வெளியிடப்பட்ட நேரம்: 21:49 (17/02/2017)

கடைசி தொடர்பு:21:49 (17/02/2017)

சசிகலா... சரிவைச் சந்திக்க இதுதான் காரணமா? 

சசிகலா

“சசிகலாவைத் தவிர, எனக்கு இந்த உலகத்தில் யாரும் இல்லை'' என்று ஒருநேரத்தில் தெரிவித்த ஜெயலலிதாவே, இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவருடைய நிழலாக, உடன்பிறவாச் சகோதரியாக 34 ஆண்டுகள் பயணம் செய்த சசிகலாவின் கையில்தான் தற்போது அ.தி.மு.க இருக்கிறது. இதற்குக் காரணம், அந்தக் கட்சியில் தனக்குப் பின் யார் என்று ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்படாததும்... மக்களின் பிரதிநிதிகள் பணத்துக்காகவும், பதவிக்காகவும் வளைக்கப்படுவதுமே. எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், எப்படி அ.தி.மு.க பிரிந்து கிடந்ததோ, அதேநிலை இன்று உருவாகியிருக்கிறது. ''சசிகலா, பொறுமை காக்காததுதான் இவையனைத்துக்கும் காரணம்'' என அரசியல் நடுநிலையாளர்கள் தெரிவித்த போதிலும், அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளோ பல காரணங்களை முன் வைக்கிறார்கள்.

சசிகலா

''பொறுத்திருக்க வேண்டும்!''

''என்னதான் ஜெயலலிதாவுடன் 34 ஆண்டுகாலம் பயணித்து இருந்தாலும், ஆட்சியிலோ, கட்சியிலோ அவர் பங்கெடுப்பதற்குச் சில காலம் பொறுத்திருந்திருக்க வேண்டும். தமிழகத்தின் வலிமைமிக்க பெண்மணியாக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பொதுமக்கள் கருதும் நிலையில், அவற்றுக்குத் தீர்வு சொல்லாமல்... பொதுமக்கள் ஆதரவு இல்லாமல் கட்சியில் புதிய பதவியை ஏற்பது எந்தவிதத்தில் நியாயம்? அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர் வகுத்த கட்சி விதிகளின்படி அ.தி.மு.க தற்போது செயல்படவில்லை. பணத்தைச் சம்பாதிக்கவும், பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவுமே இன்று சசிகலா தரப்பிடம் பலர் தஞ்சமடைந்திருக்கிறார்கள்... அல்லது மிரட்டப்பட்டிருக்கிறார்கள். சாதாரண போஸ்டர்களிலேயே சசியின் படத்தைக் கிழிக்கவும், சாணம் அடிக்கவும் செய்யும் தொண்டர்கள், கட்சியில் எந்தவிதப் பதவியும் வகிக்காமல், உடனே ஓர் உயர்ந்த பொறுப்புக்கு வருவதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? சசிகலாவுக்கு, பொதுமக்களின் ஆதரவு கடுகளவுகூட இல்லாததால்... அவர், இவர்களை வைத்து தன் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறார். இவரே, அ.தி.மு.க-வில் தற்காலிகப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும்போது... டி.டி.வி.தினகரனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி எப்படித் தரமுடியும்? இதுவும் ஒருவகை குடும்ப அரசியலையே வெளிக்காட்டுகிறது. 

சசிகலா

''ரஜினிகாந்த் சொன்ன வசனம்!''

1996-ம் ஆண்டு தி.மு.க - த.மா.கா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், "இனி, தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று கூறினார். நேரடியாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே இந்த ஆட்டம் போடும் சசிகலா தரப்பினரின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, ரஜினி அப்போது சொன்ன வசனம்தான் நினைவுக்கு வருகிறது. இன்னும் நான்காண்டு காலம் இவர்கள் முழுமையாக ஆட்சி புரிந்தால்... எல்லோரையும் மிரட்டியே அடிபணிய வைக்கும் சசி தரப்பினரிடம் பொறுமை எப்படி இருக்கும்? 'தவளை தன் வாயால் கெடும்' என்று ஒரு பழமொழி உண்டு. அந்த நிலைதான் சசிகலாவுக்குத் தற்போது ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு, அந்தக் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துகிற பொறுப்பு சசிகலாவுக்கு இல்லாதபோதும்... கட்சித் தலைமையை ஏற்றுக்கொண்டார். முதல்வர் பதவிக்கு, இன்னும் சிறிதுகாலம் அவசரப்படாமல்  இருந்திருந்தால்... அவரே ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். 'ஓ.பி.எஸ் நன்றாகத்தானே செயல்படுகிறார். அதனால், இப்போது முதல்வரை மாற்ற வேண்டிய அவசியமில்லை' என்று சசிகலாவின் கணவர் ம.நடராஜனே தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வின்போது சொல்லியிருந்தார். அப்படியிருக்கையில், முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் திடீரென்று ஏன் ஏற்பட்டது.? இதற்கு யார் காரணம்? உடல்நிலை பாதிப்பால் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜனுக்கு இங்கு நடந்தது அனைத்தும் தெரியுமா எனத் தெரியவில்லை. இப்படி ஏகப்பட்ட குழப்பங்களினாலேயே சசிகலா பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். 

