'அடுத்த முதல்வர் யார்?' கவர்னர் சப்போர்ட் யாருக்குத் தெரியுமா?

மிழக அரசியல் தகிப்பு இன்னும் அடங்கவில்லை.! துரோகம், ஆதரவு, தீர்ப்பு, சிறை... என்று அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்துவரும் தமிழக அரசியல் இப்போது, 'தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?' என்ற கட்டத்தில் வந்து நிற்கிறது.
தமிழகத்தின் காபந்து முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 7-ம் தேதி ஜெ. சமாதியில் திடுதிப்பென்று வந்தமர்ந்து தியானத்தில் மூழ்கியதில் ஆரம்பித்த அரசியல் பரபரப்பு இப்போதுவரையிலும் தொடர்கிறது. 'முதல்வராக அமரவைத்து அசிங்கப்படுத்தினார் சசிகலா' என்று அவர் பற்றவைத்த நெருப்பின் சூடு தாளாமல், உடனடியாக அவரை பொருளாளர் பதவியில் இருந்து தூக்கியடித்தார் சசிகலா. அடுத்தடுத்து ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டது, ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அணி மாறியது என பஞ்சமில்லாத பரபரப்பு தமிழக அரசியலை ஆட்கொண்டது.


இதையடுத்து, தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக்கோரி கவர்னர் வித்யாசாகரை தனித்தனியே சந்தித்த ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும், தங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பட்டிலையும் கொடுத்துவிட்டு வந்தனர். ஆனாலும், ஆளுநர் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வெளியாகாமல், காலம் கடத்தப்பட்டு வந்தது. கவர்னரின் காலதாமதத்துக்குப் பின்னணியில் பி.ஜே.பி இருப்பதாக சசிகலா அணியினர் உள்ளுக்குள்ளே பொருமி வந்தாலும், வெளிப்படையாக வெளியே சொல்லத் தயங்கினர். அதே நேரம், 'உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகவிருக்கும் சூழ்நிலையில், சசிகலாவை ஆட்சி அமைக்கச்சொல்லி  அழைக்கமுடியாது.' என்று கவர்னர் தரப்பு நியாயத்தை சுட்டிக்காட்டி வாதாடினர் சட்ட நிபுணர்கள். ஆனாலும், ஆளுநர் தரப்பு எந்தக் கருத்தும் தெரிவிக்காமல், ஆழ்ந்த மவுனத்தையே பதிலாகத் தந்துகொண்டிருந்தது.
இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் 'சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை' விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது உச்சநீதிமன்றம். தமிழக அரசியல் பரபரப்பை ஒட்டுமொத்தமாக திசை திருப்பிய இந்தத் தீர்ப்பையடுத்து, அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்தார் சசிகலா. அன்றே, கவர்னரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியும் தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னரை சந்தித்து கோரிக்கை வைத்தார். ஆனால், அதன்பிறகும் கவர்னர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் வெளிவரவில்லை. 


