தலைமைச்செயலகத்தில் பொதுமக்களுக்கு நாளை அனுமதி மறுப்பு

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால், தலைமைச்செயலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், நாளை தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறி உள்ளார். இதனால், தலைமைச்செயலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை மட்டும் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவற்றுடன், தலைமைச்செயலகத்துக்கு வரும் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்களுக்கு மட்டுமே போலீசார் அனுமதி வழங்க இருப்பதாகவும், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் தலைமைச் செயலக வளாகத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தலைமைச்செயலகத்தின் நுழைவு வாயிலில் தீவிர சோதனைகளுக்குப் பிறகே அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட உள்ளன. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சட்டப்பேரவையில் நாளை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பை ஒட்டி சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!