வெளியிடப்பட்ட நேரம்: 06:39 (17/02/2017)

கடைசி தொடர்பு:19:26 (17/02/2017)

முன்னாள், இந்நாள் முதல்வர்களின் இல்லங்கள் நள்ளிரவில் எப்படி இருக்கின்றன? #SpotVisit

மிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி நேற்று பதவியேற்றுவிட்டார். தமிழக முதல்வர்களின் பட்டியலில் அவரது பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது.

சரி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளும், இந்நாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி வீடும் இரவில் எப்படி இருக்கின்றன, அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய ஒரு ரவுண்ட் அடித்தோம். அங்கு நடந்தது அனைத்தும் அப்படியே இங்கே... 

மு.கருணாநிதி, கோபாலபுரம் : 

கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு இரவு 10.30 மணிக்கு சென்றோம். வீட்டு நுழைவாயிலில் துப்பாக்கியுடன் இரு காவலர்கள், பின் வாசலில் ஒரு காவலர் என மொத்தம் மூன்று காவலர்கள் வீட்டைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு தலைமையாக ஒரு எஸ்.பி-யும் அங்கு இருந்தார். இவர்கள் நால்வரைத் தவிர, அந்த இரவில் வேறு யாரையும் காணோம். நாம் சென்றதும், நிதானமாக வந்து நம்மை விசாரித்தார்கள். அதன்பின் வெகு இயல்பாக நம்மிடம் பேசத்தொடங்கினார்கள். 

கலைஞர் இல்லம்

"சார், தலைவர் முதல் தளத்தில் இருக்கார். இப்போ கீழே வருவது கிடையாது. தளபதி வந்தார்ன்னா, சில எம்.எல்.ஏ-க்கள் அவர்கூட  வருவாங்க. அய்யாவை போய் பார்த்துட்டு கிளம்பிடுவாங்க. மற்றபடி இரவு நேரத்தில் யாரும் வரமாட்டாங்க. அதிகபட்சம் ஒன்பது மணிக்கே இந்த ஏரியா கப்சிப்னு அமைதியாகிடும். வெளியூர்ல இருந்து யாராவது வந்தாங்கன்னா... 'இதுதான் கலைஞர் இல்லமா?'னு ஆச்சர்யமாகப் பார்ப்பாங்க. எங்ககிட்ட 'போட்டோ எடுத்துக்கலாமா?'னு கேட்பாங்க. 'அமைதியாக எடுத்துட்டுப் போங்க'னு நாங்க சொன்னதும், அவர்களும் போட்டோ பிடித்துக்கொண்டு போய்டுவாங்க. நாங்களும் யாருக்கும் எந்த கெடுபிடியும் கொடுக்கறதில்லை. நாங்க இங்கயே மாறி மாறி ட்யூட்டியில் இருப்பதால், அடிக்கடி அய்யாவை (கருணாநிதியை) பார்ப்போம். ஒரு பிரச்னையும் இல்லை." என்றவரிடம், "வாசல் கதவு, இந்த நேரத்திலும் திறந்தே இருக்கிறதே?" என கேட்டோம்... சிரித்தவர், "சார், அய்யா வீட்டு கதவு பெரும்பாலும் மூடவே மாட்டாங்க. எப்போதுமே திறந்துதான் இருக்கும். வெளியே நாங்கதான் பாதுகாப்புக்கு இருக்கோமே. எந்த தலைவர் வீட்டிலும் இல்லாத ஸ்பெஷல் இது" என பஞ்ச் வைத்து சிரித்தவர் மீண்டும் அவரது இடத்திலேயே துப்பாக்கியைப் பிடித்த நிலையில்போய் நின்றுகொண்டார். பாதுகாப்பு காவலர்களுக்கு நள்ளிரவில் டீ, காபி மற்றும் ஸ்நாக்ஸ் கருணாநிதி வீட்டில் இருந்தே கொடுக்கிறார்கள். 

கலைஞர் இல்லம்

 

ஜெயலலிதா, போயஸ் கார்டன் : 

இரவு 11 மணி, ஜெயலலிதா வீட்டுக்கு செல்லும் பின்னி சாலை நுழைவாயில் தொடங்கி மொத்தம் ஐந்து இடங்களில் இன்னமும் காவலர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் நான்கு முதல் ஐந்து காவலர்கள் வீதம் நின்றுகொண்டிருந்தார்கள்.  தோராயமாக 30 காவலர்களுக்கு மேல் இரவுப் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இங்கு எந்த தெருவில் யார் நுழைந்தாலும் காவலர்கள் கண்ணில் படாமல் நுழையவே முடியாது. ஜெயலலிதா இறந்த பிறகும், சசிகலா சிறைக்கு சென்ற பிறகும்கூட இவ்வளவு காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. 'யாருக்காக இவ்வளவு பாதுகாப்பு?' என நினைத்துக்கொண்டே 'வேதா இல்லம்' அடைந்தோம். இங்கு மூன்று காவலர்களும், சஃபாரி உடை அணிந்த ஐந்து பவுன்சர்களும் நின்று கொண்டிருந்தார்கள். 

