‘ஆப்ரேஷன் சக்சஸ்....பேஷன்ட் அவுட்!?’ -ஆளுநர் முடிவும் பன்னீர்செல்வத்தின் பதற்றமும் | Behind the Scenes - Tamilnadu's Political Turmoil

வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (16/02/2017)

கடைசி தொடர்பு:12:43 (16/02/2017)

‘ஆப்ரேஷன் சக்சஸ்....பேஷன்ட் அவுட்!?’ -ஆளுநர் முடிவும் பன்னீர்செல்வத்தின் பதற்றமும்

எடப்பாடி பழனிச்சாமி-ஆளுநர் வித்யாசாகர் ராவ்

மிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், நினைவூட்டல் கடிதத்தை நேற்று அளித்தார் சட்டசபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி. இன்று ஆளுநரை சந்திக்கவும் அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்களும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். 'பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக எம்.எல்.ஏக்களை ஒன்றுகூட வைக்கும் முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. கொங்கு மண்டலத்தை உடைக்கும் வேலைகளையும் முதல்வர்  தொடங்கிவிட்டார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

'தமிழக முதல்வர் பன்னீர்செல்வமா? எடப்பாடி பழனிச்சாமியா?' என்ற கேள்விக்கு விடை தெரியாமல் அ.தி.மு.கவினர் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றனர். கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களில், 'யார் ஓ.பி.எஸ் பக்கம்? யார் சசிகலா பக்கம்?' என்பதும் மர்மமாகவே இருக்கிறது. எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் நேரில் வழங்கினார் சசிகலா. அவர் மீதான வழக்குகளைக் காரணம் காட்டி, ஆட்சி அமைக்க காலதாமதம் செய்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இந்நிலையில், தமிழக சட்டசபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. எம்.எல்.ஏக்களின் ஆதரவுப் பட்டியலையும் ஆளுநரிடம் அளித்தார். அவருக்கு இதுவரையில் ஆளுநர் அலுவலகம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. இன்று காலை மூன்றாவது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி. 'இந்த சந்திப்பில் ஏதேனும் முடிவுகள் எட்டப்படுமா?' எனவும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்.

செங்கோட்டையன்"முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு இதுவரையில் ஒன்பது எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லிக்கு அவர் கொடுத்த உறுதிமொழியே, 'நான் வெளியேறினால், 50 எம்.எல்.ஏக்கள் என்னுடன் வருவார்கள்' என்பதுதான். 'அப்படி வந்துவிட்டால், பெரும்பான்மை இல்லாததைக் காரணம் காட்டி, ஆட்சியைக் கலைத்துவிட்டு, ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வரலாம்' எனத் திட்டமிட்டார் அமித் ஷா. தற்போது வரையில் இந்த எண்ணிக்கையை பன்னீர்செல்வத்தால் தொட முடியவில்லை. இதனால், பா.ஜ.க மேலிடமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏக்களை வெளியேற்றுவதற்காக பல முனைகளில் காய் நகர்த்தி வந்தார் தமிழக ஆடிட்டர் ஒருவர். நேற்று வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன் ஆய்வு நடத்தச் சென்றபோதும், 'இங்கு யாரும் அடைத்து வைக்கப்படவில்லை. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரித்துக் கொள்ளுங்கள்' என எம்.எல்.ஏக்கள் கூறிவிட்டனர். கூவத்தூரை கலைக்க முயற்சி செய்தும், முடியாத ஆதங்கத்தில் இருக்கிறார் பன்னீர்செல்வம்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பல வகைகளிலும் ஆதரவு கொடுத்தது கொங்கு மண்டலம்தான். 1989-ம் ஆண்டில் அ.தி.மு.கவின் கோட்டையாக இருந்து வருகிறது. அங்குள்ள பெரும்பான்மை சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தினார் சசிகலா. பன்னீர்செல்வத்துடன் மோதல் வலுத்தபோது, செங்கோட்டையனை அனைத்து இடங்களிலும் முன்னிலைப்படுத்தினார். ஓ.பி.எஸ் அணியை நோக்கி அவைத் தலைவர் மதுசூதனன் சென்றபோது, அவர் வகித்த பதவியை செங்கோட்டையனுக்குக் கொடுத்தார் சசிகலா. ஆனால், ஆட்சியின் தலைமைப் பதவிக்கு கொங்கு மண்டலத்தின் சீனியரான அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், எடப்பாடியை முன்னிறுத்துவதை கொங்கு மண்டல கட்சிக்காரர்கள் சிலர் விரும்பவில்லை. 'எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அரசியல் செய்து வருகிறார். தலைமைப் பதவிக்கு அவரை முன்னிறுத்தியிருந்தால், பன்னீர்செல்வம் அணியின் முக்கியத்துவம் குறைந்திருக்கும்' என்ற குரல்களும் எழும்பின. 

