வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (19/02/2017)

கடைசி தொடர்பு:10:03 (21/02/2017)

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சில கேள்விகள்..?

மிழக அரசியலில், கடந்த 7-ம் தேதி ஆரம்பித்த சூறாவளிப் புயல் நேற்றைய வாக்கெடுப்பு வைபவத்தோடு கரை கடந்துவிட்டது. இடைப்பட்ட இந்த பத்து நாட்களில்தான் எத்தனை எத்தனை திருப்பங்கள், ஆச்சரியங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள்... எது எப்படியோ... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 122 பேர் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டுவிட்டார்.! தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அசாதாரண சூழலில் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு சில குறிப்புகள் இங்கே...அரசியல் விஷயங்களில், தாங்கள் எந்தப் பக்கம் என்று இதுவரையிலும் உறுதியான அடையாளம் காட்டிக்கொள்ளாத கோடம்பாக்கத்துக்காரர்கள் இந்த முறை தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்துத் துணிச்சலாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அவர்களது கருத்துகள் சரியா, தவறா என்ற ஆராய்ச்சிக்குள் போகாமல், தைரியமான அவர்களது அணுகுமுறையை வரவேற்றே ஆகவேண்டும்.

எடப்பாடி பழனிசாமி

சமீபகால தமிழக அரசியல் நிலவரங்களை தனது ட்விட்டர் பக்கங்களில் கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். நேற்றைய தினம் அவர் பதிவிட்டுள்ள செய்தியில், 'கவர்னரது மின்னஞ்சல் முகவரிக்கு தமிழக மக்கள் தங்களது மனக் குமுறல்களை அனுப்பிவைக்க வேண்டும்' என்று கோரியிருக்கிறார். கூடவே, 'தொகுதிக்கு திரும்பும் தங்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு உரிய மரியாதை அளித்து வரவேற்பு அளிக்க வேண்டும்' என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

'இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம்தான் நண்பர்களே...' என்று மக்களின் இயலாமையையே பகடி செய்திருக்கிறார் நடிகர் சூர்யா. இதே வரிசையில், நடிகர் சித்தார்த், அர்விந்த் சுவாமி, கருணாகரன், குஷ்பு சுந்தர்... என பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். வாக்கெடுப்பின்போது சட்டசபையில் அரங்கேறிய சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் மாண்பையே குலைத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள் வழக்கம்போல், தத்தமது நிலைப்பாடுகளைப் பொருத்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது, பேசப்படும் விஷயத்தைப் பொருத்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பரிமாறிக்கொள்ளும் அதிருப்திகளை அலட்சியம் செய்யாமல், கவனத்தில் கொண்டு சிறப்புற பணியாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற முதல்வர், ''எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவதே எங்களது குறிக்கோள்.'' என்று செய்தியாளர்களிடம் உறுதிபட தெரிவித்துள்ளார். அந்தவகையில், தமிழகத்தின் தலைவலியாகவேத் தொடர்ந்து வரும் சில பிரச்னைகள் குறித்த கேள்விகளை முதல்வரின் கவனத்துக்கு இங்கே வைக்கிறோம்...

''ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு சம்மதிக்க முடியாது'' என்றார் ஜெயலலிதா. அதேபோல், ''மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணங்களை உயர்த்தும் மத்திய அரசின் உதய் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.'' என்று துணிச்சலாக சொன்னார். இதுமட்டுமா... ''கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் - சமூக பொருளாதார நோக்கங்களை சிதைக்கும் மருத்துவக் கல்லூரிக்கான நீட் தேர்வு முறையை நிரந்தரமாக நீக்க வேண்டும்.'' என்று ஓங்கி குரல் கொடுத்தார் ஜெயலலிதா. மேலும், ''தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்'' என்றும் கோரிக்கை வைத்து மத்திய அரசின் நிலைப்பாடுகளை துணிச்சலாக எதிர்கொண்டவர் ஜெயலலிதா.

ஆனால், முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு மேற்கண்ட நான்கு திட்டங்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க அரசு அவசரம் அவசரமாக சம்மதம் தெரிவித்து வரவேற்பு கொடுத்துவிட்டது. தற்போது அந்த ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவதாக உறுதிகொடுத்துள்ள தாங்கள் இவ்விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள்?

வரலாறு காணாத வறட்சியால், கருகிக் கொண்டிருக்கும் பயிர்களுக்குப் போட்டியாக நூற்றுக்கணக்கான விவசாயிகளும் தற்கொலை செய்து மாண்டு போனார்களே... அவர்களது துயர் துடைக்க நிரந்தரத் திட்டமாக என்ன வழிவகை கைவசம் வைத்துள்ளீர்கள்?

பருவமழை பொய்த்துப் போனதால், அடுத்து வரும் மாதங்களில் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுக்க தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடப் போகிறதே.... அதைத் தடுத்து நிறுத்த என்ன வழிவகை காணப் போகிறீர்கள்?

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் காவிரியை தரமறுக்கும் கர்நாடக அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கதையாக தற்போது மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சிகளில் மும்முரமாகியுள்ளதே... இதனைத் தடுத்து நிறுத்த என்ன செய்யப்போகிறீர்கள்?

பாலாற்றின் குறுக்கே 50 அடி உயரத்தில் தடுப்பணையைக் கட்டி முடித்திருக்கும் ஆந்திர அரசு, தற்போது, மேலும் 2 தடுப்பணைகளைக் கட்டி முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆந்திர அரசின் இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குள் ஈரம் படரச் செய்வீர்களா? அல்லது நல்லதாகப் போயிற்று பாலாற்று மணலை அள்ள டெண்டர் விடலாம் என்று முடிவெடுப்பீர்களா?

கடந்த ஆண்டு தேர்தலில் ஜெயித்து வந்ததும், முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றி நீங்களும் மேற்கொண்டு கடைகளை மூட நடவடிக்கை எடுப்பீர்களா? (அதற்கு தங்களது கட்சியின் பொதுச்செயலாளர் ஒப்புதல் கிடைக்குமா?

கடந்த சில மாதங்களாக உள்ளாட்சி நிர்வாகம் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதைத் தடுக்கும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுமா? அல்லது அதிகாரிகள் பதவி நீட்டிப்பு, மேல் முறையீட்டு மனு காத்திருப்பு எனக் காரணங்கள் பல சொல்லி தேர்தலை தள்ளிப்போடுவீர்களா?

மணல் கொள்ளையில் புதிய சரித்திரம் படைத்த மாஃபியா கும்பல்களை ஒழித்துக்கட்டி நியாயமான நடைமுறையை அமுல்படுத்தி தமிழக இயற்கை வளங்களைக் காக்கும் நடவடிக்கையை எடுப்பீர்களா? அல்லது அது மேலிட சமாச்சாரம்... என்று ஒதுங்கிக் கொள்வீர்களா?

- இன்னும் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன; ஆனால், இடம் போதாது. நிறைவாக ஒரே ஒரு கேள்வி... யாரை எதிர்த்து நீங்கள் இன்றைக்கு இந்தப் பொறுப்புக்கு வந்தீர்களோ... அவரது பாணியிலேயே, கட்சித் தலைமைக்கு அடிபணிந்து, கை கட்டி, வாய் பொத்தி அடிமை சேவகமாக முதல்வர் பணியாற்றினால், அதற்கு பெரியகுளம் என்ன? எடப்பாடி என்றால்தான் என்ன?

கிடைத்ததற்கரிய வாய்ப்பாக கொங்கு மண்டலத்துக்கு கிடைத்திருக்கும் இந்த நல்வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு.... காத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்!

- த.கதிரவன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்