தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும்! - தமிழருவி மணியன் 

தமிழருவி மணியன்

தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தி உள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டப் பேரவை,  சபாநாயகரின் தவறான அணுகுமுறையால் மீண்டும் ஒரு ஜனநாயகப் படுகொலைக்குச் சாட்சியாகத் திகழ்ந்திருக்கிறது. எதிர்க்கட்சியினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அமைதியாக எழுப்பிய கோரிக்கையை சபாநாயகர் ஏற்றிருந்தால் எந்த அசம்பாவிதமும் சட்டப் பேரவையில் அரங்கேறியிருக்க வாய்ப்பில்லை. 10 நாட்களுக்கு மேல் கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அங்கிருந்து சட்டப்  பேரவைக்கு நேரே அழைத்து வரப்பட்டதால் தான் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை வலியுறுத்த நேர்ந்தது. 

பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு தங்கள் பக்கம் இருப்பதாக ஆளும் தரப்பினர் ஐயத்திற்கு இடமின்றி நம்பியிருந்தால் ரகசிய வாக்கெடுப்பை நடத்த தாமாகவே முன்வந்திருக்க வேண்டும்.  பலாத்காரத்தைப் பயன்படுத்தி எதிர்கட்சியினரை வெளியேற்றிய  நிலையில் ஆளும்  கட்சிக்குப்  பெரும்பான்மை இருப்பதாகச்  சபாநாயகர் அறிவித்ததை தமிழக மக்கள் அங்கீகரிக்கத்  தயாராக இல்லை. எந்த நிலையிலும் மன்னார்குடி குடும்பத்தின் ஆட்சி நீடிக்கலாகாது என்பதே தமிழகத்து மக்களின் அழுத்தமான கருத்தாகும். மக்கள் விருப்பத்தை மனதில் நிறுத்திச்  சட்டம் ஒழுங்கைக் காக்கவும் ஜனநாயகப் படுகொலையைத் தடுக்கவும் ஆளுநர் இந்த ஆட்சியைக் கலைக்க அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்த குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க  வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!