வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (15/02/2017)

கடைசி தொடர்பு:10:38 (16/02/2017)

8 முறை மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன்! - நேற்று ரிசார்ட்டில் நடந்தது இதுதான்! #OPSVsSasikala

செங்கோட்டையன் பேச்சு வார்த்தையில்...

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்குத் தண்டனை கிடைத்துவிட்டது. பன்னீர்செல்வம் தரப்புக்கும் மனநிம்மதி கிடைத்துவிட்டது. இது, இன்றையச் செய்தி. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தரப்புக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்? தற்போது கூவத்தூரில் சசிகலா கஸ்டடியில் இருக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என தமிழ்நாடே பதற்றத்தின் உச்சத்தில் இருந்தது. இது, நேற்றைய காலைச் செய்தி. நேற்று, அதிகாலை முதல் இரவுவரை ரிசார்ட்டில் நடந்தது என்ன? 

குவிக்கப்பட்டிருக்கும் காவலர்கள்

நேற்றைய அதிகாலைப் பொழுது கூவத்தூர் ரிசார்ட் மிகுந்த பரப்பரப்பில் இருந்தது. சசிகலா தரப்பு ஆட்கள் மற்றும் பௌன்சர் பாய்ஸ் ரிசார்ட்டின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிகாலை ஐந்து மணிக்கு ரிசார்ட்டின் வெளிப்பகுதியில் இருந்த பார்க்கிங்கில்.... பத்திரிகையாளர்கள் தங்களுடைய கார்களைப் பார்க் செய்தபோது... அங்கிருந்த சசிகலா தரப்பினர், ''மரியாதையாக காரை எடுத்துவிடுங்கள்'' என்று மிரட்டினர். அவர்கள் மறுக்கவே, ''இனி வருவது எங்கள் ஆட்சியே... அதனால், உங்கள் கார்களையும், உங்களையும் என்ன வேண்டுமானாலும் செய்வோம்'' என்று பகிரங்க மிரட்டல் விடுத்தனர். அருகில் இருந்த காவலர்கள், ''ஏன் சார்... இவனுங்க கூட வம்பு பண்றீங்க. எங்களுக்கே மரியாதை தராம கேவலமா பேசுறானுங்க. நீங்க போங்க சார்...'' என்றனர். பின் அந்த இடம் முழுவதும் சசிகலாவின் கைக்கூலிகள் நிறுத்தப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் செல்வதற்கே அந்தப் பகுதி தடை செய்யப்பட்டிருந்தது என்பதுதான் உண்மை. நேரம் காலை 9 மணியைத் தாண்டியபோது... சசிகலா தரப்பு அ.தி.மு.க-வினர், ரிசார்ட்டுக்கு வருவதும் போவதமாக இருந்தனர். இதனால் நிலைமை சற்றுப் பதற்றமாக இருந்தது. சசிகலாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் ரிசார்ட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பௌன்சர் பாய்ஸாலும், சசிகலா தரப்பு அரசியல்வாதிகளாலும் பெரிய பிரச்னை உருவாகிவிடும் சூழல் இருந்தது. இதனால் போலீஸார் குவிக்கப்பட்டு கூவத்தூர் மெயின் ரோட்டிலிருந்து ரிசார்ட் வரை நிறுத்திவைக்கப்பட்டனர். அரசுப் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் கூவத்தூருக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ரிசார்ட்டில் பதற்றம் அதிகமாக, வெளி ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த 12 எம்.எல்.ஏ-க்களும் அவசரஅவசரமாகச் சரியாக 9.40-க்கு வரவழைக்கப்பட்டனர். 10.30 மணிக்கு சசிகலாவுக்கு எதிராக அறிவிப்பு வர... ரிசார்ட்டுக்குள் எம்.எல்.ஏ-க்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு அவர்கள் இரு அணிகளாகத் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஐ.ஜி செந்தாமரைகண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர். 

