வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (15/02/2017)

கடைசி தொடர்பு:10:39 (16/02/2017)

எல்லாம் பதவி படுத்தும் பாடு; சசிகலா சிறைப்பறவையான பின்னணி!

சசிகலா

நேற்றுவரை சினிமாவில் பார்த்து கைதட்டி மகிழ்ந்த காட்சிகள்தான். தமிழகத்தில் நிஜமாகவே  அரங்கேறும் என யாரும் நினைத்துப்பார்த்திருக்க வாய்ப்பே இல்லாத இக்காட்சிகள் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு குறையாமல் நடந்துவருகிறது. ஜெயலலிதா இறக்கிறார், பன்னீர்செல்வம் முதல்வராகிறார், சசிகலா பொதுச் செயலாகிறார்...க்ளைமேக்ஸில் தன் ராஜினாமா கடிதத்தை கவர்னர் அலுவலகத்துக்கு கொடுத்துவிட்டு அழுதபடி அம்மா சமாதியில் போய் அமர்கிறார் பன்னீர். மீடியாக்களிடம் தன் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு தன் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் சசிகலா அதிருப்தியாளர்களுக்காக காத்திருக்க ஆரம்பிக்கிறார்.

இதனிடையே கூவத்துாரில் தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தங்கவைக்கிற சசிகலா, 'கவர்னர் தங்களை ஆட்சியமைக்க அழைப்பார்' என கால்கடுக்கக் காத்திருக்கிறார். 'தான் ஆட்சியமைக்கப்போவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது' என வீராப்பு காட்டுகிற விறுவிறுப்பான கதையின்போக்கில் கிளைமேக்ஸ் வருகிறது. 

சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் முந்தையை தீர்ப்பை உறுதி செய்கிறது உச்ச நீதிமன்றம். பரபரப்பான இந்தக் காட்சிகளினிடையே பன்னீர் கூவத்தூரில் தங்கியுள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களைப் பார்க்கத் திட்டமிடும் வேளையில்... அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பன்னீர் சற்று ஓய்வில் இருக்க, சசிகலா சிறை செல்லும் படலம் தொடங்க... இப்படி விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்தப் படத்தின் முதல் பகுதி முடிந்திருக்கிறது.

இப்படிச் சினிமாவை விஞ்சி, தமிழகத்தில் நடந்துமுடிந்த அரசியல்  இந்த  களேபரங்களுக்கு பின்னணியில், மத்திய அரசின் பங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள் விபரமறிந்தவர்கள். தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அதைப் பறிக்க சசிகலா தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் பன்னீர்செல்வத்துக்கு அதிருப்தியைத் தந்ததாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தலைமைக் கழகத்தில் ஜனவரி இறுதியில் நடந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில்... பத்தோடு பதினொன்றாக பன்னீருக்கு மேடையின் கீழே இருக்கை ஒதுக்கப்பட்ட சம்பவம் மனதில் அவருக்கு குடைச்சலை தந்துகொண்டிருந்தது.  உச்சகட்டமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சசிகலாவின் ரத்த உறவுகளால் அவர் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

பன்னீர்செல்வம்

இதன்பின்னர்தான் மத்திய அரசு மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்துகவனிக்கத்துவங்கியதாம். சசிகலா தரப்பினரால் பன்னீர் மிரட்டப்பட்டாரா என்ற தகவல்களை உளவுத்துறை மூலம்  உறுதிசெய்த மத்திய அரசு அதன்பின்னரே தனது ஆட்டத்தை துவங்கியது என்கிறார்கள்.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலா கைப்பற்றியபோது அமைதிகாத்த பி.ஜே.பி தலைமை, அடிப்படை அரசியல்வாதியாக அல்லாமல்... 'ஜெயலலிதாவின் தோழி' என்று மட்டுமே அறியப்பட்ட சசிகலாவை, முதல்வர் என்ற நிலையில் வைத்துப்பார்க்க விரும்பவில்லை. குறிப்பாக, சசிகலாவின் மீது சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததும் மத்திய அரசை யோசிக்கவைத்ததாம். ''அரசியல் தவிர்த்து தனிப்பட்ட முறையிலும், ஜெயலலிதாவுடன் நல்ல நட்புடன் இருந்த பிரதமர், இத்தனை தகுதிக்குறைவுடன் ஒருவர் அ.தி.மு.க-வின் தலைமைப் பதவிக்கும் ஆட்சிப்பொறுப்புக்கும் வருவதை விரும்பவில்லை'' என்கிறார்கள்.

