வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (22/02/2017)

கடைசி தொடர்பு:16:59 (22/02/2017)

'அ.தி.மு.க.வை மற்றவர்கள் அழிக்க விட மாட்டேன்!’ - ஆவேச வைகோ

வைகோ

சுவாரஸ்யமான திருப்பங்கள், சம்பவங்களை நிகழ்த்துவதன்மூலம் தமிழக அரசியலை பரபரப்பாக வைத்திருப்பவர்களில் ஒருவர், வைகோ. மத்திய அரசின் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து கூட்டணிக் கட்சியினர் போராடிக்கொண்டிருந்தபோது, அந்தத் திட்டத்தை ஆதரித்து கூட்டணியை விட்டு வெளியேறியவர். இப்போது, மிகப்பெரும்பாலான கட்சிகள் அ.தி.மு.க.வை எதிர்த்துப் பேசிவரும் நிலையில், அதற்கு மாறான பேச்சு, அறிக்கையின்மூலம் கவனிக்கப்பட்டு வருகிறார் வைகோ.

சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளரானது, சட்டமன்றக்குழுத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டது, ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக இயங்கியது, கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் அடைப்பு என கடந்த சில தினங்களாக அரசியல் பேசாமல் இருந்த வைகோ, சட்டமன்றத்தில் எழுந்த அமளியை அடுத்து அரசியல் பேசத்துவங்கி இருக்கிறார். தன் பேச்சு முழுக்க தி.மு.க.வை மட்டுமே விமர்சிக்கிறார் வைகோ. திருமண நிகழ்வுகளில்கூட தி.மு.க.வை விடாமல் விமர்சிக்கிறார்.

வைகோ

நாகர்கோவிலில் ம.தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் திருமண விழாவில் பங்கேற்று வைகோ பேசுகையில், "எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்குகிறபோது, நான் உள்ளம் உடைந்து கண்ணீர் விட்டேன். ஒருமுறை அண்ணா நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் வழியில், டீ குடிக்க கடையில் நிறுத்தினார். அப்போது, கறுப்பு சிவப்பு தி.மு.க. கொடியைப் பார்த்த கடைக்காரர், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார். 'அவர் வரவில்லை, இன்னொரு நாள் வருவார்' என்று அண்ணா சொன்னார். அப்போது அருகில் இருந்தவர், 'உங்களிடமே எம்.ஜி.ஆரைத்தானே கேட்கிறார்கள்?' என்றார். அதற்கு அண்ணா, 'எம்.ஜி .ஆரை கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இதயங்களிலே வைத்திருக்கிறார்கள். அது இந்த இயக்கத்துக்குத் தேவை. அது நம் இயக்கத்தை வளர்க்கும்' என்றார்.

ஆனால், இன்று என்ன சொல்கிறார்கள்?. "சட்டமன்றத்திலே உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியை ஆதரித்துவிட்டார்கள். இவர்கள் ஊருக்குள்ளே போக முடியாது ஆட்சியைக் கலைக்க வேண்டும். ஜனாதிபதியின் ஆட்சி வர வேண்டும்" என தி.மு.க. செயல் தலைவரின் கூடாரம் கூக்குரலிடுகிறது. நான் நடுநிலையோடு இருப்பவன். இரண்டு கட்சி ஆட்சிகளிலும் ஆற்றுமணல் சுரண்டப்பட்டு தமிழகம் நாசக்காடானது என பகிரங்கமாகக் குற்றம் சாட்டுபவன். ஆனால், எம்.எல்.ஏ க்கள் ஊருக்குப் போக முடியாது என்கிறார்களே ஏன்?. தி.மு.க.வினர் ஒவ்வொரு  இடத்திலும் ஆட்களைத் தயார்செய்துள்ளனர். அவர்களுக்கு கரை வேட்டி கிடையாது. பேன்ட் சர்ட்டிலே வந்து பொதுமக்களைப்போல கூச்சலிடுகிறார்கள். இதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடுகிறார்கள்.

