வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (17/02/2017)

கடைசி தொடர்பு:10:03 (20/02/2017)

கூவத்தூர் ரிசார்ட்டில் இப்போது என்ன நடக்கிறது? - லைவ் ரிப்போர்ட் #VikatanExclusive

கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டுக்குள் தங்கியிருக்கும் சசிகலா அணி எம்.எல்.ஏ.க்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள், அவர்களின் மனநிலை எப்படி உள்ளது என்று விசாரிக்க அங்கு பயணித்தோம். அப்போது கிடைத்த தகவல்கள் ருசிகரமானது. 

 'அல்வா'வுக்கு பெயர் பெற்ற ஊரிலிருந்து சென்னை வந்திருக்கும் எம்.எல்.ஏ. அவர். ஏதோ பிக்னிக் ஸ்பார்ட்டுக்கு வந்ததைப் போல ரிசார்ட்டுக்குள் செல்ஃபி எடுத்துக் கொண்டு இருந்தார். அரசியல் பரபரப்பும், தொகுதி மக்கள் குறித்த எந்தவித அக்கறையும் அந்த எம்.எல்.ஏ.க்கு இல்லை. 'மகிழ்ச்சி' என்று ரஜினியின் கபாலி டயலாக்கை சக ஆதரவாளர்களுடன் சொல்லிக் கொண்டு இருந்தார். அடுத்து தமிழ்ச்சங்க நகரத்திலிருந்து வந்திருந்த எம்.எல்.ஏ. ஒருவர், அல்வா ஊர் எம்.எல்.ஏ.வை விட அதிக மகிழ்ச்சியில் இருந்தார். 'நான் ரொம்ப பிஸி' போல ரிசார்ட்டை சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தார். கையிலிருந்த செல்போனில் வாட்ஸ்அப் மூலம்  தொகுதி நிலவரத்தை கேட்டுக் கொண்டு இருந்தார். பன்னீர்செல்வத்துக்கு உள்ள ஆதரவு குறித்து எம்.எல்.ஏ.விடம் தகவலைத் தெரிவித்தவரிடம், 'என்னய்யா நடக்குது' என்று ஆர்வமாக கேட்டார் எம்.எல்.ஏ. 'நம்ம ஆளுங்க யாராவது ஓ.பி.எஸ் பக்கம் போயிட்டாங்களா என்று கேட்க.. அப்படியெதும் இல்ல. ஒன்றியம்தான் அந்தப்பக்கம் போகப்போவதா தகவலண்ணா' என்று கட்சி நிலவர விவாதம் நடந்து கொண்டு இருந்தது. அடுத்து நம் கண்ணில்பட்டவர் வாழும் எம்.ஜி.ஆராக கருதும் அமைச்சர். கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்த அவர், ஓ.பி.எஸ். நிலைமையைச் சொல்லி கமென்ட்ஸ் அடித்துக் கொண்டு இருந்தார். அதைக் கேட்டவர்களும் அந்த ஆளும் இங்கிருந்தா... என்று இழுத்தார். அதற்குள் இடைமறித்த இன்னொரு அமைச்சர், 'அவரு மட்டும் இப்படி போகலண்னா நம்மள இப்படி கவனிப்பார்களா... அமைச்சரா இருந்தபோது கப்பம் கட்டிய நமக்கு இப்போது அவர்களிடமிருந்து தயவு கிடைத்திருப்பதை... சொல்லும்போதே அவரது முகம் பளீச்' என்று மாறியது.

ரிசார்ட்டில் உள்ள டைனிங் ஹாலில் லெக்பீஸ் சிக்கனுடன் போராடிக் கொண்டு இருந்தார் அந்த சட்டம் படித்த எம்.எல்.ஏ. ஒருவர். அருகில் இருந்த இன்னொரு எம்.எல்.ஏ.விடம் சட்ட ரீதியான விவரத்தை விளக்கிக் கொண்டு இருந்தார். அவரும் அதை ஆமோதித்தப்படியே பிரியாணியை உள்ளே தள்ளினார். எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ஆகியோரின் நெருக்கமானவர்களும் டைனிங் ஹாலில் டிஸ்கவரி சேனல்களில் பலவற்றை மேஜையில் வைத்திருந்தனர். சிலர் போதையில்  உளறிக் கொண்டு இருந்தனர். வீடியோ கேம்களிலும் எம்.எல்.ஏ.க்களும், அவரது ஆதரவாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலை முதல் இரவு வரை தொடரும் இந்த நிகழ்வில் அவ்வப்போது மீட்டிங்கிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர். எம்.எல்.ஏ.க்களுக்கு எல்லாம் அரணாக இருக்கும் மன்னார்குடி தரப்புக்கு நெருக்கமான அமைச்சரின் குண்டர்கள்தான் அங்கு ஆல்இன்ஆள். அந்த அமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் ரிசார்ட்டில் உள்ளவர்கள் செயல்படுகின்றனர். டிபனாக இட்லி, தோசை என தென்னிந்திய உணவுகளுடன் வடமாநில உணவுகளும் பட்டியலில் உள்ளன. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுக்கும், அமைச்சர்களுக்கும் உணவுக்கட்டுப்பாடு இருப்பதால் டயட் கண்ட்ரோலில் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் டிரைவர்கள், ஆதரவாளர்கள் 'ஒரு பிடி' பிடிக்கின்றனர். மதியமும் சைவ, அசைவ உணவுகளுடன் பழ வகைகளும் இடம் பிடிக்கின்றன. வடமாநில உணவுகள் விரைவில் காலியாகி விடுகிறதாம். இதற்காக தனி சமையல் டீம் களம் இறக்கப்பட்டுள்ளன.