சசிகலாகொங்கு மண்டலத்தை உடைத்துவிட்டால், பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வம் பக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கேற்ப, செங்கோட்டையன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் மனதைக் கலைக்கும் வேலைகளில் பன்னீர்செல்வம் தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. நேற்று கூவத்தூரில் இரு அணிகளுக்கும் இடையில் வாக்குவாதம் மூண்டதாகவும் செய்தி பரப்பப்பட்டது. 'இதன் பின்னணியில் பன்னீர்செல்வம் அணியின் பங்களிப்பு இருக்கிறது' எனக் கொதிக்கின்றனர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சிலர். 'செங்கோட்டையனுக்குப் பதவி பறிபோனதற்குக் காரணமே பன்னீர்செல்வம்தான். எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன் இருப்பதைத்தான் செங்கோட்டையன் விரும்புகிறார். எடப்பாடிக்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார். இப்படியெல்லாம் செய்தியை பரவச் செய்து, அணியை உடைக்க முயற்சி செய்கிறார் பன்னீர்செல்வம்' எனவும் ஆவேசப்படுகின்றனர். பன்னீர்செல்வம் பக்கம் சென்ற கோவை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம், 'நமது சமூகத்தைச் சேர்ந்தவரை தலைமைப் பதவியில் அமர்த்தியிருக்கிறார் சசிகலா. அவருக்கு ஆதரவு கொடுங்கள்' என சிலர் பேச வந்தபோது, மறுத்துவிட்டார் ஆறுக்குட்டி. சசிகலா தற்போது சிறையில் இருப்பதால், கலைப்பு அஸ்திரத்தை பலமாகவே பிரயோகிக்க இருக்கிறார் ஓ.பி.எஸ்" என்றார் விரிவாக. 

பன்னீர்செல்வம்"அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளை இதுவரையில் விமர்சிக்கவில்லை. மோடியை விமர்சிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால்கூட அமைதியாகவே இருக்கிறார். சசிகலாவை ஆதரித்தால், 'ஊழல்வாதிக்கு சப்போர்ட்டா?' என்ற விமர்சனம் கிளம்பும் என்பதால், அனைவரும் மௌனம் காக்கின்றனர். டெல்லியில் இருந்தும் ஆளுநருக்கு எந்த அழுத்தமும் வரவில்லை. அ.தி.மு.கவை சிதறடிக்கும் அமித் ஷாவின் வியூகங்களுக்கு பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் பலியாகவில்லை. இவர்கள் மனதைக் கலைப்பதற்கு அனைத்து அஸ்திரங்களையும் அவர் பிரயோகித்து வருகிறார். 'பன்னீர்செல்வத்திற்கு பலம் கொடுக்கும் அவரது முயற்சிகள் பலிக்குமா?' என்று தெரியவில்லை.

காலஅவகாசம் இருந்தும் பன்னீர்செல்வத்தால் எதையும் முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. 'எம்.எல்.ஏக்களை சுதந்திரமாக உலவவிட்டால் என் பக்கம் வருவார்கள்' எனப் பேசிக் கொண்டு வருகிறார் ஓ.பி.எஸ். அதிரடிப்படை நுழைந்தும் போலீஸ் படை குவிக்கப்பட்டும் எதுவும் நடக்காத வருத்தத்தில் இருக்கிறார். 'இனியும் காலம் தாழ்த்துவது தேவையற்ற விவாதங்களை உருவாக்கும்' என்பதால் எடப்பாடியை அழைத்திருக்கிறார் ஆளுநர்" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

மிகுந்த நம்பிக்கையோடு ஆளுநர் அலுவலகத்திற்குப் பயணமானார் எடப்பாடி பழனிச்சாமி. ' இன்று பதவியேற்பார் பழனிச்சாமி' என நம்பிக்கையோடு காத்திருந்தார்கள் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள். அவர்களின் நம்பிக்கையும் பொய்த்துப் போகவில்லை. இன்று மாலை புதிய முதல்வராகப் பதவியேற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. '15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என்ற நெருக்கடிக்கும் அவர் ஆளாகியிருக்கிறார். சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.  
 

- ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்