போயஸ் கார்டன்

அப்போது, ஜெயலலிதா இல்லத்தைக் காண, இந்த நள்ளிரவு வேலையிலும் ஒருவர் வந்திருந்தார். அவரைப் பார்த்த ஒரு பவுன்சர், "இந்த நேரத்துல... உனக்கு இங்க என்ன வேலை? கிளம்பு... கிளம்பு..." என கடுகடுத்தார். "நான் வெளியூர்ல இருந்து வர்றேன்.  இப்பதான் என் வேலை முடிஞ்சது. அப்படியே அம்மா வீட்டைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்'' என்றவரை... "அதுதான் பார்த்தாச்சில்ல இடத்தைக் காலி பண்ணு." என்றார். அங்கிருந்த காவலர்களும் அவரை கிளம்பச் சொன்னார்கள். நம்மையும் ''இந்த நேரத்துல வீட்டை போட்டோ எல்லாம் எடுக்கக்கூடாது. காலையில வாங்க.'' என அதிகார தோரணையில் சொன்னார் அந்த காவலர். அதற்குள் வீட்டு வாசலில் நின்ற இன்னொரு பவுன்சர் வந்து அதே துதியை பாடினார். ஜெயலலிதா இங்கு இருக்கும்போதும் இதே கெடுபிடிகள்தான் இருந்தன. அப்போது காவலர்கள் இந்த வேலையைச் செய்வார்கள்; இன்று பவுன்சர்கள் செய்கிறார்கள். அங்கிருந்து கிளம்பினோம். நம்முடனே வந்த அந்த நபர், "நான் என்ன சார் தப்பு பண்ணினேன்? வீட்டைக்கூட பார்க்க விட மாட்டேன்கிறாங்க. ஆளே இல்லாத கடையில யாருக்குத்தான் டீ ஆத்துறாங்களோ...?" என்று பகபகவென சிரித்துக்கொண்டே விடைபெற்று கிளம்பினார். 

ஓ.பன்னீர்செல்வம், க்ரீன்வேஸ் சாலை :

கடந்த சில நாட்களாக 24 / 7 பரபரப்பாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இல்லம் நேற்று இரவு கனத்த அமைதியில் உறைந்து நின்றது. சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட மூன்று அமைச்சர்களின் வீடும் ஓ.பி.எஸ் இல்லத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஓ.பி.எஸ் இல்லத்துக்கு  நள்ளிரவு வேலையிலும் செய்தியாளர்கள் செல்ல அனுமதி தந்த காவல்துறை, நேற்று இரவு அனுமதி தரவில்லை. ஹெச்.ராஜா சந்திப்புக்கு பின்தான், இந்த உத்தரவு தங்களுக்கு வந்ததாக அங்கு நின்ற பாதுகாப்பு அதிகாரி நம்மிடம் சொன்னார்.  பல பத்திரிகையாளர்கள், கையில் மைக்குடன் அந்த சாலையிலேயே இருந்தார்கள். ஓ.பி.எஸ் ஆதரவு ஆட்களும் இருந்தனர். சிறப்பு காவல் படை, ஆயுதப் படை என மொத்தம் 20-க்கும் அதிகமான எண்ணிக்கையில் காவலர்கள் பணியில் இருந்தனர். இதற்கு முக்கிய காரணம், நேற்று மாலையில் ஓ.பி.எஸ் வீட்டு முன் நடந்த கல்வீச்சு சம்பவம்தான்.!

ஓ.பி.எஸ் வீடு

அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு காவலர், "நேத்து வரைக்கும் இரவு அண்டா அண்டாவாக பிரியாணி செஞ்சு வர்ற எல்லாருக்கும் போட்டுட்டு இருந்தாங்க. இந்த பிரச்னைக்கு அப்புறம்தான் அதை நிறுத்திட்டாங்க. ஒரு வாரமா ஓ.பி.எஸ் வீட்டுல பிரியாணி போடுறாங்கன்னே பல பேர் இங்கே வந்தாங்க. நாங்க ஒருவாரமாக இங்கதான ட்யூட்டியில இருக்கோம். அதுனால எங்களுக்கு தெரியும். மற்றபடி ஓ.பி.எஸ் வீட்டு ட்யூட்டின்னா நாங்க கொஞ்சம் ஹாப்பி ஆகிடுவோம். பெரிசா எந்த வேலையும் இருக்காது. அவரும் எதுவும் சொல்லமாட்டார்." என ஜாலியாக நம்மிடம் கமெண்ட் அடித்தவர். "ஆனா சார், நேத்து வரைக்கும் ஓ.பி.எஸ் வெளியே போனார்ன்னா... அவர்கூட கான்வாய்ல ஏகப்பட்ட கார்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் போவாங்க. இப்ப ஓவர் நைட்ல எல்லா காரும், பாதுகாப்பு அதிகாரியும் பக்கத்து ஏரியாக்கு போய்ட்டாங்க." என்றார் ஏமாற்றம் நிறைந்த குரலில்... எடப்பாடி பழனிசாமி சி.எம் ஆனதைத்தான் அவர் இப்படிச் சொல்கிறார். 

