‘அம்மா கட்சியை இப்படிப் பண்றாங்களே...’ கட்சிப் பதவியை உதறிய அருண்குமார் எம்.எல்.ஏ!

எம்.எல்.ஏ. அருண்குமார்

மிழக அரசியல் களம் பரபரக்கிறது. முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்திய நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நடக்கிறது.  எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 124 பேர் கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கூவத்தூரில் தங்கியிருந்த கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார், கூவத்தூரில் இருந்து வெளியேறி, கோவை சென்றார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என யாருக்கும் தன் ஆதரவில்லை எனக்கூறிய அவர், வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். மேலும், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அருண்குமார்

இது தொடர்பாக அருண்குமாரிடம் பேசினோம். "எனக்கு கட்சியின் தலைமையின் போக்கு பிடிக்கவில்லை. அதனால் வந்தேன். இது எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம். அம்மா சிறப்பாக வழிநடத்தினார்கள். இப்போது புரட்சித்தலைவி அம்மாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் எல்லாம் இன்று கட்சியில் ஆளுமை செலுத்துகிறார்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை.

50 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, 3-வது பெரிய கட்சியாக இந்தக் கட்சியை அம்மா வளர்த்தார். இப்போது இருவரும் சேர்ந்து கட்சியை அழித்துவருகிறார்கள். இருவருக்கும் ஆதரவு இல்லை. அம்மாவால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் கட்சியை ஆளுமைசெய்வதை  ஏற்க முடியாது. மக்களின் விருப்பமும் இதுதான். எனக்கு பதவியோ, பணமோ அவசியமில்லை. அதனால்தான் யாருக்கும் ஆதரவில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். கட்சிப் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டேன். எம்.ஜி.ஆர்., அம்மாவின் தொண்டன் என்பதில்தான் எனக்குப் பெருமை. எனக்கு அதுபோதும் தொடர்ந்து மக்கள் பணிகளைச் செய்வேன்.

எம்.எல்.ஏ. அருண்குமார்

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள் என்பதில் உண்மை இல்லை. எல்லோரும் சேர்ந்து முடிவெடுப்போம் என்று சொல்லித்தான் கூவத்தூர் போனோம். அங்கு 120-க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் இருந்தோம். அங்கு, எங்களை யாரும் மிரட்டவில்லை. சுதந்திரமாகவே இருந்தோம். என்னை யாரும் தடுக்கவில்லை.

சசிகலா பொதுச்செயலாளர் பதவி ஏற்றபோதே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அப்போதைய சூழலில் மூத்த நிர்வாகிகள் சொன்னதை ஏற்று அமைதியாக இருந்தோம். நல்ல முடிவாக எடுக்கலாம் எனக் காத்திருந்தோம்.  தற்போது, அம்மாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களிடம் கட்சிப்  பதவி போவது சரியானது அல்ல. அதனால் இந்தமுடிவை எடுத்திருக்கிறேன்," என்றார்.

- தி.விஜய்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!