மேலும் இந்திய அரசியலில் 'துக்ளக்' சோ, மற்றும் நரேந்திரமோடி இருவரிடமும்தான் ஜெயலலிதா அரசியலை மீறி தனது தனிப்பட்ட விஷயங்கள் பலவற்றையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இப்படி ஜெயலலிதாவின் மனவருத்தங்கள் சிலவற்றையும் நன்கறிருந்திருந்த டெல்லி தலைமை சசிகலா ஆட்சிப்பொறுப்புக்கு வருவதை அறவே விரும்பவில்லை என்கிறார்கள்.

இதனால் சசிகலாவை முதல்வராக்கும் முடிவைத் திரும்பப் பெற பரிசீலிக்கும்படி கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்களிடம் பேசப்பட்டதாம். ஆனால், சசிகலா தான் முதல்வராவதில் உறுதியாக இருந்த தகவல் தெரிவிக்கப்பட்டபோது பி.ஜே.பி தலைமை எரிச்சலுக்குள்ளானது. இந்த நிலையில்தான் கடந்த 5-ம் தேதி ராஜினாமா தந்துவிடும்படி ஓ.பி.எஸ்ஸுக்கு இறுதி எச்சரிக்கை அ.தி.மு.க-வில் உள்ள சிலரால் விடுக்கப்பட்டது. அதன்படி ராஜினாமா செய்ய முடிவெடுத்த ஓ.பி.எஸ்ஸிடம் மத்திய அரசிடமிருந்து சிலர் பேசியதாகச் சொல்லப்படுகிறது. சசிகலாவுடன் கருத்துவேறுபாட்டில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் எதிர்காலத்தில் மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்லுமா என்பது குறித்து உறுதிபெறப்பட்டதாம். ஓ.பி.எஸ்ஸின் எந்த நடவடிக்கைக்கும் மத்திய அரசு துணை நிற்கும் என உறுதி தரப்பட்டதாம். ' 'ஓ.பி.எஸ் தரப்பில் அதற்குப் பச்சைக்கொடி காட்ட, காரியங்கள் விறுவிறுவென நடைபெற்றது'' என்கிறார்கள்.  

பன்னீர்செல்வம்

''ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது முதலே எல்லா விஷயங்களும் திட்டமிட்டுச் செய்யப்பட்டன'' என்கிறார்கள். ஒரு முதல்வர் தனது ராஜினாமாவை கவர்னரிடம் முறையாக ஒப்படைப்பதுதான்  நடைமுறை. ஆனால், ராஜினாமா கடிதம் ஃபேக்ஸ் மூலம் கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அன்றைய தினம் கவர்னர் சென்னையில் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலும் தேதி தவறுதலாக இடம்பெறும் வகையில் ஃபேக்ஸ் இயந்திரத்தில் தேதியை மாற்றி அமைத்ததாகச் சொல்கிறார்கள். இதனால் கடிதம் பெற்ற தேதி ஒன்றாகவும் கடிதத்தில் உள்ள தேதி வேறொன்றாகவும் இருந்திருக்கிறது. அதாவது, எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா கடிதத்தின் செல்லுபடித்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இப்படித் திட்டமிட்டுக் கடிதம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவாம். அதன்படியே தனது ராஜினாமா கடிதம் மிரட்டிப் பெற்றதாக கவர்னரிடம் மனு அளித்து சசிகலாவை  அழைத்துவிட முடியாதபடி ஒரு சட்டச் சிக்கலை உருவாக்கினார் ஓ.பி.எஸ். 

அதன்பின்னரே கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எம்.எல்.ஏ-க்களுக்காக ஓ.பி.எஸ் 'காத்திருக்க' ஆரம்பித்தார் என்கிறார்கள். ஆட்சியமைக்க எம்.எல்.ஏ-க்கள் போதும் என்ற நிலையில் எம்.பி-க்களும் கிரீன்வேஸ் சாலைக்கு படையெடுத்துவர ஆரம்பித்ததன் பின்னணியும் பி.ஜே.பி-தான் என்கிறார்கள். நேரடியாக நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்றாலும் சென்சிடிவ் வழக்கான சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கினை உள்துறை அமைச்சகம் மூலம் அறிந்துகொண்ட மேலிடம், அதன்படி கவர்னர் மாளிகைக்கு சில அறிவுறுத்தல்களைச் செய்ததாகத் தெரிகிறது. அதுதான் போதிய எம்.எல்.ஏ-க்கள் தங்களிடம் இருப்பதாகக்கூறித் தங்களை ஆட்சியமைக்கக் கோரிய சசிகலாவுக்கு கவர்னர் செவிமடுக்காமல் போகக் காரணமாம். அதேசமயம், கவர்னர் தங்களை அழைக்க வேண்டும் என மன்றாடி வந்தபோதும் கவர்னரிடம் இருந்து எந்தச் சமிக்ஞையும் கிடைக்காதது குறித்து மத்தியில் உள்ள தங்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, மத்திய அரசின் தீவிரமான பின்னணி தெரியவந்தது என்கிறார்கள்.