பெண் எம்.எல்.ஏ.க்களைப் பொறுத்தவரைக்கும் குடும்பத்தினருடன் அவர்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுக்குத் தனித்தனியாக அறைகள் வழங்கப்பட்டு இருந்தாலும் யாருமே தனியாக தங்குவதில்லையாம். ஆனால், சில எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் ஒரே அறையில் தங்கி உள்ளனர். சிலர் அங்குள்ள கேளிக்கை விடுதிகளிலேயே பொழுதைக் கழித்து வருகிறார்களாம். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் காலை, மாலையில் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். ஒரே இடத்தில் தமிழகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒன்பது நாட்களாக தங்க வைக்கப்பட்டு இருப்பதால் அரட்டைகள் தொடர்கிறது. அனைத்து அரட்டையிலும் ஓ.பி.எஸ் டாப்பிக் ஓடுகிறது. அடுத்து ரிசார்ட்டில் உள்ள படகு சவாரி, நீச்சல் குளம் ஆகிய இடங்களில் அதிகளவில் எம்.எல்.ஏ.க்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.

ரிசார்ட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளை கண்காணிக்க தனி டீம் உருவாக்கப்பட்டுள்ளதாம். அந்த டீம் கேமராவில் பதிவாகும் காட்சிகள் மூலம் எம்.எல்.ஏ.க்களை கண்காணிக்கும் குழுவுக்கு அவ்வப்போது தகவல் கொடுக்கிறது. சில நாள்கள் சுதந்திரமாக பேசிய எம்.எல்.ஏ.க்கள் இப்போது சி.சி.டி.வி கேமரா கண்காணிக்கப்படும் தகவலுக்குப் பிறகு அமைதியாகி விட்டார்களாம்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தப்பிறகு ரொம்பவே அமைதியாகி விட்டார்களாம் எம்.எல்.ஏ.க்கள். கான்பரன்ஸ் அறையில் நடக்கும் கூட்டம் குறித்த தகவல் எம்.எல்.ஏ.க்களுக்கு நேரிடையாக சொல்லப்படுவதில்லை. அவர்களை கண்காணிக்கும் குழு மூலமே தெரிவிக்கப்படுகிறது. கூட்ட அரங்குக்குள் யாரும் செல்போன் கொண்டுச் செல்ல அனுமதியில்லையாம். ரிசார்ட்டுக்குள் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை என்று எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் சொல்கின்றனர். ஆனால், அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ரிசார்ட்டுக்குள் போலீஸ் படை நுழைந்தபோது சசிகலா அணியில் விசுவாசமாக இருப்பவர்கள் மட்டுமே முன்னால் வந்து நின்றனர். மதில் மேல் பூனை மனநிலையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை என்று சொல்லப்படுகிறது. வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. முத்தரசியிடம், போலீஸ் உயரதிகாரி ஒருவர் எப்படி விசாரணை நடத்த வேண்டும் என்று முன்கூட்டியே தெரிவித்துள்ளார். அதை மீறி அவர்களால் செயல்பட முடியவில்லை என்கின்றனர் போலீஸ் தரப்பில். எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடரும் பட்சத்தில் விசுவாசமாக இருந்த ஐ.பி.எஸ். மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு முக்கியப் பதவி கொடுக்கப்படவுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. முதல்வர் பதவி ஏற்பு கொண்டாட்டத்தில் மன்னார்குடி கும்பலும், எம்.எல்.ஏ.க்களை கண்காணிக்கும் கும்பலும் பிஸியாக இருந்தனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும்  நம்பிக்கை வாக்கெடுப்பு என்று ஆளுநர் அறிவித்ததுள்ளதால் மீண்டும் ரிசார்ட்டுக்குள் சென்று விட்டனர் எம்.எல்.ஏ.க்கள். கோல்டன் பே ரிசார்ட்க்குள் அரங்கேறும் இன்னும் பல காட்சிகள் மர்மமாகவே இருக்கின்றன. நான்கு சுவருக்குள் அந்த ரகசியம் அரங்கேறுவதால் அவைகள் எதுவும் நம்கண்ணில் தென்படவில்லை. 

- எஸ்.மகேஷ்

படங்கள்: ஜெயவேல்


டிரெண்டிங் @ விகடன்