வெளியிடப்பட்ட நேரம்: 07:58 (18/02/2017)

கடைசி தொடர்பு:10:40 (18/02/2017)

சசிகலாவுக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களை ஆதரிப்பேன்! - சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா

மிழக அரசியலில் எந்தவித தாக்குதல் வந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவந்த அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா, கடந்த சில நாள்களாக அமைதியாகவே இருந்துவந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் பற்றி அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

"எப்போதும் பரப்பரப்பாக இருந்துவந்த நீங்கள், கடந்த சில நாள்களாக எங்கு இருந்தீர்கள் என்றுகூடத் தெரியவில்லையே?"

''நீங்க கேட்க வர கேள்வி புரியுதுங்க. யாராவது மிரட்டித்தான் அமைதியாக இருக்கேன்னு நீங்க நினைக்குறீங்க. அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. யார் மிரட்டினாலும் பயப்படுற ஆளு நான் இல்லை. எனக்குத் தனிப்பட்ட வேலைகள் நிறைய இருந்தது. ஆனா, இப்ப என்ன அரசியல் நடந்துக்கிட்டு இருக்குனு நல்லாவே தெரியும். இப்போதும் என் அரசியல் வேலைகளைச் சிறப்பா செஞ்சுக்கிட்டு இருக்கேன்."

"அ.தி.மு.க-வில் மிகப் பெரிய பிரளயமே உருவாகியுள்ளதே?"

"ஆமாம். பார்த்தேன். கட்சியைத் தன்னோட குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமாக்கிக்கொள்ள சசிகலா நினைச்சாங்க. இதை, உண்மையான அம்மாவோட தொண்டர்கள் ஏத்துக்கமாட்டாங்க. அதனால அம்மாவின் விசுவாசியான அண்ணன் பன்னீர்செல்வம் தனியாக வந்தார். அவர் எடுத்த முடிவை நான் ஆதரிக்கிறேன். ஆனா, தனக்கான மெஜாரிட்டியை காட்டி... அவுங்களைத் துரத்தி முதல்வரா ஆகிருக்கணும். அப்போதான் அ.தி.மு.க. வளரும். அதைத்தான் மக்கள் எல்லாரும் எதிர்பார்த்தாங்க. ஆனா, அது நடக்கலை. அதுக்குள்ளே சசிகலா என்னிடமே மெஜாரிட்டி எம்.எல்.ஏ இருக்குறதா சொல்லி ஆட்சியை பிடிச்சிக்கிட்டாங்க.

ஆளுநர் சொன்ன காலத்துல அண்ணன் பன்னீர்செல்வம் மெஜாரிட்டிய காமிச்சாருனா திரும்பவும் முதல்வர் ஆகுற வாய்ப்பு இருக்கு. இல்லைனா, சசிகலா நியமித்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க வேறு மாதிரியான பாதையில் செல்லும். இப்போதே மக்கள் அவர்கள் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். மக்களின் இந்தக் கோபத்தைச் சரி செய்யணும்னா இந்தப் பதவியைப் பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்யவேண்டும். அப்படி மக்களுக்கு இவுங்க தலைமை பிடிச்சிருந்தா கண்டிப்பா மக்கள் வரவேற்பாங்க. அதற்காக எனது வாழ்த்துகள்."

"சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை கிடைத்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

சசிகலா

"ஒரு பெண்ணாக இருந்து பார்க்கும்போது சற்று வருத்தமாக இருக்கிறது. அதுக்கென்று நியாயப்படுத்தவில்லை. தவறு யார் செய்தாலும் தண்டனைக்குரியவர்களே. சசிகலா குற்றவாளி என நீதிமன்றமே சொல்லிவிட்டது. அப்புறம் தண்டனை எந்த விதத்தில் தப்பாக முடியும். தப்பு செஞ்சவங்களுக்குக் கண்டிப்பாக தண்டனை கிடைத்தே தீரும்."

"இனிமேல் பன்னீர்செல்வத்துக்கு, சசிகலா அணியிலிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொடுப்பாங்கன்னு நினைக்கிறீர்களா?"

"ஏன், நடராஜ் இன்னைக்கு ஆதரவு கொடுக்கலையா? கண்டிப்பா கொடுப்பார்கள். எடப்பாடி பழனிசாமி நிரந்தர முதல்வர் ஆகணும்னா மெஜாரிட்டி வேணும். முதல்ல அங்கிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் வெளியே வந்தால் நிலைமை எப்படி வேணாலும் மாறலாம்."

"ஓ.பி.எஸ்ஸுக்கு, தீபா ஆதரவு கொடுத்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"எனக்கு அதுவெல்லாம் தேவையில்லாத ஒண்ணு. என்கிட்டகூட நிறையப் பேர் கேட்டாங்க. 'நீங்க தீபாவுக்கு ஆதரவு தெரிக்கலாம்'னு. யார் அந்த தீபா? மக்கள் யார் பக்கம் இருக்குறாங்க என்பதுதான் முக்கியம். ஒருவேளை, தீபா பக்கம் மக்கள் இருந்தா அதையும் வரவேற்கிறேன். பொதுவா, சசிகலாவையும் அவுங்க குடும்பத்தையும் யார் எதிர்த்தாலும் நான் வரவேற்பேன்."

"தற்போது தமிழகத்தில் நடைபெற்றுவரும் இந்தப் பிரச்னைக்கு மத்திய அரசோட தூண்டுதல்தான் காரணம்னு சொல்றாங்களே?"

"சூழ்ச்சி இருக்கானு எனக்குத் தெரியாது. ஆனா கவர்னர் ஏன் காலதாமதம் பண்ணினாருன்னு, அதுக்கு காரணம் இருந்துச்சு. அது, அவருடைய ரோல். ஒரு கெட்டவங்ககிட்ட ஆட்சி போகக்கூடாதுன்னுகூட கவர்னர் நெனச்சிருக்கலாம்."

- ஜெ.அன்பரசன் 

 


டிரெண்டிங் @ விகடன்