சசிகலா

“பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு” என சசிகலா பேட்டியளித்த பின் பாஜக வின் எச்.ராஜா, அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் பாஜகவுக்கு அதை சமாளிக்கத் தெரியும் என பதிலடி கொடுத்ததும், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானபோது, “யாருக்கு தண்டனை கிடைக்கவேண்டுமோ அவர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது” என தமிழிசை சொன்னதும் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் தெரியவந்த பிறகுதான், ஆட்சியமைப்பது அப்புறம் இருக்கட்டும், தீர்ப்பு சாதகமாக இல்லாமல் போனால் கட்சியைத் தக்கவைப்பதற்கான விஷயங்களை முதலில் பார்க்கலாம் என சசிகலா, தீர்ப்புக்கு முன்தினமே கூவத்துார் போய் தங்குவதென முடிவெடுத்தாராம். அன்றைய தினம் போயஸ் கார்டன் கிளம்பிச்செல்கையில், கவர்னர் அழைக்காதது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, “வெளிப்படையாக இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது புத்திசாலி பத்திரிகையாளர்களான உங்களுக்கே நன்றாகத் தெரியுமே” எனச் சொன்னார் கடுகடு முகத்துடன். 

கூவத்துாரில் அன்றிரவு அளித்த பேட்டியின்போதும், ''தான் ஆட்சியமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்கமுடியாது'' என்றெல்லாம் படபடத்தார். இந்த நிலையில் நேற்று சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. இதன் எதிரொலியாகச் சசிகலாவுக்கு பதிலாக அ.தி.மு.க சட்டமன்ற கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதுடன் “மகனே இனி உன் சமத்து” என  மத்திய அரசு தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டுள்ளது என்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதியதாக ஆட்சி அமைந்தபின் சட்டமன்றத்தில் நடத்தப்போகும் ஆட்டமே, தமிழக அரசியலின் இரண்டாவது பகுதி என்கிறார்கள். இருப்பினும், ஓ.பி.எஸ்ஸின் அதிரடிகளால் ஆட்சிக்கு எந்தப் பாதகம் வந்தாலும் கட்சியைத் தக்கவைக்கும் நோக்கிலேயே டி.டி.வி.தினகரனை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக அவசர கதியில் நியமித்து சிறை சென்றிருக்கிறார் சசிகலா.

எம்.ஜி.ஆர்

அதன் முதற்கட்டமாக சசிகலாவின் வாகனம் இன்னமும் பெங்களூரு நெருங்காத நிலையிலேயே கானா எனப்படும் கருப்பசாமி பாண்டியன் இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க-வின் பை லா எனப்படும் சட்டவிதிகளின்படி, சசிகலாவே நெருக்கடியான நேரத்தில் நியமிக்கப்பட்ட ஒரு தற்காலிக பொதுச்செயலாளர்தான். பொதுச் செயலாளர் நியமனத்துக்கான எந்தச் சட்டவிதிகளின்படியும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால், சசிகலாவும் அவரால் செய்யப்பட்ட நியமனங்களும் செல்லாது என அதிருப்தியாளர்கள் நீதிமன்றப் படியேறவும் வாய்ப்புள்ளது எதிர்காலத்தில். 

தான் அங்கம் வகித்த கட்சியில் புரையோடிப்போன ஊழலை எதிர்த்து எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சிதான் அ.தி.மு.க. ஆனால், எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில் அதன்  இன்றைய தலைமை ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டு சிறை செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதுதான் வரலாற்றுச் சோகம்.

எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டுக் கொண்டாட்டம் இப்படித்தான் தொடங்கியிருக்க வேண்டியிருக்கவேண்டுமா என பலரும் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிற, அதேவேளையில் எம்.ஜி.ஆரை நிஜமாய் நேசிக்கும் ஒவ்வொரு தொண்டனின் மனதும் சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும், காரணம் தங்கள் தலைவரின் நுாற்றாண்டுக் கொண்டாட்டத்துக்குத் காலம் தந்த பரிசு இது என்பது அவர்கள் மட்டுமே அறிந்த உண்மை! 

- எஸ்.கிருபாகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்