வீட்டு மனையில் வில்லங்கமா? இதையெல்லாம் சரிபார்த்துக்கோங்க!  | Kindly check these before buying a plot

வெளியிடப்பட்ட நேரம்: 22:29 (17/02/2017)

கடைசி தொடர்பு:22:28 (17/02/2017)

வீட்டு மனையில் வில்லங்கமா? இதையெல்லாம் சரிபார்த்துக்கோங்க! 

சென்னை, இந்தியாவின் நான்காவது பெரிய நகரம். சென்னை பெருநகர் பகுதி, சென்னை மாநராட்சி, 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் உள்ளிட்ட1,189 சதுர கிலோ மீட்டர், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் வருகிறது. இதைத் தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகள் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் (Directorate of Town and Country Planning) கட்டுப்பாட்டில் வருகிறது. இந்தப் பகுதிகளில் வீட்டு மனை வாங்கும் முன், பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இப்போது பஞ்சாயத்து அப்ரூவல், மனை பிரச்னை நிலுவையில் உள்ளது.

வீட்டு மனை, மனை, வீடு, plot

இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) மற்றும் டி.டீ.சி.பி-யின் கீழ், வீட்டு மனை வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, `நவீன் ஹோம்ஸ்’ நிர்வாக இயக்குநர் குமாரிடம் பேசினோம்.

பஞ்சாயத்து அப்ரூவல்! 
"வீட்டு மனைகளை வாங்கும் முன் முதலில் சி.எம்.டி.ஏ அல்லது டி.டீ.சி.பி அப்ரூவல் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். சி.எம்.டி.ஏ மற்றும் டி.டீ.சி.பி வழங்குவது திட்ட அனுமதி (planning permission). இதைத் தவிர்த்து கார்ப்ரேஷன், முனிசிபாலிட்டி, யூனியன், பஞ்சாயத்து போன்ற இடங்களில் வழங்குவது கட்டிட அனுமதி (building permission). 

வருடத்திற்கு ஒரு முறை வீடு கட்ட முறைப்படிதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை அறிய சி.எம்.டி.ஏ மற்றும் டி.டீ.சி.பி ஆடிட் செய்வார்கள். இதுதான் விதிமுறை. அனுமதிக்கப்பட்ட நிலப்பிரிவில், பஞ்சாயத்து அப்ரூவல் வழங்கலாம். ஏனெனில் கட்டிட அனுமதி வழங்குவது பஞ்சாயத்துதான். இதை சி.எம்.டி.ஏ அல்லது டி.டீ.சி.பி வழங்குவதில்லை. இதைப் பல பேர், பல விதமாகப் புரிந்துகொண்டுள்ளனர் 

சென்னையைத் தவிர்த்து மற்ற ஊர்களில் வசிக்கும் மக்கள், எல்லா வீடுகளுக்கும், பிளாட்களுக்கும் டி.டீ.சி.பி அப்ரூவல் வாங்க அணுக வேண்டியதில்லை. சின்ன சின்ன கட்டிடங்கள், வீடு கட்ட அந்தந்த பகுதியைச் சேர்ந்த முனிசிபாலிட்டி, கார்ப்பரேஷன் மற்றும் பஞ்சாயத்து அப்ரூவல் வாங்கினால் போதுமானது. இதற்கான அதிகாரத்தை சி.எம்.டி.ஏ மற்றும் டி.டீ.சி.பி வழங்கியுள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி திட்ட அனுமதியும், கட்டிட அனுமதியும் சேர்த்தே உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கலாம். இதற்கு சில சட்டதிட்டங்கள் உள்ளன. அந்தச் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு அனுமதி வழங்க வேண்டும். இதுவே சென்னையில் பெரிய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதாக இருந்தால் சி.எம்.டி.ஏ அனுமதி வேண்டும். மற்ற ஊர்களில், டி.டீ.சி.பி அனுமதி பெற வேண்டும்.

டி.டீ.சி.பி தலைமையகம்! 

பஞ்சாயத்து என்றால் ஓரிரு வீடுகள் முதல் ஆறு பிளாட்கள் வரை அனுமதி வழங்கலாம். டி.டீ.சி.பி பெரும்பாலான நகரங்களிலும் இருக்கிறது. சென்னையைத் தவிர்த்து பிற ஊர்களில் வசிப்பவர்கள், அந்தந்த கோட்டத்துக்கு உட்பட்ட இடங்களில் உள்ள டி.டீ.சி.பி அலுவலங்களில் அப்ரூவல் வாங்க வேண்டும். ஆனால், அந்த நகரங்களில் டி.டீ.சி.பி-க்கு அப்ரூவல் அனுமதிக்கு மீறி, கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தால், சென்னையில் உள்ள டி.டீ.சி.பி தலைமையகத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.

