அ.தி.மு.க என்றால் 'அண்ணன் தினகரன் முன்னேற்றக் கழகமா'? டி.டி.வி தினகரன் மனைவியின் பதில் என்ன?!

டி டி வி தினகரன்

அ.தி.மு.க -வின் 'பொதுச்செயலாளர்' ஆகியிருக்கிறார், டி.டி.வி. தினகரன். குழப்பமாக இருக்கிறதா... கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்குச் சென்றுவிட்ட நிலையில், அ.தி.மு.க  சட்ட விதிமுறைகளின்படி பொதுச்செயலாளர் பொறுப்புகளை ஏற்று நடத்தப்போவது, துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் இனி அவர்தானே!  அ.தி.மு.க.வின் கழக அமைப்புச் செயலாளர் ஆகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அ.தி.மு.க.வில் ஒரு காலத்தில் கோலோச்சிய தினகரன், திடீரென ஒருநாள் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டு காணாமல் போனார்.

அதன்பின், ஜெயலலிதா இருந்தவரை கட்சியின் பக்கமே தலைவைத்துப்படுக்காதவர், அவரது மறைவுக்குப்பின் ஜெயலலிதா  வகித்த பதவிக்கு நெருக்கமான துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்திருக்கிறார். அவரின் மனைவி அனுராதா தினகரன், கட்சியின் தொலைக்காட்சியில் நிர்வாக இயக்குநராக ஒரு காலத்தில் இருந்தவர். அப்போது தன் கணவர் தினகரன், சசிகலா மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குறித்து 26-ம் தேதி, மே மாதம், 2000-ம் வருடம் அவள் விகடனுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியிலிருந்து ருசிகரமான சில பதில்களை மட்டும் இங்கே தருகிறோம்.

உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள். ‘மிசஸ் தினகரன்’ ஆனது எப்படி? 

சொந்த ஊர் தஞ்சாவூர். அப்பா சுந்தரவதனம். பாங்க் ஆபீஸர் என்பதால் பல ஊர்களில் பள்ளிப்படிப்பு தொடர்ந்தது. தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் காலேஜில் பி.எஸ்.ஸி கணிதம் படித்தேன். அம்மா சந்தானலட்சுமி இல்லத்தரசி. அக்கா பிரபா. தம்பி வெங்கடேஷ் இப்போது ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜில் படிக்கிறான். தினகரன் சொந்த அத்தை மகன்தான். இருவரும் விரும்பி, பெற்றோரின் ஆசியோடு ’92 அக்டோபர் 30-ல் திருமணமானது. இதுதான் பின்னணி. போதுமா? (சிரிக்கிறார்) 

அனுராதா தினகரன்பெண் என்ற முறையில் தனிப்பட்ட சிக்கல்கள் எதுவும் வந்ததுண்டா? 

இல்லை. எல்லா வீடுகளிலும் குடும்ப நிர்வாகம் பெண்கள் கையில்தான் இருக்கிறது. இதுவும் அதே மாதிரிதான். பெண்களின் ரத்தத்தில் இயல்பாகவே நிர்வாகத் திறமை இருப்பதாக நினைக்கிறேன். 

அரசியல் விவகாரத்தில் உங்கள் கணவருக்கு ஆலோசனை சொல்வீர்களா..? டி.வி விஷயத்தில் அவர் உங்களுக்கு யோசனை சொல்வாரா..? 

இரண்டுமே உண்டு! சமீபத்தில் 'ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளராக’ என் கணவரை ‘அம்மா’ நியமித்தபோது, 'அம்மா உங்கள் மேல் நம்பிக்கைவைத்து பெரிய பதவியைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்ய வேண்டும்" என்று கூறினேன். டி.வி-யைப் பொறுத்த அளவில், படக்காட்சி இல்லாமல் எந்தச் செய்தியையும் ஒளிபரப்பக் கூடாது என்பது என் கணவரின் ஆலோசனை.

ஜெயலலிதா - சசிகலா இருவரையும் எப்படி அழைப்பீர்கள்? 

அத்தை என்று! அவங்க பெரியத்தை. இவங்க (சசிகலா) சின்னத்தை! 
(பிறரிடம் ஜெயலலிதா பற்றிக் குறிப்பிடும்போது, 'அம்மா’ என்றுதான் சொல்கிறார்). 

நிகழ்ச்சித் தயாரிப்பிலும் நிர்வாகத்திலும் ஜெயலலிதா ஆலோசனை சொல்வதுண்டா? 