குவிக்கப்பட்டிருக்கும் காவலர்கள்

அதன்பின், அங்குள்ள எம்.எல்.ஏ-க்களை சென்னைக்கு அழைத்துச் செல்ல இரண்டு அரசுப் பேருந்துகள் வரவழைக்கப்பட்டன. சரியாக 11.30 மணியளவில் ரிசார்ட்டின் உள்ளே இருந்த வெளியாட்களைப் போலீஸார் அப்புறப்படுத்தினர். சசிகலாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்ததால், அங்கிருந்த எம்.எல்.ஏ-க்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க சசிகலா தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகப் பேசிய எம்.எல்.ஏ-க்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு அமைதிப்படுத்தப்பட்டது. பின், கூட்டத்தில்.... ''எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அனைவரும் செயல்பட வேண்டும்'' என்று சசிகலா அறிவித்தார். இது அங்கிருந்த எம்.எல்.ஏ-க்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், சில எம்.எல்.ஏ-க்கள் ரிசார்ட்டை விட்டுக் காணாமல் போயினர். எம்.எல்.ஏ-க்களை அப்புறப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. ஆனால், ஒளிந்துகொண்ட எம்.எல்.ஏ-க்களை... கடைசிவரை அவர்களால் ரிசார்ட்டில் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் அனைவரும் ரிசார்ட்டைவிட்டு வெளியேறிவிட்டனர் என்று அப்போதுதான் சசிகலா தரப்புக்கே தெரிந்தது. 

சசிகலா மற்றும் தினகரன்

இதனிடையே மாஃபா பாண்டியராஜனும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் ரிசார்ட்டுக்கு வருவாதாக் தகவல் கிடைக்க... சசிகலா தரப்பினர் கடுங்கோபத்துக்கு ஆளாயினர். இருப்பினும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ரிசார்ட்டுக்கு வரும் வழியிலேயே, ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக அவர்களைப் போலீஸார் திருப்பியனுப்பினர். அதன்பின், ரிசார்ட்டில் இருந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களிடத்தில் சசிகலா பேசினார். அப்போது, பத்திரிகையாளர் ஒருவர் உள்ளே நுழைந்தபோது... சசி தரப்பு ஆதரவாளர் ஒருவர், மைக்கைப் பிடுங்கி அவர் வயிற்றில் பலமாக அடித்துவிட்டார். இதனால், ''தாக்கியவர் கைது செய்யப்படும்வரை... எந்தப் பத்திரிகையாளர்களும் லைவ் ஒளிபரப்பு செய்யமாட்டோம்'' என ரிசார்ட்டின் முன் போராட்டம் நடத்தினர். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்தப் போராட்டத்தினால், சசிகலா தரப்பு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் பதற்றத்துடன் பத்திரிகையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், தாக்கியவர் வராததால் பத்திரிகையாளர்கள் யாரும் அந்த இடத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை. இதுகுறித்து அருகில் இருந்த காவல்துறையிடம் சொல்லியபோது, அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.பின்னர் கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும், அங்கு இருந்த நிலைமை சீராகவில்லை. "கிளம்பும் நேரத்தில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்துவிட்டது.தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபரின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார் செங்கோட்டையன். அடித்த நபர் வந்து மன்னிப்புக் கேட்காமல், நாங்கள் இங்கு இருந்து நகரப்போவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தனர் பத்திரிகையாளர்கள்.. ''பலன் இல்லை'' என்று தெரிந்ததும் தன் குரலை தாழ்த்திக்கொண்டு மன்னிப்புக் கேட்டார்.இப்படியாக அவர் எட்டு முறை மன்னிப்பு கேட்டார். ''தெரியாமல் அடித்துவிட்டார்... தயவுசெய்து எங்களுடன் ஒத்துழைப்பு தாருங்கள்'' என்றார். இருப்பினும், ''பத்திரிகையாளரை அடித்தவர் வராமல் யாரும் எழுந்திருக்க மாட்டோம்'' என்றனர். பின், பலத்த பாதுகாப்போடு அந்த நபர் அழைத்துவரப்பட்டார். அவர், ''அவரை, அடித்தது என் தப்புத்தான். இனி, இதுபோல் செய்யமாட்டேன்... என்னை மன்னித்துவிடுங்கள்'' என்றார். அதன்பிறகே, அனைத்துப் பத்திரிகையாளர்களும் எழுந்தனர். பின், சரியாக 9.40 மணிக்கு சசிகலா காரில் போயஸ் கார்டன் நோக்கிப் புறப்பட்டார்.

பத்திரிகையாளரை தாக்கியவர்

அதன்பின் எம்.எல்.ஏ-க்களையும் காவலர்கள் கிளம்பச் சொல்ல... ''ரிசார்ட்டுக்கு நாங்கள்தானே வந்தோம். எங்களுக்குப் போகத் தெரியும்'' என்று பதிலளித்தனர். அதனால் காவல் துறையும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

- ஜெ.அன்பரசன் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்