கர்நாடக அரசை தடுத்து நிறுத்துங்கள்! மத்திய அரசுக்கு, ஜி.ஆர் வலியுறுத்தல்


காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசை, மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்ட கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது. ரூ.5,912 கோடி செலவில் நிறைவேற்றப்படவுள்ள அந்தத் திட்டத்தில், 66.5 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கிவைக்கவுள்ளதாகவும், அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்திருக்கிறார்.

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அமலாக்க தொடர்ந்து மறுத்துவரும் கர்நாடக அரசு, புதிய அணைகளைக் கட்டுவதில் முனைப்புக் காட்டிவருவது கண்டனத்துக்குரியதாகும். நடுவர்மன்றத் தீர்ப்பை அமலாக்கவும், மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஏற்படுத்துவதில் மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழக மக்களை வஞ்சித்துள்ளன. இந்நிலையில், புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் அறிவிப்பை உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்துவதுடன், காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அமலாக்க மத்திய அரசு துரிதமாகச் செயல்படவேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!