வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (16/02/2017)

கடைசி தொடர்பு:15:38 (16/02/2017)

சசிகலா படித்த பள்ளி இப்போது எப்படி இருக்கிறது?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா, தற்போது சிறையில். அ.தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது, அவருக்கு அறிமுகமானவர் சசிகலா. வீடியோ கடை வைத்திருந்த சசிகலா,  ஜெயலலிதா பேசும் பொதுக் கூட்டங்களை வீடியோவாகப் பதிவு செய்து அதை ஜெயலலிதாவுக்கு வழங்கி வந்தார். அப்படித்தான் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. காலப்போக்கில் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர். 

சசிகலா

எம்.ஜி.ஆர் இறந்தபோது, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் ஜெயலலிதா அமர்ந்திருந்தார். அப்போது சிலர், ஜெயலலிதாவை வாகனத்தில் இருந்து கீழே தள்ளி விட்டனர். அந்தச் சம்பவம் காரணமாக, ஜெயலலிதா மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவுக்கு சசிகலா ஆறுதல் கூறித் தேற்றினார். இதனால் இருவருக்குள்ளும் நட்பு பலப்பட்டது. காலப் போக்கில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலேயே சசிகலா தங்கத் தொடங்கினார். 

ஒருகட்டத்தில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா, வேதா இல்லத்தில் இருந்து சசிகலா மற்றும் அவரது உறவினர்களை வெளியேற்றினார். பல கட்ட முயற்சிகளுக்குப் பின் ஜெயலலிதா மீண்டும் சசிகலாவைச் சேர்த்துக் கொண்டார். அப்போது சசிகலா விடுத்த அறிக்கை மிக முக்கியமானது. ''எனக்கு எந்தப் பதவி ஆசையும் இல்லை. எனது மீதிக் காலத்தில் அக்காவுக்குச் சேவை செய்து எனது வாழ்க்கையைக் கழிப்பேன். எந்தக் காலத்திலும் கட்சிப் பதவிக்கோ, வேறு எந்தப் பதவிக்கோ ஆசைப்படமாட்டேன்'' எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது முதல்வர் பதவியில் அமரும் முயற்சியில் ஈடுபட்டு, நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக அதற்கும் வழியின்றி சிறை சென்றுவிட்டார் சசி. 

சரி, சசிகலா என்ன படித்திருக்கிறார் என்று ஆராய்ந்தால், 10-ம் வகுப்பு  பாஸ் செய்யவில்லை என்று தெரிய வந்துள்ளது.  திருத்துறைப்பூண்டியில் 1954-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி பிறந்த சசிகலா ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை அங்குள்ள பஞ்சாயத்துப் பள்ளியில் படித்துள்ளார். 1959, ஜுன் 7-ம் தேதி பள்ளியில், அதாவது முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறார் சசிகலா. பின்னர் 1965-ம் ஆண்டு ஜுன் 9-ம் தேதி  6-ம் வகுப்பில் இணைந்துள்ளார். ஆனால் 10-ம் வகுப்பு படிக்கும்போது படிப்பை நிறுத்தியுள்ளார். ஆனால் சர்டிஃபிகேட்டை 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதிதான் வாங்கிச் சென்றுள்ளார். 

சசிகலா படித்த பள்ளி

இந்தப் பள்ளி தமிழகத்தின் முக்கியப் பிரபலங்களை உருவாக்கியுள்ளது. முன்னாள் டிஜிபி ஏ.எக்ஸ்.அலெக்ஸாண்டர், ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜரத்தினம், இளங்கோவன் போன்றவர்கள்  இங்குதான் படித்துள்ளனர். சசிகலா படிக்கும்போது இந்தப் பள்ளியில் 2,500 பேர் படித்து வந்துள்ளனர். இப்போது 280 ஆகக் குறைந்து விட்டதாம். 6-ம் வகுப்பில் தற்போது 6 பேர்தான் படிக்கின்றனர். 7-ம் வகுப்பில் 7 பேர், 8-ம் வகுப்பில் 5 பேர்தான் படித்து வருகின்றனராம். இப்படியே போனால் பிற்காலத்தில் பள்ளி மூடப்படும் நிலை ஏற்பட்டு விடும் என பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.

சசிகலா படித்த பள்ளி

பெரும்பாலும் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்களே இங்கு படிக்கின்றனர். அதனாலேயே அரசியல்வாதிகளும் இந்தப் பள்ளியைக் கண்டு கொள்வதே இல்லை என்று குறைபட்டுக் கொள்கின்றனர் அந்தப் பகுதிவாசிகள். 1914-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளியில் முறையான கழிவறை வசதி கிடையாது, குழந்தைகளுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருக்கவில்லை. இது குறித்து, பள்ளி மாணவிகள் புகார் அளித்தாலும் யாரும் கண்டு கொள்வதுமில்லை.

தாய்மொழியான தமிழுக்குக்கூட இங்கு ஆசிரியர் இல்லை. கணக்கு , வரலாறு, வணிகவியல் போன்ற முக்கியப் பாடங்களுக்கும்கூட ஆசிரியர்கள் கிடையாது. இயற்பியல், வேதியியல், தாவரவியல் போன்ற பாடங்களுக்கு லேப் வசதியும் இல்லை.  பல ஆண்டுகளாக இதே நிலைதான். பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர்தான் தகுதியான இளம் ஆசிரியர்களைக் கொண்டு ஆசிரியர் இல்லாத பாடங்களுக்குப் பாடம் எடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் சம்பளமும் கொடுக்கின்றனர். 

இதனால், கடந்த 3 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்து போயிருக்கிறது. 12-ம் வகுப்பில் 41 சதவீதம் பேரும், 10-ம் வகுப்பில் 57 சதவீதம் பேருமே பாஸ் ஆகியுள்ளனர். இத்தனை ஆண்டு காலம் முதல்வர் ஜெயலலிதாவுடன்தான் சசிகலா இருந்தார். அப்போது, தான் படித்த பள்ளிக்கு ஏதும் செய்ய வேண்டுமென்று  அவருக்குத் தோன்றவில்லை. இப்பொழுது சிறைக்கு வேறு சென்றுவிட்டார்...  இனி எங்கே செய்யப் போகிறார்? 

- எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க