வீட்டை காலிசெய்யுங்கள்... ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருக்கடி!

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடிதூக்கியதால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் க்ரீன்வேஸ் இல்லத்திலிருந்து 10 நாட்களுக்குள் வெளியேறுமாறும், சட்டமன்ற உறுப்பினர் விடுதியை வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் ஆளுங்கட்சி நெருக்கடி தருவதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு, ஆளும் தரப்பு நெருக்கடிகள் கொடுக்கத் துவங்கிவிட்டது. அ.தி.மு.க-வின் இரண்டாம்கட்ட தலைவராக இருந்தவர், முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம். இவர், கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்ததும்  அமைக்கப்பட்ட அரசில்,  நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 


மூத்த அமைச்சர் என்பதால், அமைச்சர்களுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்படும் பங்களாவில் அவருக்கு முக்கியத்துவமும் கொடுக்கபட்டது. கீரின்வேஸ் சாலையில் அமைந்துள்ள அரசு பங்களாவில், பெரிய பங்களாவான தென்பெண்ணை வீடு, அவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த வீட்டில்தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக வசித்துவந்தார். 2016-ம் ஆண்டு  அ.தி.மு.க-வே மீண்டும் ஆட்சியைப் பிடித்ததால், அதே வீட்டில் பன்னீர் செல்வம் வசிக்கத் துவங்கினார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, முதல்வராக அவர் பதவியேற்றதும் அவரது வீட்டுக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கபட்டன. வெடிகுண்டு தடுப்பு காவலர்கள் சோதனைசெய்த பிறகே, வீட்டுக்குள் யாரும் செல்லமுடியும் என்ற நிலை இருந்தது.
இந்த வீட்டின் பின்புறத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை பன்னீர்செல்வம் வளர்த்துவந்தார்.இந்நிலையில், கடந்த 5-ம் தேதி முதல்வர் பதவியை ராஜினமாசெய்தார்.இதனால், பன்னீர் செல்வம் காபந்து முதல்வராகச் செயல்பட்டார். ஆனால், இரண்டு நாட்களிலேயே சசிகலாவுக்கு எதிராக தீடிரென போர்க்கொடிதுாக்கி, பரபரப்பை ஏற்படுத்தினார். இது, அ.தி.மு.க தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால், சட்டசபையில் அவரால் பெரும்பாண்மையை நிருபிக்க முடியாமல் போனதால், முதல்வர் பதவியை இழந்து,  சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி மட்டுமே அவர் கைவசம் தற்போது உள்ளது. முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற மறுதினமே, பன்னீர்செல்வம் வீட்டுக்கு பொதுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுவிட்டது. 

 இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களாக பன்னீர்செல்வம் வீட்டை காலிசெய்யாமல் இருப்பதால், அரசு தரப்பில் இருந்து அவருக்கு நெருக்கடிகொடுக்கப்பட்டுவருகிறது. பத்து நாட்களுக்குள் வீட்டை காலி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளதாம். அவருக்கு சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதால், அமைச்சருக்கான இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனச் சொல்லியுள்ளார்கள். 

பொதுவாக, ஆட்சி மாற்றம் நடைபெற்றாலே ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் வீட்டை காலிசெய்ய குறிப்பிட்ட கால அவகாசம் வழங்குவார்கள். ஆனால், பன்னீருக்கு மறுதினத்தில் இருந்தே நெருக்கடிகள் கொடுத்துவருகிறார்கள். அவர் வீட்டுக்கு முன் பேரிகார்டுகளைப் போட்டு பாதையைக்கூட அடைத்துவைத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் புலம்புகின்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!