சபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் அமைதிக்கு இதுதான் காரணம்? #VikatanExclusive

தமிழக சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நேற்றிரவு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பாடம் எடுத்ததால் அவர்கள் இன்று அமைதியாக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக சட்டசபை

 ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் வெடித்தது. பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி ஏற்பட்டுள்ளது. சசிகலா அணி எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பன்னீர்செல்வத்தை 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரித்தனர். 


 சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதும் அவரது அணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பு ஏற்றார். அப்போது சட்ட சபையில் மெஜாரிட்டியை 15 நாள்களுக்குள் நிரூபிக்கும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். மெஜாரிட்டிய நிரூபிக்க இன்று தமிழக சட்டசபை கூடியது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்வர் பழனிசாமி முன்மொழிந்ததும், அதற்கு சபையில் கடும் அமளி ஏற்பட்டது. எம்.எல்.ஏ.க்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சபையிலிருந்த நாற்காலிகள், மேஜைகள், மைக்குகள் உடைக்கப்பட்டு போர்களமானது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெரியளவில் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் கோஷமிட்டுவிட்டு அமைதியாகவே இருந்தனர். 


 இதுகுறித்து சசிகலா தரப்பு அணியினர் கூறுகையில், "சபையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளதாக நேற்றே கூவத்தூரில் நடந்த மீட்டிங்கில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் எங்களிடம் தெரிவித்தனர். அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் நாம் அமைதியாகவே இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படக்கூடாது. மெஜாரிட்டி நம்மிடம் இருந்தும் நம்பிக்கை வாக்கெடுப்பு நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். இந்த வாக்கெடுப்பில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். அதைத்தடுக்க பன்னீர்செல்வம் மட்டுமல்ல தி.மு.க.வினரும் முயற்சிப்பார்கள். எனவே, சபையில் கடைசி வரை அமைதியாக இருந்து அம்மாவின் ஆட்சியை தொடர வேண்டும் என்று பாடமே எடுத்தனர். அவர்கள் யூகித்தபடியே சபை போர்க்களமானது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய போதும் அதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் அந்த கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். எந்த சூழ்நிலையிலும்  எங்கள் எம்.எல்.ஏ.க்கள் நிதானத்தை இழக்கவில்லை. இதுதான் அம்மா வழிநடத்திய ராணுவக்கட்டுப்பாடான கட்சிக்கு எடுத்துக்காட்டு"என்றனர். 

எஸ்.மகேஷ் 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!