'124 அல்ல....அதுக்கும் மேல..!' - ஆளுநரை ஏன் சந்தித்தார் திவாகரன்? 

திவாகரன்-ஆளுநர் வித்யாசாகர் ராவ்

'தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பாரா?' என்பதற்கான விடை நாளை தெரிந்துவிடும். 'பெரும்பான்மை பலத்தை எளிதாக நிரூபிக்க முடியும் என நம்புகிறார் பழனிசாமி. ஆளுநரை திவாகரன் சந்தித்த பின்னணியிலும் சில விஷயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

தமிழக சட்டப் பேரவையில் நாளை காலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. 'அரசுக்கு ஆதரவாக வாக்களியுங்கள்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார் அ.தி.மு.கவின் சட்டமன்றக் கொறடா ராஜேந்திரன். 'எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விரும்பவில்லை. கட்சித் தாவல் தடை சட்டம் பாய்ந்தாலும் பரவாயில்லை' என அதிர வைத்திருக்கிறார் மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ். " அ.தி.மு.க கொறடாவின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்தால், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிபோய்விடும். எனவேதான், ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை வைத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்தக் கோரிக்கை ஏற்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. எம்.எல்.ஏக்களில் பெரும் பகுதியினர் எடப்பாடியை ஆதரிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். எதிர் முகாமுக்குச் சென்றவர்களிடமும் கார்டன் டீம் பேசி வருகிறது. முன்பைவிட அதிக உற்சாகத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. '124 எம்.எல்.ஏக்கள் நம்மிடம் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறோம். நாளை நடக்கும் வாக்கெடுப்பில் 130 எம்.எல்.ஏக்களுக்கு மேல் நமக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்' என நம்பிக்கையோடு பேசி வருகிறார்கள். அதற்கேற்ப, எம்.எல்.ஏக்களுக்கு வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. 'ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரனைக் கட்சியில் சேர்த்தது செல்லாது' என மதுசூதனன் தெரிவிக்கிறார். அப்படியானால், 'ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட சட்டமன்ற கொறடா ராஜேந்திரனின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது சட்டமன்ற உறுப்பினர்களின் கடமை' என அ.தி.மு.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர். கொறடா உத்தரவை மீறுபவர்கள் எம்.எல்.ஏவாக பதவியில் நீடிக்க முடியாது" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

எடப்பாடி பழனிசாமி"நேற்று ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட பிறகு, சசிகலாவின் தம்பி திவாகரனைச் சந்தித்தார் வித்யாசாகர் ராவ். இந்த சந்திப்பில் அவரது மகன் ஜெய் ஆனந்த்தும் இருந்தார். சந்திப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் வாட்ஸ்அப் குழுக்களில் இந்தப் படங்கள் பரவியது. இவ்வளவு விரைவாக, படங்களை அனுப்புவதற்குக் காரணமே, 'ஆளுநர் எங்கள் பக்கம் இருக்கிறார்' என்பதை பன்னீர்செல்வம் அணிக்குக் காட்டுவதற்குத்தான். இந்த சந்திப்பில், மரியாதை நிமித்தமாகப் பேசிக் கொண்டனர். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் புனேவில் செட்டில் ஆகிவிட்ட, தஞ்சாவூரைச் சேர்ந்த கல்வித் தந்தை ஒருவர்தான். திவாகரனுக்கும் இவர்தான் காட் ஃபாதர். 2011-ம் ஆண்டு ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளான திவாகரன் மீது வழக்குகள் பதியப்பட்டன. புனையப்பட்ட வழக்குகள்தான் என்றாலும், சிறைத் தண்டனையில் இருந்து தப்பிக்க, திவாகரன் அடைக்கலமானது இவரிடம்தான். பிறகு, குடும்ப உறுப்பினர்களைக் காரணம் காட்டி நெருக்குதல் கொடுத்ததும், காவல்துறையில் சரணடைந்தார். கடந்த 11 நாட்களாக ஆளுநரை மையப்படுத்தியே தமிழக அரசியல் சுழன்றது. 'பன்னீர்செல்வம் அணிக்கே ஆளுநர் ஆதரவு' என்ற தகவல் பரவியது. இதை முறியடிக்க, புனே கல்வித் தந்தையின் ஏற்பாட்டின்படி ஆளுநரை சந்தித்தார் திவாகரன். இந்த சந்திப்பில், ' சிறப்பான ஆட்சியைக் கொடுங்கள்' என ஆளுநர் அறிவுறுத்தியதாகவும் செய்தி வெளியானது. மரியாதை நிமித்தமான சில நிமிட சந்திப்பு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றப்பட்டுவிட்டது" என்றார் விரிவாக. 

" தமிழகத்தில் பன்னீர்செல்வத்தின் மூலம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள பா.ஜ.க தலைமை முயன்றது. எம்.எல்.ஏக்களை உடைக்க முடியாததால், எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் எடப்பாடி வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதால், மத்திய அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தவில்லை. ஓ.பி.எஸ் பக்கம் சென்ற எம்.பிக்களில் இரண்டு பேரை இழுத்துவிட்டால், மற்றவர்களும் வந்துவிடுவார்கள்' என்பதை அறிந்து, காய்களை நகர்த்தி வருகிறார் தினகரன். மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்று, காரியங்களை சாதிக்கும் முடிவில் இருக்கிறது கார்டன். கைதிகள் பரிமாற்றத்தின்படி, பெங்களூரூ சிறையில் இருந்து சசிகலாவை புழல் சிறைக்கு மாற்றம் செய்யும் வேலைகளையும் தொடங்க இருக்கிறார்கள். 'சில காலத்துக்கு அமைதியாக இருக்குமாறு' நடராசனைக் கேட்டுக் கொண்டுள்ளனர் அவரது உறவினர்கள்" என்கின்றனர் தலைமைக் கழக நிர்வாகிகள். 

- ஆ.விஜயானந்த்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!