நிர்வாக விஷயத்தில் தலையிடுவதில்லை. நிகழ்ச்சிகள் பற்றி நிறைய ஆலோசனைகள் சொல்வார். குறிப்பாக, நியூஸ் பற்றி. ‘எல்லா கட்சிக்காரர்களும் கட்சியில்லாத பொதுமக்களும் விரும்பிப் பார்க்கும்படி செய்திகள் நடுநிலையோடு, இருக்க வேண்டும். ஒருதலைப் பட்சமான செய்திகள் கூடாது' என்று கண்டிப்புடன் சொல்வார்.

உங்கள் கணவரை மையமாக வைத்து நடத்தப்படும் அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அ.தி.மு.க. என்றால் "அண்ணன் தினகரன் முன்னேற்றக் கழகம்" என்கிறார்களே..?

(சிரிக்கிறார்.) கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்கள்தான் அப்படிச் சொல்கிறார்கள். தம் தப்பை மறைக்க, இப்படிப் பொய்யான பிரச்னையைக் கிளப்புகிறார்கள். இதனால், கட்சிக்குள் கலகம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார்கள். பகல் கனவு பலிக்காது. என் கணவர் கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டால், அவர் மீதும் ‘அம்மா’ இதே மாதிரி நடவடிக்கைதான் எடுப்பார். அதில் பாரபட்சம் இருக்காது.

ஜெயலலிதா

சமைக்கத் தெரியுமா? உங்கள் கைப்பக்குவத்தில் உங்கள் கணவருக்குப்  பிடித்த அயிட்டம் எது?

சைனீஸ் உணவு வகைகள், பிரியாணி நன்றாகச் செய்வேன். சின்னச்சின்னதாக கொழுக்கட்டை மாதிரி நான் தயாரிக்கும் ‘நீர் உருண்டை’ கணவருக்கு கொள்ளைப் பிரியம். அசைவப் பிரியராக இருந்த அவர், இப்போது சைவத்துக்கு மாறி வருவதால், அவ்வப்போது வெஜிடபிள் பிரியாணி செய்யச் சொல்வார்.

திருவண்ணாமலையில் சமீபத்தில் உங்கள் குழந்தைக்கு காதுகுத்தியபோது ஏற்பட்ட மறக்கமுடியாத சம்பவம் ஏதாவது..?

அத்தைகள் இருவரும் வந்திருந்து குழந்தையை ஆசீர்வதித்ததையே பாக்கியமாக நினைக்கிறேன். மொட்டையடிக்கும்போது குழந்தை ரொம்ப அழுது மயக்கமாகிவிட்டது. அதைப் பார்த்து, ‘அம்மா’ துடித்துப்போய்விட்டார். குழந்தை நார்மலாக ஆனதும்தான் அம்மா முகத்தில் சிரிப்பே வந்தது. 

டி.வி-யில் செய்தி வாசிக்கும் பெண்களுக்கு யூனிஃபார்ம் கொடுக்கும் ஐடியா எப்படி வந்தது..? 

டி.வி-யில் நியூஸ் வாசிக்கும் பெண்கள் என்ன சேலை, நகை அணிந்திருக்கிறார்கள் என்பதைத்தான் பலரும் கவனிக்கிறார்கள். அதற்குள் ‘தலைப்புச் செய்திகள்’ போய்விடுகிறது. அப்புறம் கொஞ்சநேரம் பார்த்துவிட்டு, வேறு சேனலுக்குப் போய்விடுகிறார்கள். இதனால் செய்திக்கு உண்டான முக்கியத்துவம் போய்விடுகிறது. இதைத் தவிர்க்கத்தான் யூனிபார்ம் புடவை சிஸ்டத்தைக் கொண்டுவந்தேன். மற்ற சேனல்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டவும் இந்த ஐடியா உருவாயிற்று.

சசிகலா

ஜெயலலிதா - சசிகலா இருவரும் விரும்பிப் பார்க்கும் வேறு சேனல் எது?

பி.பி.சி முதல் நம்மூர் சேனல்கள் வரை நியூஸை தவறாமல் பார்ப்பார்கள். மற்றபடி 'அம்மா’வுக்குப் பழைய பாடல்கள் பார்ப்பதும் ரொம்பப்  பிடிக்கும். 

அரசியலில் ஈடுபடும் எண்ணம் உண்டா? 

 இல்லை. 

- தொகுப்பு; எஸ்.கிருபாகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!