ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்களிடம் போலீஸ் விசாரணை: அதிமுகவினர் வாக்குவாதத்தால் நுழைந்தது அதிரடிப்படை

Dinakaran

ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்களிடம் போலீஸ் விசாரணை: அதிமுகவினர் வாக்குவாதத்தால் நுழைந்தது அதிரடிப்படை

எம்எல்ஏ சரவணின் கடத்தல் புகாரின் பேரில் கூவத்தூர் ரிசார்ட்டில் உள்ள அதிமுக எம்எல்ஏக்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, காவல்துறையினருடன் அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் 120க்கும் மேற்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த ரிசார்ட்டில் இருந்த மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ சரவணன், அங்கிருந்து மாறுவேடத்தில் தப்பிவந்தார். இதையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வத்தை சரவணன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தன்னை கடத்தியதாக கூவத்தூர் காவல்நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், ஆள்கடத்தல், கொலை மிரட்டல், சிறைப்பிடித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, ஐஜி செந்தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. முத்தரசி, கூவத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் விக்டர் ஆகியோர் இன்று ரிசார்ட்டுக்குச் சென்றனர். அங்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களிடம் அவர்கள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, காவல்துறையினருடன், அ.தி.மு.க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ரிசார்ட்டுக்குள் அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.  அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரிசார்ட்டுக்கு சென்றுள்ளார். ரிசார்ட்டில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்றவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். இதனால் ரிசார்ட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணை குறித்து ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். பன்னீர்செல்வம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். விசாரணையின்போது காவல்துறையினர் மிரட்டுகின்றனர்.

ராஜன் செல்லப்பா கூறுகையில், எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்கிறோம். அறையில் அடைத்து வைத்திருக்கிறோம் என்று கூறுவது பொய்யான தகவல் என்றார்.

படங்கள்: அ.குரூஸ்தனம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!