மு.க.ஸ்டாலின் மீது தாக்குதல்! சட்டை கிழிக்கப்பட்டதால் பரபரப்பு

சட்டப்பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை அவைக் காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தனது சட்டையை காவலர்கள் கிழித்து, ஷூவால் மிதித்தனர் என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஈடுபட்டார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, அவை நடவடிக்கையை பிற்பகல் 3 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். இதனிடையே, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி சபாநாயகரை, மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

இந்த கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதையடுத்து, பேரவையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். சட்டை கிழிந்தபடி மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார்.

இதைத் தொடர்ந்து, பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "வலுக்கட்டாயமாக தூக்கிய காவலர்கள் எங்களை  பலமாக அடித்து துன்புறுத்தினர். கூடுதல் கமிஷனர் சேஷசாய் உத்தரவின்பேரில் காவலர்கள் எங்களைக் குண்டுக்கட்டாக தூக்கி ஷூ காலால் மிதித்து, எனது சட்டைகளை கிழித்தனர்.

தற்போதைய நிலையில் வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். சட்டப்பேரவையில் நடந்தவற்றை ஆளுநரிடம் முறையிட உள்ளோம். சபாநாயகர் வேண்மென்றே தனது சட்டையை கிழித்துக் கொண்டார். 500 காவலர்களை அவைக்குள் அனுப்பி திமுகவினரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்" என்றார்.

பின்னர், தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின், காரில் ஏறினார். செய்தியாளர்கள் அவரை, சார், சார் என்று கூப்பிட காரில் இருந்து இறங்கிய மு.க.ஸ்டாலின் சாலையில் நின்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சட்டை கிழிந்த நிலையில் இருந்த மு.க.ஸ்டாலினை புகைப்பட கலைஞர்கள் படம் எடுத்தனர். இதையடுத்து, ஆளுநரை சந்திக்க மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!