வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (18/02/2017)

கடைசி தொடர்பு:09:55 (21/02/2017)

'எங்களை நொறுக்கிவிட்டு அவர்கள் நொறுக்குத்தீனி சாப்பிட்டார்கள்!'  -கொதிக்கும் தி.மு.க பெண் எம்.எல்.ஏ. #FloorTest #OPSvsEPS #VikatanExclusive

ஸ்டாலின்

மிழக சட்டமன்றத்தில் நடந்து முடிந்த காட்சிகளை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் தமிழக மக்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நடத்திய போராட்டங்கள் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ' பன்னீர்செல்வம் அதிர்ச்சியை கொடுப்பார் என எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது தி.மு.க. இப்படியொரு ட்விஸ்ட்டை எடப்பாடி தரப்பில் எதிர்பார்க்கவில்லை' என்கின்றனர் அரசியல் பிரமுகர்கள். 

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், ' 15 நாளில் பெரும்பான்மையை நிரூபியுங்கள்' என உத்தரவிட்டார். ' கால அவகாசம் எடுத்துக் கொண்டால் நிலைமை கைமீறிப் போய்விடும்' என்பதை உணர்ந்து, ஒரேநாள் இடைவெளியில், 'பெரும்பான்மையை இன்று நிரூபிப்பதாக' அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இன்று காலை கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏக்கள் மிகுந்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். ' சபைக்குள் பெரும் கலவரம் உருவாக இருக்கிறது. அனைவரும் அமைதியாக இருங்கள்' என முன்கூட்டியே அ.தி.மு.க எம்.எல்.ஏக்களிடம் எச்சரிக்கை செய்துவிட்டனர் அ.தி.மு.க சீனியர்கள். காலையில் சபை கூடியவுடன், ' ரகசிய வாக்கெடுப்பு நடத்துங்கள்' என்றுகூறி அமளியில் ஈடுபட்டனர் தி.மு.க உறுப்பினர்கள். இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதிக்காததால், அவரது இருக்கைக்கு முன்பு கூடி கூச்சல் எழுப்பினர் தி.மு.க எம்.எல்.ஏக்கள். ஒருகட்டத்தில், மைக் உடைப்பு, தாள் கிழிப்பு, சேர் சேதம் என நிலைமை மோசமடைந்தது. ' எனக்கு நடந்த கொடுமைகளை நான் யாரிடம் சொல்ல?' என வேதனையை வெளிப்படுத்தினார் சபாநாயகர். தற்போது ஆளுநரை சந்தித்து முறையிட்டுவிட்டு, காந்தி சிலை முன்பு உண்ணாவிரதத்தில் அமர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். 

பூங்கோதை ஆலடி அருணா'சட்டசபையில் என்ன நடந்தது?' என தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணாவிடம் பேசினோம். 

" எங்களுடைய ஒரே கோரிக்கை, 'ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்பதுதான். எம்.எல்.ஏக்களைக் கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்திருந்ததால், 'ஒரு வாரம் கழித்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும்' என சபாநாயகரிடம் தெரிவித்தோம். இதையே பன்னீர்செல்வமும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினார்கள். 'ரகசிய வாக்கெடுப்பு என்பது விதியில் இல்லை' என சபாநாயகர் தெரிவித்தார். அப்படியானால், ' வாக்கெடுப்பை ஒருவாரம் தள்ளி வைக்க உங்களால் முடியும். அனைவரும் சென்று மக்களைச் சந்தித்துவிட்டு வரட்டும். அதன்பிறகு வாக்கெடுப்பை நடத்துங்கள்' என்றோம். 'ஒரு குற்றவாளியால் நியமனம் செய்யப்பட்ட முதல்வரை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன' என எங்கள் கருத்தை முன்வைத்தோம். மூன்று மணி வரையில் அவையை ஒத்திவைத்துவிட்டு, சபைக்குள் நுழைந்தார் சபாநாயகர். அடுத்த நொடியே, எங்களை அவையில் இருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டார்". 

நீங்கள் ஏன் சட்டசபை பென்ச்சில் ஏறி நின்றீர்கள்? 

"எங்கள் கட்சித் தலைமை முன்வைத்த கோரிக்கைகளை நானும் வலியுறுத்தினேன். நாங்கள் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அவர் எப்போதுமே நடுநிலையாக நடந்து கொண்டதில்லை. அ.தி.மு.க உறுப்பினர் போலவே நடந்து கொள்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பென்ச்சில் ஏறி நின்றேன்". 

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டபோது என்ன நடந்தது? 

"சபை மீண்டும் கூடியதும் ஆயிரக்கணக்கான போலீஸார் எங்களைச் சூழ்ந்துவிட்டனர். ஐ.பெரியசாமி அண்ணன், துரைமுருகன் அண்ணன் போன்றோருக்கு எல்லாம் என்ன நடந்தது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் கட்சியின் செயல் தலைவருக்கு அடி விழுந்தது. எம்.எல்.ஏ ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்திலும், அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு நொறுக்குத் தீனிகள் கொண்டு வந்து கொடுத்தார்கள். 'அவர்கள் கலைந்துவிடக் கூடாது' என்பதில் அ.தி.மு.க அமைச்சர்கள் உறுதியாக இருந்தார்கள்". 

சபையில் பன்னீர்செல்வம் ஏன் அமைதியாக இருந்தார்? 

"அதைப் பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். இது ஒரு குற்றவாளி அரசு. எங்களுக்கு பன்னீர்செல்வமும் எடப்பாடியும் ஒன்றுதான். அ.தி.மு.க ஆட்சி அகல வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்". 

சபையில் நீங்கள் நடந்து கொண்டதைப் பார்த்தால், முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு அவைக்குள் நுழைந்தீர்களா? 

" அப்படி இல்லை. ஒரு வாரம் கழித்து வாக்கெடுப்பு நடத்துவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதை அவர்கள் செய்யாததால், எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தோம்". 

- ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்