கட்சி பொருளாளர், ஜெயலலிதா பேரவை செயலாளர், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் என நான்கு பதவிகளை அடுத்தடுத்து அளித்தார் ஜெயலலிதா. தென் மாவட்டம் மட்டுமல்லாமல், அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் ஒருகாலத்தில் டி.டி.வியைக் கண்டால் பயம் கலந்த மரியாதையோடு வணங்கினார்கள். 2009-ம் ஆண்டு வரையில் கட்சிப் பதவி அவரிடம் இருந்தது. 2011 டிசம்பர் 19 அன்று சசிகலாவை நீக்கிய அன்றே, தினகரன் உள்பட குடும்ப உறவுகள் அனைவரையும் நீக்கினார் ஜெயலலிதா. கூடவே, நடராசன், திவாகரன், டாக்டர்.வெங்கடேஷ், மிடாஸ் மோகன், இராவணன் உள்பட அனைவர் மீதும் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தார் ஜெயலிலதா. அந்த நேரத்தில்கூட தினகரன் மீது எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம், ஜெயலலிதாவின் கோபத்தைப் புரிந்து கொண்டு ஒதுங்கியே இருந்தார். எந்த அதிரடியிலும் இறங்க மாட்டார். இதுவரையில் கட்சிக்காரர்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு அவர் நடந்து கொண்டதில்லை. 'அவரை தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும்'  என்ற முடிவுக்கு வந்தார் சசிகலா" என்றார் விரிவாக. 

எடப்பாடி பழனிச்சாமி"ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தபோது கூறிய வார்த்தைகள் மிக முக்கியமானது. 'போயஸ் கார்டனில் இருந்தவர்கள் என்னை நிர்பந்ததித்து ராஜினாமா செய்ய வைத்தார்கள்' என்றவர், அப்போது அருகில் இருந்தவர்களைப் பற்றிச் சொல்லும்போது, 'மூத்த அமைச்சர்கள் இருந்தார்கள்; வெங்கடேஷ் இருந்தார்; டி.டி.வி.தினகரன் சார் இருந்தார்' என விவரித்தார். சசிகலாவுக்கு எதிராக முழு எதிர்ப்பு நிலை எடுத்தபோதும், தினகரனை 'சார்' என்றுதான் அழைத்தார் பன்னீர்செல்வம். அந்தளவுக்கு அவர் மீது மரியாதை வைத்திருக்கிறார். நேற்று முன்தினம், 'கூவத்தூருக்கு பன்னீர்செல்வம் வர இருக்கிறார்' என்ற தகவலைக் கேள்விப்பட்டு, சசிகலாவும் அங்கு கிளம்பினார். அப்போது பேசிய தினகரன், ' நான் ஓ.பி.எஸ்ஸிடம் பேசட்டுமா? அவரை யார் இயக்கினால் என்ன? நான் போய் நின்றால், அவரால் எதுவும் பேச முடியாது' என விளக்கினார்.

பதவியை ராஜினாமா செய்யுமாறு கார்டனில் பன்னீர்செல்வம் நிர்பந்திக்கப்பட்ட அன்றும், அவரது கையைப் பிடித்துக் கொண்டு, 'உங்களை இவ்வளவு பெரிய இடத்துக்குக் கொண்டு வந்தேன். ராஜினாமா செய்ய மாட்டேன் எனச் சொல்லலாமா?' எனக் கெஞ்சினார் டி.டி.வி. தற்போதுள்ள சூழலில், பன்னீர்செல்வத்திற்கு எதிராக தினகரனை முன்னிறுத்துவதே, 'கட்சியின் பிடியை நழுவவிடாமல் பாதுகாக்கும்' என சசிகலா உறவுகள் நம்புகின்றனர். அடுத்ததாக, 'எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் அழைப்பார்' என நம்புகின்றனர். 'ஒருவேளை ஓ.பி.எஸ் அழைக்கப்பட்டாலும், அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆட்சி அதிகாரத்திற்குள் வந்த பிறகு, தினகரனை தலைமைப் பதவிக்குக் கொண்டு வரலாம்' எனவும் கணக்குப் போடுகிறார் சசிகலா" என விவரிக்கின்றனர் தலைமைக் கழக நிர்வாகிகள். 

டி.டி.வி தினகரன் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் நெருக்கிக் கொண்டே வருகின்றன. இன்று பெங்களுரூ சிறைக்கு கார் வழியாகவே பயணப்பட இருக்கிறார் சசிகலா. 'கட்சியை கட்டுக்கோப்பாகக் கொண்டு செல்வது சாத்தியம்தானா?' என்ற கேள்விகளும் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. முதல்வர் பதவிக்கு தினகரனால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வம், தற்போது அவரை நேருக்கு நேராக எதிர்க்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அடுத்து நடக்கப் போவதை அதிர்ச்சியுடன் கவனித்து வருகின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள். 

- ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்