பஞ்சாயத்து அப்ரூவல் மனைகள் சட்ட திட்டத்துக்கு உட்படாமல், தலைவர் மட்டுமே கையெழுத்து போட்டு அந்த நிலம் தவறாக பயன்படுத்தப்பட்டு வழங்குவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. பஞ்சாயத்துத் தலைவர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. ஆனால், அவருக்கு வீட்டு மனைகளுக்கு அப்ரூவல் வழங்க அதிகாரம் கிடையாது. இதற்கென நிர்வாக அதிகாரிகள் என்று தனியாக இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் இந்த அதிகாரம் உள்ளது. ஆனால், முறைகேடாகப் பயன்படுத்தி, எந்த ஒரு நம்பரும் இல்லாமல், சட்ட திட்டத்துக்கு உட்படாமல் அப்ரூவல் வழங்கினால் பிரச்னைதான். இதுபோன்ற வீட்டுமனைகள் செல்லாது. இதில் முறைகேட்டில் ஈடுபட்டு, கையெழுத்துப் போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அத்தகைய வீட்டை வாங்கியவர்களுக்கு மட்டும்தான் பிரச்னை ஏற்படுகிறது. 

கவனிக்க வேண்டிய விஷயங்கள்! 

வீட்டு மனைகள் வாங்குகிறீர்களா அல்லது வீடுகள் வாங்குகிறார்களா என்பதை முதலில் பார்க்க வேண்டும். வீடுகள் வாங்குகிறார்கள் என்றால், சி.எம்.டி.ஏ, டி.டீ.சி.பி மற்றும் பஞ்சாயத்து அப்ரூவல் வழங்கப்பட்டு இருந்தால் ஒரு பிரச்னையும் இல்லை. பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொகுப்பு வீடுகள் என ஒரு எல்லைக்கு மீறினால், சி.எம்.டி.ஏ அல்லது டி.டீ.சி.பி அப்ரூவல் வாங்க வேண்டும். 

அப்பார்ட்மென்ட்டில் பிளாட் வாங்குபவர்கள், அப்ரூவல்ட் பிளான் இருக்கிறதா என்பதைப் பார்த்து வீடு வாங்க வேண்டும். அதற்காக, ஒரு பேப்பரில் பஞ்சாயத்துத் தலைவர் என்ற இடத்தில் வெறும் கையெழுத்து மட்டும் போட்டு இருக்கக்கூடாது. 

வாங்கும் வீட்டுக்குப் பட்டா இருக்கிறதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும். புறம்போக்கு, நீர்ப்பிடிப்பு அல்லது ஏரிக் கரைகளில் வீடு இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். பெரிய நம்பிக்கையான நிறுவனங்களிடம் வீடு வாங்கும்போது ஓரளவு நம்பலாம். ஆனால், சின்ன நிறுவனங்களிடம் வாங்கும்போது, வழக்கறிஞரிடம் ஆலோசனை மேற்கொள்வது நல்லது. 

அப்ரூவல்ட் மனை பிரிவுகளில் சாலைகள் சற்று அகலமாக இருக்கும். பூங்கா, விளையாட்டுத் திடல் என இடங்கள் ஒதுக்கி இருப்பார்கள். இவையெல்லாம் இருக்கின்றதா என்பதைக் கவனிக்க வேண்டும்" என்றார். 

எப்படி வீடு வாங்கும் முன் பல விஷயங்களை கவனிக்கிறமோ, அதைப்போல வீட்டு மனை வாங்கும் முன் பல விஷயங்களை கவனித்து வாங்குவது நல்லது. கட்டிடங்கள் கட்ட அல்லது வீடு வாங்க சிடிஎம்ஏ, டி.டீ.சி.பி-ன் அனுமதி வாங்குவதோடு விட்டுவிடாமல், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்களைக் கவனித்து உங்கள் கனவு வீட்டு மனையை வாங்கி வீட்டைக் கட்டலாமே!

சோ.கார்த்திகேயன்


டிரெண்டிங் @ விகடன்