வைகோ

எம்.எல்.ஏ. வீட்டுக்கு போக முடியாவிட்டால் ஆட்சியை கலைத்து விடுவார்களா?.1972 அக்டோபர் 10-ம் தேதி, எம்.ஜி.ஆர்.மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தெருவுக்குள் போக முடியவில்லை. அந்த காலகட்டத்தில் நடந்த பொதுக்கூட்டங்களைப் பத்து நிமிடத்தில் பொதுமக்கள் கல்லெறிந்து விரட்டினார்கள். அதைக்  கேள்விபட்டு, மனம் உடைந்தவனாக நெல்லைக்கு வந்தேன். அங்குள்ள 36 வார்டுகளிலும் கொடியேற்றிவிட்டு கூட்டத்தை நடத்தினேன். அப்போது, என் மீது அ.தி.மு.க. தாக்குதல் நடத்தியது. நூலிழையில் தப்பினேன்.

இப்போது எதிர்க்கட்சி செயல் தலைவர் எந்தச் சங்கடத்திலும் சிக்கமாட்டார்; தப்பிவிடுவார், அவர் சுகவாசி. நான் சாதாரண தரைப்படை சிப்பாய். அப்படித்தான் தி.மு.க.வில் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில், தி.மு.க. எம்.எல்.ஏ. யாரும் வெளியே வரமுடியவில்லை. அப்போது ஆட்சியைக் கலைக்கச் சொன்னார்களா? இல்லையே.

இப்போது என்னை மிகவும் இழிவுபடுத்தி சோஷியல் மீடியாவில் போடுகிறார்கள். இது, இரண்டு மாதமாக அதிகமாகி இருக்கிறது. கேவலமான மிருகத்தின் தலையில் என் முகத்தை வைத்து, இழிவான வார்த்தைகளைப் போட்டு ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் போடுகிறார்கள். அதுபோல என் வீட்டு முகவரியைப் போட்டு, தொலைபேசி எண்ணைப் போட்டு, நெருப்பால் இவனைச் சுடுங்கள் என்று சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்கள். இதற்காக நான் கவலைப்படவில்லை. அதற்காக,  கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஒரு லைக்குக்கு 300 ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால், இவை என்னை ஒன்றும் செய்யாது . நான் பிரளயங்களையும், எரிமலைகளையும் நேரடியாகச் சந்தித்துவிட்டு வாழ்கிறவன்.

வைகோ

பெரியார், அண்ணா போன்றவர்கள் வளர்த்த திராவிட இயக்கம் அழிந்துவிடக்கூடாது என நினைப்பவன் நான். எம்.ஜி.ஆர், அண்ணாவின் படத்தைக் கொடியிலே போடவில்லை என்றால், அண்ணாவின் படமே உலகுக்குத் தெரிந்திருக்காது. அண்ணா தி.மு.க. என்பதால், அண்ணா இருக்கிறது. ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியில் அ.தி.மு.க.வை அழித்துவிடலாம் என்பது நமது திராவிட இயக்கத்தின் ஜென்ம விரோதிகளின் இலக்கு. அதற்கு, நான் விடமாட்டேன். எனக்கு எந்தப் பதவி ஆசையும் கிடையாது," எனப் பேசிய வைகோ, இறுதியில் மணமக்களை வாழ்த்தி, பேச்சை நிறைவுசெய்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "சட்டமன்றத்தில் தற்போதைய  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது சொந்தத் தொகுதிகளுக்குச் செல்லும்போது மக்களைத்  தூண்டிவிட்டு  தி.மு.க. குழப்பத்தை  ஏற்படுத்திவருகிறது. தி.மு.க. மோசமான செயல்களில் முழுமூச்சுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். தற்போது  500 கடைகள் அடைக்கப்படும்  என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. ஆனால், தமிழகத்தில்  உள்ள மொத்தக்  கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என்பதே தங்களது  இலக்கு. அண்ணா உருவாக்கிய  இயக்கமான தி.மு.க. இன்று அழிவுப் பாதைக்குச் சென்றுகொண்டிருக்கிறது," என்றார்.

- த.ராம்

படங்கள் : ரா.ராம்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்