சசிகலா

''பிரிவுக்கு வழி ஏற்படுத்தியிருக்காது!''

ஒருகாலத்தில், ஜெயலலிதாவால், சசிகலா உள்பட அவரது உறவினர்கள் அனைவருமே அந்தக் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். ஆனால், சசியை மட்டும் மீண்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொள்வதற்கு ஏதுவாகச் சசிக்குப் பாடம் எடுத்தவர்கள், இந்த விஷயத்தில் ஏன் கோட்டை விட்டார்கள் என்று தெரியவில்லை. யாரோ போட்டுக்கொடுக்கும் ரூட்டில் நன்றாகப் பயணித்த சசிகலாவை, கடந்த 10 நாள்களில் தடம் மாற்றியது யார்? ஓ.பி.எஸ்ஸைப் போன்றே சசியும் அமைதி வழியைக் கையாண்டிருந்தால், இந்நேரம் அந்தக் கட்சியும், மறைமுகமாக ஆட்சியும் அவரிடம்தான் தொடர்ந்து இருந்திருக்கும். கட்சியின் பிரிவுக்கும் வழியை ஏற்படுத்தியிருக்காது. 

சசிகலா

''சசிகலா உதிர்த்த வார்த்தைகள்!''

ஓ.பி.எஸ்ஸை முதல்வராக அமரவைத்தே... தமிழகத்துக்குத் தேவையான அனைத்தையும் சசிகலா செய்திருந்தால், மக்கள் மத்தியில் பெயரெடுக்க வாய்ப்பிருந்திருக்கும். அத்துடன், ஒவ்வோர் ஊராய்ச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு, தாம் செய்வதுதான் சரி என்ற பிடிவாதப்போக்கில், யாரோ அளித்த தேவையற்ற ஆலோசனைப்படி அவர் சென்றதால்தான் இந்த பின்னடைவுக்குக் காரணமானது. அதுமட்டுமல்லாது, பன்னீர்செல்வத்தின் பேட்டிக்குப் பிறகு சசிகலா உதிர்த்த வார்த்தைகளும் முதுபெரும் அரசியல்வாதிகளையும், மக்களையும் திக்குமுக்காடச் செய்தது...  'இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். ஜெயலலிதாவிடம் 33 ஆண்டுகள் இருந்த குட்டிச் சிங்கம்' என்றும், 'நான் முதலமைச்சராவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது'  என்றும் செய்தியாளர்களே வியக்கும்வகையில் பேசினார். 

சசிகலா

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் குற்றச்சாட்டு!

ஒருவேளை, ஜெயலலிதாவே உயிருடன் இருந்து... இதுபோன்ற சந்தர்ப்பம் அவருக்கு அமைந்திருக்குமானால், அவர் இப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டார். ஆனால், அதைவிட சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சிறை செல்வதற்காக பெங்களூரு செல்லும் முன், ஜெயலலிதா சமாதியில் அவர் செய்த சத்தியம் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது. 'சசிகலாவின் தோரணைகளைப் பார்க்கும்போது, ஒரு பெண் தாதா போல உள்ளது' என்று சசி மீது குற்றம் சுமத்தினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அத்துடன், 'ஜெயலலிதா கல்லறைக்குள் இருக்கும்போதே இப்படி அடி விழுகிறதே... அவர் உயிரோடு இருந்தபோது எப்படி அடி வாங்கி இருப்பார் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்' என ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். இப்படி ஓர் மூத்த அரசியல்வாதியாலேயே சசிகலாவுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்றால்... மக்களிடம், அவருக்கு எப்படி நற்பெயர் இருக்கும் என்று அவர் சற்றே சிந்திக்க வேண்டும். ஜெயலலிதாவும் இதுபோன்ற சோதனைகளைக் கடந்து வந்தவர்தான். ஜெயலலிதாவுக்கு அரசியல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி ஆறுதல்படுத்தியதாகக் கூறிக் கொள்ளும் சசிகலா, இப்போது ஏமாந்தது ஏன்? 'யானை தன் தலைமீது மண்ணைப் போட்டுக்கொண்ட நிலையில்தான், சசிகலா தற்போது உள்ளார்' என்று அவர் ஆதரவாளர்களே வருத்தப்படுகின்றனர். இதற்கு முழுக் காரணம், அவர் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காததும், பொறுமையைக் கடைப்பிடிக்காததும் தான்'' என்கின்றனர் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள்.

சசிகலாவின் அடுத்த நகர்வாவது, தமிழக மக்களின் நிலையை நோக்கி இருக்கட்டும்.

- நியூஸ் நேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்