‘அவர்களே ஆட்சியைக் கவிழ்ப்பார்கள்... நாம் அமைப்போம்!’ - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

"அ.தி.மு.க.வில் நான் முதல்வரா? நீ முதல்வரா என்ற சண்டை டி.வி சீரியலை விட கேவலவமாக நடக்கிறது என்றும், அவர்கள் ஆட்சியை கவிழ்ப்பார்கள், நாம் ஆட்சி அமைப்போம்," எனவும் மு.க.ஸ்டாலின் கோவையில் பேசினார்.

தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் கூட்டம் கோவையில் இன்று நடந்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்ததற்கு கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்தும், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பது, ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு கண்டனம் தெரிவிப்பது, விவசாயிகள் மரணம், வறட்சி போன்றவற்றை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வரும் தமிழக அரசை கண்டிப்பது, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நீட் தேர்வுக்கு விலக்களிக்க உடனடியாக குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மு.க.ஸ்டாலின்

கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், "கொள்ளைப்புறமாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை. ஆட்சி, பதவியை தேடி நாம் போக வேண்டிய அவசியம் இல்லை. பொறுத்திருங்கள். பதவி நம்மைத் தேடி வரும். ஜல்லிக்கட்டுப் போரட்டத்தைத் தொடக்கி வைத்ததும் தி.மு.க. தான்.. போராட்டத்தை முடித்து வைத்ததும் தி.மு.க. தான். மாணவர்கள் போரட்டமே ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக இருக்கும் என்று நான் சொல்லியிருந்தேன். அதன்படி மெரினா புரட்சியே, புதிய ஆட்சி அமைய வித்திட்டுள்ளது. அது இப்போது நடக்கப் போகிறது.

வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களைக் கைப்பற்ற வேண்டும். சமூக வலைதளங்களை முழுமையாக உபயோகித்து பெண்கள் , மாணவர்களை நமக்கான வாக்காளர்களாக மாற்ற வேண்டும். இனி நாம் எளிமையாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்களுக்கு மட்டுமே கார்களை பயன்படுத்த வேண்டும். உள்ளூர் பயணங்களுக்கு மக்களுடன் பயணிங்கள். ஆடம்பர செலவுகளை தவிர்த்து, மக்களை எளிமையாக அணுகுங்கள். மாபெரும் மாற்றம் நடக்கவிருக்கிறது..

மு.க.ஸ்டாலின்

அவர்களில் நான் முதல்வரா? நீ முதல்வரா என்ற சண்டை டி.வி சீரியலை விட கேவலவமாக நடக்கிறது. இதை தமிழ்நாடே கவனிக்கிறது, இதனால் மக்கள், மாணவர்கள் மனதில் மாற்றம் நிகழும்..அ.தி.மு.க.வின் ஆட்சி ஒரு மாதமோ, இரண்டு மாதமே தான் நிற்கும். அதற்குள் அவர்களே அவர்கள் ஆட்சியை கவிழ்ப்பார்கள்," என மு.க.ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், "அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி . தினகரன் நியமிக்கப்பட்டுள்ளது அவர்கள் உட்கட்சி விவகாரம். உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்  கூட்டம்  நடைபெறுவதாக தகவல் வந்துள்ளதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, நான் தான் எதிர்கட்சித் தலைவர், நான் தான் கூட்ட வேண்டும் ஆதராம் இல்லாமல் கேள்வி கேட்க வேண்டாம்," என்றார்.

- தி.விஜய்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!