'சபாநாயகர் மீதே நம்பிக்கை இல்லை!' -ஓ.பன்னீர்செல்வம் அணியின் 'திடீர்' வியூகம்

பன்னீர்செல்வம்

மிழக சட்டப் பேரவையில் நாளை நடக்கப்போகும் காட்சிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். ' சபையில் உறுப்பினர்கள் வெளிப்படையாக வாக்களிக்கும் நடைமுறைக்குப் பதிலாக, ரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கு சபாநாயகரை நிர்பந்திக்க வேண்டும். அப்போதுதான் நமது ஆதரவு எம்.எல்.ஏக்களின் பலத்தை அதிகரிக்க முடியும்' என பன்னீர்செல்வம் தரப்பில் திட்டமிட்டுள்ளனர். 

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியை நியமித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், '15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு' உத்தரவிட்டார். ' நாளை வரையில் அவர் முதல்வராக நீடிப்பதே சந்தேகம்தான்' என அதிர வைத்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். ' அ.தி.மு.க தரப்பில் இருந்து ஏழு எம்.எல்.ஏக்களை இழுத்துவிட்டாலே, பழனிசாமி ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியும்' என்பதால், அதற்கேற்ப வியூகங்களையும் வகுக்கத் தொடங்கியுள்ளனர் ஓ.பி.எஸ் அணியினர். " சட்டப் பேரவை கூடுவதற்கு முன்பு, சபாநாயகர் தனபாலிடம் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு ஒன்றை அளிக்க உள்ளனர். அதில், ' கூவத்தூர் தனியார் விடுதியில் வைத்து எம்.எல்.ஏக்களை நிர்பந்திப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை சுதந்திரமாக செயல்படவைக்கும் முடிவில் ஆளும்கட்சி இல்லை. அவர்களில் பலர் மிரட்டப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், வெளிப்படையான வாக்கெடுப்பு நடக்கும்போது, தங்கள் ஆதரவையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தால், வேறு எதேனும் விளைவுகள் ஏற்படுமோ என அவர்கள் அச்சப்படவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, எம்.எல்.ஏக்களிடம் ரகசிய வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் முன்வர வேண்டும். அப்போதுதான், 'யாருக்கு உண்மையான செல்வாக்கு?' என்பது தெரிய வரும்' எனத் தெரிவிக்க உள்ளனர். இதற்கு சபாநாயகர் தனபால் எதிர்ப்பு தெரிவித்தால், அவர் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கும் ஓ.பி.எஸ் தரப்பில் தயாராக இருக்கிறார்கள். சபை நடவடிக்கைகளில் நாளை அதிரடியான திருப்பங்கள் நடக்கும்" என்கிறார் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர். 

தனபால்" இன்று மாலை, தி.மு.க எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடக்க இருக்கிறது. இதில், ' சபையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?' என்பது குறித்து கட்சியின் கொறடா தெளிவுபடுத்துவார். ' யாருக்கும் ஆதரவு இல்லை' என செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துவிட்டார். சபையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்கும் முடிவை எடுத்திருக்கிறோம். ரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஓ.பி.எஸ் அணியினர் வலியுறுத்தும்போது, எங்களின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கட்சித் தலைமை அறிவிக்கும். சபை நடவடிக்கைளில் தி.மு.கவின் முயற்சிக்கு காங்கிரஸ் துணை நிற்கும். அ.தி.மு.க-விற்குள்ளேயே பிணக்கு ஏற்பட்டு, ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என உறுதியாக நம்புகிறோம். 'இப்படியொரு காட்சி அரங்கேறும் வரையில் அமைதிகாக்க வேண்டும்' என்றுதான் ஸ்டாலின் விரும்புகிறார். அவசரப்பட்டு ஆட்சி அமைத்தால், மக்கள் மத்தியில் வேறு மாதிரியான தோற்றம் ஏற்படும் என்பதுதான் பிரதான காரணம். இவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போகும்போது, ஆளுநரைச் சந்திக்கும் முடிவில் இருக்கிறார் ஸ்டாலின்" என்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர். 

சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதரணி எம்.எல்.ஏவிடம் பேசினோம். " சபையில் அமைதியாக இருக்க வேண்டும் என எங்கள் எம்.எல்.ஏக்களிடம் தெரிவித்திருக்கிறோம். ஆளும்கட்சி தரப்பில் இருந்து எங்களிடம் எந்த ஆதரவையும் கேட்கவில்லை. ரகசிய வாக்கெடுப்பு நடந்தால், குதிரைப் பேரம் நடந்ததா எனத் தெரியும். வெளிப்படையாக வாக்களிக்கும்போது, எம்.எல்.ஏக்கள் வேறு அணியின் பக்கம் செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. எங்கள் கட்சியின் அகில இந்திய தலைமையும் மாநிலத் தலைமையும் என்ன உத்தரவிடுகிறதோ அதன்படி செயல்படுவோம்" என்றார் உறுதியாக. 

-ஆ.விஜயானந்த்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!