தொகுதிப்பக்கம் செல்ல முடியுமா சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ?

சட்டசபை

.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா ஆசி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருவழியாக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

சசிகலா தலைமையை ஏற்காத அ.தி.மு.க-வினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா ஆதரவுடன் முதல்வராகியிருக்கும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்போர் ஒரு அணியாகவும் பிரிந்து நிற்கின்றனர்.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூடியது.

எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், அரசை எதிர்த்து ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததாகவும் தெரிவித்து, அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இன்னும் எத்தனை மாதங்களுக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியே என அரசியல் நோக்கர்களும், சாமான்ய மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பதை தி.மு.க-வும், ஓ.பி.எஸ் தரப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அவர்கள் சட்டரீதியாக எந்த நடவடிக்கையை வேண்டுமானாலும் எடுக்கக்கூடும்.

"நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா ஆதரவு அரசை வெற்றிபெறச் செய்த எம்.எல்.ஏக்கள் தொகுதிப்பக்கம் தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சசிகலா தலைமைக்கு ஆதரவு தெரிவித்த 122 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் நேரா கிளம்பி அவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதிக்குச் சென்றால், வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று கொந்தளிக்கிறார் நாமக்கல் தொகுதியைச் சேர்ந்த ஒருவர். 

சட்டசபை

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மொத்த தமிழ்நாட்டையும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த கும்பல் கேலிக்கூத்தாக்கி இருப்பதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "மக்களிடம் வாங்கிய ஓட்டுகளை மதுவுக்கும், பலகோடி ரூபாய் பணத்துக்கும் மாஃபியா கும்பலுக்கு வித்துட்டு, தமிழ்நாட்டில் ஜனநாயகத்துக்கு சாவு மணி அடிச்ச இதுபோன்ற எம்.எல்.ஏக்களை நாம நல்லபடி வரவேற்கத் தயாராக வேண்டாமா மக்களே..?..122 தொகுதிகளிலும் மக்கள் எல்லாரும் ஒண்ணு கூடி நம் வாக்குகளை வீணடித்தவர்களுக்கு "மிகச்சிறப்பான (?)' வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யுங்க...என்ன செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில்)" என்று தமிழக மக்கள் கேட்டவண்ணம் உள்ளனர். இந்த வகையில், தமிழகம் முழுவதும் எடப்பாடி மீதும், அவருக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏக்கள் மீதும் மக்கள் கடும் கொந்தளிப்புடன் உள்ளனர். 

ஒருவேளை இந்த அரசு எஞ்சியுள்ள நான்கரை ஆண்டுகாலம் பதவியில் நீடித்தாலும், எதிர்வரும் காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு தங்கள் தொகுதிப்பக்கம் தலைகாட்ட முடியும்?  75 நாட்கள் அப்போலோவில் நடந்தது என்ன என்பதற்கு சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ இதுவரை பதிலளிக்கவில்லை. மாரடைப்பால் மரணம் என்பதை ஒருவேளை ஒப்புக்கொண்டாலும், அதற்கான ஓரிரு ஆதாரங்களையாவது வெளியிடலாமே? என்பது சாமான்ய தொண்டனின் கேள்வி. சசிகலா குடும்பத்தைப் பொறுத்தவரை மக்களின் கோபம் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியதாக இல்லை. இதனை சசிகலா தரப்பினர் உணர்ந்து, தற்போது எம்.எல்.ஏக்களாக உள்ளவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. சசிகலா தரப்பினர் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் மீதான வெறுப்பு காரணமாக, எதிர்வரும் தேர்தலில் புதியவர்களே நிறுத்தப்படுவார்கள். அப்போதுதான் தங்கள் தரப்பு ஓட்டு வாங்க முடியும் என்று சசிகலா தரப்பும் உணர்ந்தே உள்ளது. 

சட்டசபை

தவிர, தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே, அ.தி.மு.க அலுவலகம் மற்றும் இரட்டை இலை சின்னம் யாருக்கு? சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லுமா என்பன போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்கும். எப்படி இருப்பினும் இப்போது அ.தி.மு.க எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள் மீண்டும் அதே தொகுதியில் வெற்றிபெறுவது கண்டிப்பாக இயலாத காரியம். முதலில் சசிகலா தரப்பு அவர்களுக்கு தேர்தலில் சீட் வழங்காது என்பதுதான் கண்கூடான உண்மை. எனவே, 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்ற ரீதியில்தான் தமிழக அரசின் மற்றும் எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் அமையும். முடிந்தவரை அல்லது கிடைத்தவரை ஊழல் செய்து சுருட்ட வேண்டும். எப்படியும் மீண்டும் ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராகப் போவதில்லை என்பதால், இந்த முறை எவ்வளவு முடியுமோ அவ்வளவு லஞ்சம் பெற்று 'செட்டில்' ஆகிட வேண்டும் என்ற எண்ணமே சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணஓட்டமாக இருக்கும். எப்படிப் பார்த்தாலும் தமிழக மக்களுக்குத் தான் திண்டாட்டம். 'மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்பதை அரசியல்வாதிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உணர்ந்து நடந்து கொண்டால்தான் எதிர்வரும் காலத்தில் அவர்கள் தொகுதிப்பக்கம் தலைகாட்ட முடியும்!  

- சி.வெங்கட சேது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!