வெளியிடப்பட்ட நேரம்: 07:38 (21/02/2017)

கடைசி தொடர்பு:12:08 (22/02/2017)

எடப்பாடி முதல்வராக இவர்தான் காரணம்...!

ஜெயலலிதா - சொத்து குவிப்பு வழக்கு வழக்கறிஞர்

"நான் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதாவுடன்தான் இருந்தேன். திடீரென ஒருநாள் என்னை வெளியற்றி விட்டார். அவரோட சொத்துக்கள் பத்தி எல்லாம் தெரிஞ்ச என்னை அவமானப்படுத்துனதுக்கு 'உன்னை எப்படி அவமானப்படுதுறேன்னு பாருன்னு' கோபத்துல போட்ட வழக்குதான் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. நான் செஞ்சது எட்டப்பன் வேலைதான். ஆனா, எனக்கு அப்ப வேறவழி தெரியல'' என்று வழக்கு  தொடர்ந்து 20 வருடங்கள் கடந்த பிறகும் அதே கோபத்தோடு சொல்கிறார் வழக்கறிஞர் வெங்கட்ராமன். இன்று, தமிழக அரசியலையே மாற்றியுள்ள இந்த வழக்கு, ஒரு சிறு மனஸ்தாபத்தில் உருவானதுதான். சொத்துக்குவிப்பு வழக்கின் வரலாறு குறித்து மேலும் நம்மிடம் விவரிக்கிறார் வெங்கட்ராமன். 

"ஜெயலலிதாவுக்காக நான் பல காரியங்களைச் செய்து கொடுத்துள்ளேன். கட்சி அலுவலகத்தை சிலர் பறித்துக்கொண்டபோது, உச்சநீதிமன்றம் வரை சென்று வந்தேன். அதற்குப் பிறகுதான் ஜெயலலிதாவுடனான நட்பு அதிகமானது. அதன் காரணமாக, என்னை காவிரி நடுவர் மன்றத்தில் தமிழகத்தின் சார்பில் வழக்கறிஞராக நியமித்தார் ஜெயலலிதா. எனது வளர்ச்சி, சிலருக்குப் பிடிக்காததால் என்னைப்பற்றி அவரிடம் சிலர் தவறாகச் சொல்ல ஆரம்பித்தனர். அதைப்பற்றி என்னிடம் எதுவும் கேட்காமல் திடீரென ஒருநாள் என்னை போயஸ்கார்டன் தொடர்பிலிருந்து வெளியற்றி விட்டார் ஜெயலலிதா.அதுமட்டும் இல்லாமல் மூன்று மாதம் டெல்லி சென்று காவிரி நடுவர் மன்றத்தில் வாதாடியதற்கு சம்பளத்தையும் தர மறுத்து விட்டார். 'இவ்வளவு நம்பிக்கையாக இருந்ததற்கு இதுதான் எனக்குச் செய்ற  உபகாரமா?' அப்படின்னு எனக்கு கோபம் தலைக்கு ஏறிடுச்சு. என்ன செய்யலாம்னு யோசிச்சேன். ஜெயலலிதாவோட சொத்துக்கள் தொடர்பா எல்லாவற்றையும் நான்தான் கவனிச்சுக்கிட்டு இருந்ததால, எந்தெந்தவகையில முறைகேடா சொத்து சேர்த்தாங்கன்ற முழுதகவலும் எனக்கு நல்லாத் தெரியும். என்னைய அவமானப்படுத்துன உங்களை அவமானப்படுத்த இதுதான் சரியான வழின்னு நினைச்சு போட்ட வழக்குதான் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு. அப்ப சுப்பிரமணியன் சுவாமி, சின்னதா ஒரு கட்சியை வச்சு ஓட்டிக்கிட்டு இருந்தாரு. அவருகிட்ட போனேன். 'ஜெயலலிதாவை ஒழிச்சுக் கட்டணும். அதுக்கு தேவையான ஆதாரங்கள் அடங்கிய மெட்டிரியல் என்கிட்ட இருக்கு. எனக்கு உதவி பண்ணுங்கன்னு' கேட்டேன். அவரும் சரி என்று சொல்ல, இப்படித்தான் இந்த வழக்கிற்குள் வந்தாரு சுவாமி. அப்புறம் அவர வச்சு, நாடாளுமன்றத்தில் 'ஜெயலலிதாவோட வருமானம் எவ்வளவுன்னு' கேள்வி கேட்க வச்சோம். அதுக்கு ஜெயலலிதா கொடுத்த பதிலில், 1989-90-ம் வருடம் அவருடைய வருமானம் பூஜ்யம் என்று தெரிவித்ததுடன், அடுத்த இரண்டு வருடத்திற்கான வருமானத்தையும் அந்த பதிலில் கூறியிருந்தார்கள்.

