பெங்களூரு சிறையில் சசிகலா என்ன செய்கிறார்?

சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மிகவும் சோர்வான நிலையில் உள்ளார். யாருடனும் பெரிதாக பேசவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014-ம் ஆண்டு இதே வழக்கில் பெங்களூருவில் உள்ள கீழ் நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா உள்பட 3 பேருக்கும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தபோது, ஜெயலலிதா முதல்வராக பதவியில் இருந்ததால், பரப்பன அக்ரஹாரா சிறையில் முதல்வகுப்பு வசதி அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா சிறையில் அனுபவித்த அனைத்து சலுகைகளும் சசிகலா உள்ளிட்டோருக்கும் கிடைத்தது. ஆனால், இந்த முறை சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சிறையில் முதல் வகுப்பு உள்ளிட்ட எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

கடந்த 14-ம் தேதி அன்று சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என்றும், 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

அன்றைய தினம், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இருந்த கூவத்தூர் தனியார் விடுதியில் தங்கிய சசிகலா, தீர்ப்பு வெளியான தினத்தன்று இரவு 11 மணியளவில் போயஸ்கார்டன் திரும்பினார். அடுத்தநாள் அதாவது பிப்ரவரி 15-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து கார் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். அன்றைய தினம் மாலை 5 மணியளவில் நீதிமன்றத்தில் சரண் அடைந்து, சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சசிகலா சிறை சென்றபோது, அவருக்கும், இளவரசிக்கும் சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் ஒரு அலுமினிய தட்டு, டம்ளர், கைதிகளுக்கான புடவைகள், பெட்ஷீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. முன்னதாக, விசாரணை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜரான பின்னர், சிறைக்குச் செல்வதற்காக கர்நாடக போலீஸார் சசிகலாவை காவல்துறை ஜீப்பில் ஏறுமாறு கேட்டுக் கொண்டனர், ஆனால், போலீஸ் ஜீப்பில் ஏறி சிறைக்குச் செல்ல சசிகலா மறுத்து விட்டார். 'எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடந்தே வருகிறேன்' என்று தெரிவித்தாராம்.

ஆடம்பர காரில் வலம் வந்த சசிகலா, சிறை வளாகம் வரை நடந்தே சென்றார். மேலும் சிறைக்குச் சென்றதும், அவரது சார்பில் முதல்வகுப்பு வசதி மற்றும் வீட்டுச் சாப்பாடு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் அவர் மிகவும் ஏமாற்றம் அடைந்தார். மிகுந்த கோபத்துடனும், பதற்றமான மனநிலையிலுமே அன்றைய தினம் காணப்பட்டார் என்று பெங்களூருவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலாமுதல்வராக ஜெயலலிதா இருந்தபோதே தண்டனை பெற்றதால், அவர் பதவியிழக்க நேரிட்டது. மேலும் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டதுடன், ஜாமீன் பெறும் வரை 21 நாட்கள் பெங்களூரு சிறையில் இருந்தார். ஆனால், அவருக்குத் தேவையான வசதிகளை சிறை அதிகாரிகள் செய்து கொடுத்தனர். முதல் வகுப்பு வசதி, வீட்டுச் சாப்பாடு, மின்விசிறி, அன்றாடம் செய்தித்தாள் போன்றவை வழங்கப்பட்டன. இதனால், அந்த வசதிகளை சசிகலாவும் அப்போது அனுபவித்தார். தற்போதும் அதே மாதிரியான வசதிகள் தனக்குக் கிடைக்கும் என்று கருதிய அவருக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது.

முன்னதாக, சசிகலா, இளவரசிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.  இந்த முறை சிறையில் அடைக்கப்பட்ட முதல்நாள் சசிகலா பெரும்பாலான நேரம் தூங்காமல் விழித்தே இருந்தாராம். பத்துக்கு எட்டு அளவுடைய அறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இளவரசியும் உள்ளார், இளவரசியுடன் கூட அவர் பெரிதாக எதுவும் உரையாடவில்லை. வேறு யாருடனும் அவர் பேசிக் கொள்ளவில்லை. தமிழகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளைக் கூட அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவர் காட்டவில்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். சசிகலாவின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, ஒரு சிறிய கட்டில் அவருக்கு வழங்கப்பட்டது. அடுத்த நாள் காலை அதாவது வியாழக்கிழமை அதிகாலையிலேயே சசிகலா எழுந்து விட்டார்.

காலையில் புளி சாதமும், காபியும் உணவாக வழங்கப்பட்டது. அந்த அறையை விட்டு சசிகலா வெளியே வரவே இல்லை. பெங்களூரு மற்றும் தமிழகத்தில் இருந்து ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறையில் அவரைச் சந்திக்க விரும்பினார்கள். ஆனால், யாரையும் சசிகலா சந்திக்க விரும்பவில்லை என்று சிறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் சசிகலா அமைதியான மனநிலையிலேயே காணப்படுகிறார். யாருடனும் பெரிய அளவில் பேசிக் கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது....

-சி.வெங்கட சேது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!