வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (22/02/2017)

கடைசி தொடர்பு:17:01 (22/02/2017)

'சமூகம் உங்களைக் கைவிட்டுவிட்டது தனபால்!' - சபாநாயகர் மீது பாயும் கிருஷ்ணசாமி #VikatanExclusive

சபாநாயகர் தனபால்

மிழக சட்டசபைச் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இருக்கிறது, தி.மு.க. இது தொடர்பான கடிதத்தை சட்டசபைச் செயலரிடம் வழங்கியிருக்கிறார், மு.க.ஸ்டாலின். 'தனக்குப் பிரச்னை என்று வரும்போது மட்டும் சாதியைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறார் சபாநாயகர். சமூகம் அவரைக் கைவிட்டு நீண்டநாட்கள் ஆகின்றன' எனக் கொந்தளிக்கிறார், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, கடந்த 18-ம் தேதி நடந்தது. 'ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்' என தி.மு.க முன்வைத்த கோரிக்கையைச் சபாநாயகர் ஏற்கவில்லை. 'பேரவை விதிகளில் அதற்கு இடம் இல்லை' என மறுத்துவிட்டார். சபை தொடங்கியதில் இருந்தே தி.மு.க உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவரின் சட்டையும் கிழிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு சபையில் பேசிய சபாநாயகர் தனபால், 'பேரவையில் நடந்த விஷயங்களை நான் மறந்துவிடலாம் என நினைத்திருந்தேன். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், நானே சட்டையைக் கிழித்ததாகப் பேசியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்டு என் மனம் மிகவும் பாதிக்கப்பட்டது. மிக மிக தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால்தான், தி.மு.க.வினர் என்னைத் தாக்கினர். என் சமூகம் சார்ந்த மக்கள் உயர்ந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு என்னை இழிவுபடுத்தினார்கள். என்னையும் இந்தச் சபையையும் எவ்வளவு தூரம் கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்குக் கேவலப்படுத்திவிட்டார்கள்' என உருக்கமாகப் பேசினார். அவரது பேச்சுக்கு, அவர் சார்ந்த சமுதாயத்தின் பிரதிநிதிகள் எந்தவித எதிர்வினையும் காட்டவில்லை. 

டாக்டர்.கிருஷ்ணசாமி"சபாநாயகர் தனபால் மீது, ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவருக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க ஒருவரும் முன்வர மாட்டார்கள். கடந்த ஆட்சியில் தலித் மக்களின் பிரச்னைகள் குறித்து, சபையில் விவாதம் நடத்துவதற்குக்கூட அவர் அனுமதி அளித்ததில்லை. அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் அவர் விரும்பியதில்லை. பதவி என்று வரும்போது மட்டும்தான் அவருக்கு சாதி தேவைப்படுகிறது" எனக் கொந்தளிக்கிறார், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி.

தொடர்ந்து நம்மிடம் பேசியவர், 'சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில், சபாநாயகருக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. சபையில் கண்ணியக்குறைவாக நடந்தவர்கள் மீதும், அவையின் மாண்பைக் குலைத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அவருக்கு சகல அதிகாரங்களும் உள்ளன. அப்படிப்பட்டவர், இந்த நேரத்தில் இதைச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? இதன்மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார்? சபாநாயகரின் சாதியை குறிவைத்தே, நாற்காலியில் அமரும் வேலையில் உறுப்பினர்கள் இறங்கியிருந்தாலும், அதை அவர் மறைத்துத்தான் பேசியிருக்க வேண்டும்.

வெளிப்படையாக அவையில் பேசவேண்டிய தேவை எழவில்லை. தி.மு.க உறுப்பினரின் நோக்கம் தவறாக இருந்திருக்கலாம். அனைத்து அதிகாரமும் கையில் வைத்திருக்கும் சபாநாயகர் இதைச் சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. 'சசிகலாவின் பினாமி ஆட்சியை அமரவைக்கக் கூடாது' என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அந்தக் கொந்தளிப்பை மாநிலம் முழுவதும் பார்க்கமுடிகிறது. இந்தக் கோபத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகவே சாதி ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார் தனபால். 

இதே சபாநாயகர், கடந்த ஆட்சியில் தன்னுடைய சமூகத்துக்கு ஆதரவாக என்ன நடவடிக்கைகளை எடுத்தார் என்பதை வெளிப்படையாகச் சொல்வாரா? திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணத்துக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணை கேட்டு அவையில் நான் பேசியபோதும் சபாநாயகர் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. பரமக்குடி கலவரத்தில் ஏழு பேர் மரணம் அடைந்த விவகாரத்தில், அதை நியாயப்படுத்தி அரசு அறிக்கை வெளியிட்டது. இதற்கு எதிராக நான் பேசியபோதும், அனுமதி மறுத்தவர்தான் தனபால். தமிழ்நாட்டில் கௌரவக் கொலைகள் தொடர்ச்சியாக நடப்பதைக் கண்டித்து அவையில் கேள்வி எழுப்பியபோதும், தொடர்ந்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இப்போது, சசிகலா எதிர்ப்பைத் திசைதிருப்ப அவருக்கு சாதி தேவைப்பட்டிருக்கிறது. பதவிகளைப் பெறுவதற்கு மட்டுமே அவருக்கு சாதி துணையாக இருக்கிறது. சொந்த சமூகத்து மக்களே அவரைக் கைவிட்டு நீண்ட காலம் ஆகிறது" என்றார் ஆதங்கத்தோடு. 

- ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்