சொத்து குவிப்பு வழக்கு


ஆனால், 1991-94 காலகட்டத்தில், ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்தபோது சொத்து மதிப்பு ரூ. 38.21 கோடி என்று அவரே தெரிவித்த பதிலையும் வைத்துதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 1989-90-ம் ஆண்டு வரை பூஜ்யம் வருமானத்தைக் கொண்டிருந்த ஜெயலலிதா, பின்னர் முதல்வராகி மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு எப்படி இவ்வளவு வருமானத்தை ஈட்ட முடிந்தது என்று கேட்டுத்தான் 1995-ம் ஆண்டில் வழக்குத் தொடந்தோம். இந்த வழக்குக்கு ஆதாரமாக, 1986-ல் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா எழுதிய ஒரு கடிதமும், அதே தேதியில் ராமசாமி உடையாருக்கு எழுதிய கடிதமும் இணைக்கப்பட்டது.  அந்தக் கடிதத்தில், அவரது திராட்சைத் தோட்ட செலவிற்காக வாங்கிய முன்று லட்சம் ரூபாய் கடனை கொடுத்ததற்காக, இருவருக்கும் ஜெயலலிதா நன்றி சொல்லி இருந்தார்.

சொத்து குவிப்பு வழக்கு

அதேபோன்று, ராஜ்யசபாவில் அளித்த பதில், திராட்சைத் தோட்டத்தில் வீடுகட்ட அனுமதி கேட்டு ஹைதராபாத் ஊரக வளர்ச்சித் துறைக்கு எழுதிய கடிதம் மற்றும் போயஸ்தோட்டத்தில் உள்ள வீடு விரிவாக்கத்திற்கான செலவு ஆகியவை சேர்க்கப்பட்டன. போயஸ்தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் 'வேதா இல்லம்' வீட்டைச் சுற்றி, அந்தக் காலத்தில் பல குடிசைகள் இருந்தன. குடிசைகள் இருந்த இடம் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது. தன் வீடு அருகில் குடிசைகள் இருப்பது ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை. அந்த இடத்தைக் கேட்டதற்கு உரிமையாளர் தர மறுத்து விட்டார். ஆனால் அவரை மிரட்டி எட்டு லட்சம் ரூபாய்க்கு அந்த இடத்தை வாங்கினார். அதற்கு மூன்று காசோலைகள் கொடுத்தார். 'எட்டு லட்சம் ரூபாய் கொடுப்பதற்கு மூன்று வெவ்வேறு வங்கிகளின் காசோலைகளை அளித்த ஜெயலலிதாவுக்கு மிகக்குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு பணம் வந்தது?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில்தான் விசித்திரமானது. ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் ஒயின் உற்பத்தி மூலம் ஒரு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் என பத்து ஏக்கருக்கு பத்து லட்சம் ரூபாய் வருமானம் வந்ததாகத் தெரிவித்தனர். இதே ஜெயலலிதாதான் நான்கு வருடங்களுக்கு முன்பு திராட்சைத் தோட்டத்தில், வீடுகட்ட உடையாரிடம் வாங்கிய மூன்று லட்ச ரூபாய் கடனை அடைக்க முடியாமல், அந்தத் தொகையை எம்.ஜி.ஆர் கொடுத்தார். அதற்கு நன்றி சொல்லித்தான்  இருவருக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதி இருந்தார். '1989-ம் ஆண்டில்வருமானமே இல்லாமல் இருந்தபோது காய்க்காத திராட்சைத் தோட்டம் இவர் முதலமைச்சர் ஆனவுடன் எப்படி ஒரு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானம் வரும் அளவுக்கு காய்த்தது' என்று கேட்டேன்.