இந்த நிலையில், நேற்று மாலை கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அதேநாள் இரவு 8 மணி அளவில் அமைச்சர் ஜெயக்குமார், ராஜ்யசபா உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேரோடு மீண்டும் கவர்னரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அடுத்த 10 நிமிடங்களுக்குள்ளாக சந்திப்பு முடிந்து வெளியே வந்த குழுவினர் முகத்தில் சந்தோஷக் களை எதுவும் இல்லை.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும், ''எங்களுக்கு 124 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவாக உள்ளனர். ஓ.பி.எஸ் அணியில் 8 எம்.எல்.ஏ-க்கள்தான் உள்ளனர். 8 பெருசா? 124 பெருசா?'' என்று செய்தியாளர்களிடம் கேள்வி கேட்டவர் ''கவர்னர் ஜனநாயகத்தை காப்பார் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று சொல்லியபடியே கிளம்பிப்போனார்.
அடுத்ததாக 8.45 மணிக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மதுசூதனன், பொன்னையன் என  தனது ஆதரவாளர்களோடு கவர்னரை சந்தித்துப் பேசினார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 15 நிமிடங்கள் தொடர்ந்த இந்த சந்திப்பை அடுத்து இக்குழுவினர் நேராக க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரது இல்லத்துக்கு விரைந்தனர். மலர்ந்த முகத்துடன் காரை விட்டு இறங்கிய பொன்னையன், அங்கிருந்த ஆதரவாளர்களிடம் கைகொடுத்து நம்பிக்கை விதைத்தவர் தனது ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டி, ''வெற்றி நமதே'' என்று சிரித்தார்.
இது குறித்துப் பேசும் கவர்னர் வட்டாரத்தினர், ''சசிகலா தரப்பினர் எம்.எல்.ஏ-க்களை கூவத்தூரில் சிறை வைத்துவிட்டதால் ஓ.பி.எஸ் அணிக்கு எதிர்பார்த்த எம்.எல்.ஏ-க்கள் வந்து சேர்வதில் சிக்கல் நீடிக்கிறது. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் யாருடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல், சுதந்திரமாக சிந்தித்து செயல்படவேண்டும் என்றே கவர்னர் விரும்புகிறார். அதனால்தான் இந்த விஷயத்தில் இவ்வளவு காலம் தாமதம் ஆகிறது.  
ஆனாலும், ஓ.பி.எஸ் அணிக்கு மத்திய அரசின் ஆதரவு பலமாக இருக்கிறது. 
சசிகலா தரப்பு அ.தி.மு.க-வினரிடம் இதுகுறித்துப் பேசியவர், 'எம்.எல்.ஏ-க்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காதவரையில் இவ்விஷயத்தில் எந்தவொரு உறுதியான முடிவையும் என்னால் அறிவிக்க இயலாது. இரண்டு தரப்பினரும் விட்டுக்கொடுத்துப்பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். தனிப்பட்ட ஒரு குடும்ப ஆதிக்கத்தின் பேரில், எம்.எல்.ஏ-க்களை கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தால், ஒட்டுமொத்தமாக ஆட்சியைக் கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியைக் கொண்டுவருவதோடு இந்த நிலைக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்.' என்று கடுமையான வார்த்தைகளில் எச்சரிக்கவே செய்துவிட்டார். இதில், கடுப்பாகிப்போன எடப்பாடிக் குழுவினர் அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிட்டனர். அந்தக்கோபத்தில்தான் ஜெயக்குமாரும் '8 பெருசா? 124 பெருசா?' என்றெல்லாம் கேட்டு வார்த்தைகளில் சூடு காட்டினார். 

அதேசமயம், ஓ.பி.எஸ் அணியோடு நெருக்கம் காட்டிய கவர்னர், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் நிதானமாக விவாதித்திருக்கிறார். நிறைவாக, 'நம்பிக்கை தளரவேண்டாம். மத்திய அரசு உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டு வருகிறதே. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிற சூழல் ஏற்பட்டாலும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முதல் வாய்ப்பு உங்களுக்குத்தான் முதலில் வரும். நல்லதே நடக்கும்' என்ற ரீதியில் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இதுவல்லாமல், ஓ.பி.எஸ்-ஸிடம் தனியாக சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஒட்டுமொத்தமாக கவர்னர் காட்டிய சப்போர்ட் ஓ.பி.எஸ் அணியை ரொம்பவே உற்சாகப்படுத்திவிட்டது.
தமிழக சட்டசபையில், பலத்தை நிரூபிப்பது தொடர்பான அறிக்கை ராஜ்பவனிலிருந்து விரைவில் வெளியாகும். எப்படிப் பார்த்தாலும் அது ஓ.பி.எஸ் அணிக்கு சாதகமான அறிவிப்பாகவே இருக்கும்.'' என்று கூறி கண்சிமிட்டுகிறார்கள். 
பொறுப்பு கவர்னர், காபந்து முதல்வர், காலியாக இருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் என தமிழகமே ஸ்தம்பித்து நிற்கும் நிலையில், 'தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?' என்ற கேள்விக்கு விரைவில் விடை கிடைத்தாகவேண்டும்!
- த.கதிரவன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!