நீர் தேடிப்போவோம்.. இல்லையேல் வேறு ஊர் தேடிப்போக வேண்டிவரும்...


கோவை, ஈரோடு, திருப்பூர்  ஆகிய மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால மிக முக்கியக் கோரிக்கையாக விளங்குகிறது அவிநாசி - அத்திக்கடவு திட்டம். மூன்று மாவட்ட மக்கள், 72 குளங்கள், 300-க்கும் மேற்பட்ட வறட்சியால் வாடி வதையும் கிராமங்களின் நீர் ஆதாரத்துக்கான திட்டமாக இது விளங்குகிறது.


 

1800 அடி வரையில், நிலத்தடி நீர் கிடைக்காத காரணத்தால், நிலத்தடி நீரை செறிவூட்டும் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் உடனே நிறைவேற்றக்கோரி கோரிக்கை வைத்து வந்த மக்கள், கடையடைப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, மொட்டையடித்தல் என தொடர் போராட்டங்களை கடந்த ஆண்டு நடத்தி, தமிழக அரசை ஸ்தம்பிக்கச் செய்தனர்.

அப்போது 70-க்கும் மேற்பட்டோர் 12 நாட்கள் தொடர்ந்து நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு செவிசாய்க்கும் விதமாக தமிழக அரசு, 3.27 கோடி நிதியை ஆரம்ப கட்டப் பணிகளுக்காக ஒதுக்கி அரசாணையை வெளியிட்டது.

ஆனால் ஒரு வருட காலம் கடந்து சென்றும், இன்றுவரை அவிநாசி - அத்திக்கடவு திட்டத்துக்கான பணிகளை விரைவுபடுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு கிடக்கிறது. அதன் தொடர்ச்சியாக அவிநாசி - அத்திக்கடவு போராட்டக் குழுவினர் இத்திட்டம் பயன்பெறும் கிராமங்கள் அனைத்துக்கும், 843 ஊராட்சிகளிலும் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் குறித்த பெயர்ப் பலகைகளை திறந்தும், தொடர் விழிப்புஉணர்வு நிகழ்வுகளை நடத்திய வண்ணம் இருந்தனர். 

 


 

இருப்பினும், அரசாணை அறிவித்து ஒருவருட காலமாகியும், இத்திட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கடந்த வருடம் தமிழக அரசு அரசாணை வெளியிட்ட பிப்ரவரி 19-ம் தேதி தினமான இன்று, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக திரண்டு, அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு எதிரில் இருக்கும் அத்திக்கடவு திடலில் மாபெரும் அடையாள உண்ணாவிரதத்தை நடத்தியிருக்கின்றனர்.

போராட்டத்தில் ஏராளமான கட்சி தலைவர்களும், சுற்றுச் சூழல் அமைப்புகளும், விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்களும் திரளாக கலந்துகொண்டு இந்த மக்கள் போராட்டத்துக்கு ஆதரவளித்தனர்.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று, பொதுப்பணித்துறையை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதிக்குள் திட்டத்தை இறுதிசெய்து, நிதி ஒதுக்கப்பட்டு, தனி அலுவலகம் அமைத்து பணிகளை முழுமூச்சாக துவங்கவில்லையென்றால் அடுத்தகட்டமாக மீண்டும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்தமுறையை விட இன்னும் தீவிரமாக முன்னெடுப்போம் என்றும், மேலும் பல தொடர் போராட்டங்களை தீவிரப்படுத்த இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

- தி. ஜெயப்பிரகாஷ்
படங்கள் : க.மணிவண்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!