அடுத்ததாக, டான்சி வழக்கு. அதற்கு உண்டான அத்தனை விபரங்களையும் சேகரித்துத்தான் இந்த வழக்கை தொடுத்தேன். ஜெயலலிதாவின் முறையான சொத்துகள் என்றால் 'வேதா இல்லம்', 'ஹைதரபாத் தோட்டம் - வீடு', செய்யூரில் மூன்று ஏக்கர் நிலம், ஒரு பழைய அம்பாசிடர் கார், மாருதி கார், சில கம்பெனிகளில் பங்குகள். இதுதான் அவரது மொத்த சொத்து. ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு பல்வேறு விதங்களில் அவர் சொத்துகள் சேர்க்க ஆரம்பித்தார். அதற்கான வருமானம் எங்கிருந்து வந்தது என்று காட்ட, 32 போலி நிறுவனங்களைத் தொடங்கினர். இதில் பத்து நிறுவனங்கள் ஒரே நாளில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் எல்லாம் வேதா இல்லம் முகவரியில்தான் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. இதுபோன்ற ஆதாரங்களை எல்லாம் சேகரித்துத்தான் வழக்கைத் தொடுத்தேன். இதில், சசிகலாவை எப்படிச் சேர்த்தேன் என்றால், 1990 வரை எந்தவித வருமானமும் இல்லாமல் இருந்த ஜெயலலிதா, முதலமைச்சர் ஆனவுடன் அவருடைய வருமானம் அதிகமாகும்போது அவருடன் வேதா இல்லத்தில் இருந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு என்றுகூறி, இந்த வழக்கில் அவர்களையும் சேர்த்தேன். 

 

சொத்து குவிப்பு வழக்கு வழக்கறிஞர்
 

சொத்துக்குவிப்பு வழக்கு மட்டும் அல்ல, இதுபோல பல வழக்குகளை ஜெயலலிதா மீது தொடர்ந்து இருக்கிறேன். ஒவ்வொரு முறை வழக்கு தொடரும் போதும் முதல்காப்பி போயஸ் கார்டனுக்கு அனுப்பி விடுவேன். முதலில் பல மிரட்டல்கள் வந்தன. பிறகு கெஞ்ச ஆரம்பித்தனர். எனக்கு எந்த இடைஞ்சலும் கொடுக்க வேண்டாம் என்று கட்சிக்காரர்களுக்கு ஜெயலலிதா கூறி விட்டார். நான் வழக்கைப் பதிவு செய்யும் போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்ததால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பிறகு தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இந்தப் புகாரை அப்படியே நகல் எடுத்து, முன்தேதியிட்டு புகார் பதிவு செய்யப்பட்டது. அப்படி 1995-ம் வருடத்திலேயே வழக்கை தி.மு.க பதிவுசெய்திருக்குமானால், அதுகுறித்து அப்போது அறிக்கையும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் தி.மு.க-வினர் பேசவேயில்லை. ஆனால், இப்போது 'நாங்கள்தான் வழக்குத் தொடர்ந்தோம்' என்கிறார்கள்" என்று கூறி  முடித்தார்.

வெங்கட்ராமன் தொடர்ந்த வழக்கு, தற்போது சசிகலாவை பெங்களூரு சிறையில் அடைக்க வழிசெய்திருக்கிறது. இதனால், சசிகலா முதல்வராவது தடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக வழிவகுத்து விட்டது.

- பிரம்மா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்