வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (21/02/2017)

கடைசி தொடர்பு:12:25 (21/02/2017)

விபத்தில் பலியான மூன்று பேரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம், தென்னமநல்லூர் கிராமம் அருகே 19.2.2017 அன்று எம். புதுப்பட்டியிலிருந்து திருமங்கலம் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தும், கள்ளிக்குடியிலிருந்து தென்னமநல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோவும் மோதியதில், ஷேர் ஆட்டோவில் பயணம்செய்த தென்னமநல்லூரைச் சேர்ந்த கண்ணம்மாள், குருவு ஆகியோர் சம்பவ இடத்திலேயும்; முனியாண்டிபுரத்தைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவர் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை அறிந்து  மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்தச் சாலை விபத்தில் அகால மரணமடைந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில்  சிகிச்சைபெற்றுவரும் இவர்களுக்கு, நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்தச் சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருபவர்களுக்குத்  தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க