எடப்பாடி பழனிசாமி, க்ரீன்வேஸ் சாலை : 

இரவு 12 மணி. முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு செல்லும் சாலையில்  இரண்டு காவல்துறை அதிகாரிகள் மட்டும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களிடம் நாம் யார் என்று சொன்னதும், கொஞ்சம் தயக்கமாகவே உள்ளே அனுப்பினார்கள். பழனிசாமி வீட்டுக்கு இடதுபுறம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு. வலது புறம் காலி இடம். அதன் அருகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பலரது இல்லங்களும் இவரது வீட்டை ஒட்டித்தான்  அமைந்திருக்கின்றன. 

பழனிச்சாமி வீடு

பழனிசாமி வீட்டுக்கு அருகில் ஒரு நபரைக்கூட காண முடியவில்லை. ஒரு காவல்துறை ஆய்வாளர் தலைமையில், மூன்று காவலர்கள்  மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களும் ஒரு ஓரமாக சேர் போட்டு, தங்களது மொபைல் போனில், வடிவேலு காமெடியை ரசித்துக்கொண்டிந்தார்கள். நாம் முதல்வர் வீட்டு வாசலில் நின்று படம் எடுப்பதைக்கூட யாருமே சட்டை செய்யவில்லை. பழனிசாமி வீட்டுமுன் 'செவ்வந்தி' என எழுதி இருந்தது. அங்கு உள்ள அனைத்து வீடுகளுக்கும் பூக்களின் பெயர்களையும், அருவியின் பெயர்களையும் வைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில், பழனிசாமிக்குக் கிடைத்து இருப்பது செவ்வந்தி.! 

மாடு

வீட்டு வாசல் முன்னே சிறிது நேரம் நின்றோம்.  அந்த வழியாக வந்த ஒருவர் நம்மிடம் பேச்சுகொடுத்தார், "சார், நீங்க ரிப்போர்ட்டரா? நான் இந்த ஏரியாவுலதான் ஒரு ஜட்ஜ் வீட்டுல வேலை பார்க்கிறேன். முதல்வர் பதவியேற்றதும்  இங்கதான் வந்தார். யாருமே கூட வரலையே? நியூஸ் வாசிக்கும் ஒரு அம்மா மட்டும்தான் கூடவந்தாங்க. அப்புறம் அ.தி.மு.க-வில் உள்ள பல எம்.எல்.ஏ-க்களை இவர் வீட்டுல இருந்துதான் கூவத்தூர் கூட்டிட்டுப் போனாங்க. இன்னமும் அவங்களை வெளியே விடலை போலயே? இப்ப கூட இவர் கூவத்தூருக்குத்தான் போயிருக்கார்..." என பேசிக்கொண்டே இருந்தார். அப்போது முதல்வர் வீட்டில் இருந்து வெளியே வந்த ஒரு அதிகாரி, "சார், சி.எம். கான்வாய் வருது. கொஞ்சம் ஓரமாக நில்லுங்க. எந்தப் பத்திரிகை?" என கேட்டுவிட்டு உள்ளே சென்றவர், மறுபடியும் மின்னல் வேகத்தில் வெளியே வந்தார். "சாரி சார். உங்களை கிளம்ப சொல்றாங்க. இந்த தெருவுலயே நிக்காதீங்க. ரோட்டுல போய் வேணும்னா படம் எடுங்க. எங்களுக்குப் பிரச்னை ஆகிடும் ப்ளீஸ்." என கெஞ்சும் தொனியில் சொன்னார்.

பழனிச்சாமி

நாமும் அங்கிருந்து கிளம்பி சாலைக்கு வந்தோம். போக்குவரத்து அதிகாரிகள் இருவர் மட்டும் வாக்கி டாக்கியில் பேசிக்கொண்டிருந்தனர். " சி.எம் கான்வாய்... நீலாங்கரையைத் தாண்டி வந்துட்டு இருக்கு..." என்ற குரல் சன்னமாக ஒலித்தது. அதற்குள் மூன்று மாடுகள் சி.எம். வீட்டு சாலையில் நுழைய "கான்வாய் வர நேரத்துல இதுவேற..."  என அலுத்துக்கொண்டே அந்த இரண்டு போலீஸ்காரர்களும் மாடுகளை துரத்த ஆரம்பித்தார்கள். சரியாக 12.27 மணிக்கு சைரன் வைத்த காரில் வந்தார் முதல்வர். நாம் அந்த கான்வாயை போட்டோக்களாக க்ளிக்கிக் கொண்டிருந்ததை காரிலிருந்து பார்த்துக்கொண்டே சென்றார் முதலமைச்சர் பழனிசாமி.!

இப்படியாக இந்நாள்... முன்னாள் முதல்வர்களின் வீடு நள்ளிரவில் இருக்கின்றன...

 

- நா.சிபிச்சக்கரவர்த்தி 
படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்