வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (22/02/2017)

கடைசி தொடர்பு:14:38 (22/02/2017)

‘ஜெயலலிதா கனவை நிறைவேற்ற வேண்டும்!’ - கலங்கும் நடிகர் சத்யராஜ்

வேலூர் சிறை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவுக்குத் தயாராகி வருகிறது அ.தி.மு.க தலைமைக் கழகம். அதேநேரம், சிறைக் கைதிகளின் முன்விடுதலை குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன. 'ராஜீவ் காந்தி வழக்கில் சிறைப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக உறுதியான முடிவை எடுத்தார் ஜெயலலிதா. அவரது நோக்கத்தை புதிய அரசு நிறைவேற்றுமா?' எனக் கேள்வி எழுப்புகிறார் நடிகர் சத்யராஜ். 

தமிழக சிறைச் சாலைகளில் நீண்டநாட்கள் சிறையில் வாடும் கைதிகளை முன்விடுதலை செய்வது தொடர்பான கோப்புகள் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. காரணம். பா.ஜ.க எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தொடுத்திருந்த வழக்கு. அந்த வழக்கும் முடிவுக்கு வந்துவிட்டதால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில், முன்விடுதலை நம்பிக்கையோடு காத்திருந்த கைதிகளின் கனவுகள் வீணாகிவிட்டன. இதனால், அதிகப்படியான மனஉளைச்சலுக்கும் அவர்கள் ஆளானார்கள். "தமிழக சிறைகளில் இருபது ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடும் கைதிகள் 80 பேர் உள்ளனர். பத்து ஆண்டுகளைக் கடந்து சிறைவாழ்க்கையை அனுபவித்து வருகின்றவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல். கடந்த ஆண்டு இவர்களின் முன்விடுதலை தொடர்பாக, அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவது என்பது கைதிகளுக்கான உரிமையாகப் பார்க்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், சிறைக் கண்காணிப்பாளர், நன்னடத்தை அலுவலர் ஆகியோரைக் கொண்ட அறிவுரைக் கழகம், 14 ஆண்டுகள் சிறை வாழ்வை நிறைவு செய்தவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்கிறது. இந்த அறிவுரைக் கழகம் முறையாகக் கூட்டப்படுவதில்லை.

நடிகர் சத்யராஜ்தமிழகத்தில் நான்கு முறை முன்விடுதலை அடிப்படையில் கைதிகளை விடுவித்துள்ளது அ.தி.மு.க அரசு. 1992, 93, 94 ஆகிய காலகட்டங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் பெண்கள் தினத்தை ஒட்டி விடுதலை செய்யப்பட்டனர். 2001-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளை ஒட்டி கைதிகள் முன்விடுதலை செய்யப்பட்டனர். இறுதியாக, 2008-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில், '7 ஆண்டு நிறைவு செய்தவர்களையும் விடுவிக்கலாம்' என முடிவு செய்தனர். இந்த ஒரு காரணத்தால்தான் சிறைக் கைதிகளின் முன்விடுதலையில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு எதிரான வழக்கும் முடித்து வைக்கப்பட்டுவிட்டது. தற்போது கைதிகளின் முன்விடுதலையில் எந்தத் தடையும் இல்லை. நீண்டகாலம் சிறையில் வாடும் கைதிகளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சிறைத் துறை அதிகாரிகள் தயாராக வைத்துள்ளனர். தற்போது புதிய அரசு பொறுப்பேற்றிருக்கிறது. 'ஜெயலலிதா வழியில் ஆட்சியை வழங்குவோம்' என அவர்கள் உறுதியளித்துள்ளனர். அவரது பிறந்தநாளில் கைதிகளை முன்விடுதலை செய்வதே சிறப்பானதாக இருக்கும். அதற்கான பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துரிதப்படுத்த வேண்டும்" என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

"ராஜீவ்காந்தி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இறுதி விசாரணைக்கு வரவில்லை. இவர்கள் அனைவரும் 26 ஆண்டுகளாக தண்டனையை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோர் உடல்நலக் குறைவாலும் சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் மனச் சிதைவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, நளினி-முருகன் தம்பதியினர் தங்களது மகளின் திருமணத்துக்குச் செல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். எனவே, வழக்கை தொடர்ந்து நடத்துவதைவிட மத்திய அரசு இவர்களை விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில், அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசே இவர்களை விடுதலை செய்ய வேண்டும்" என வலியுறுத்துகிறார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். 

கைதிகள் முன்விடுதலை தொடர்பாக நம்மிடம் பேசிய நடிகர் சத்யராஜ், "எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்துகொண்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு சிறைக் கைதிகளை முன்விடுதலை செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் தீவிரப்படுத்த வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக, சட்டமன்றத்திலேயே முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தார். சட்டத்தில் அதற்கு வழிவகை இருப்பதாக சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். தற்போதுள்ள தமிழக அரசு இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, ஜெயலலிதா கனவை நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் இவர்களது விடுதலையைப் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் வேறு வேறு பிரச்னைகள் உருவாகி, தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றது. 

25 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறை வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் விடுதலையோடு சேர்த்து, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் முன்விடுதலையும் தள்ளிப் போகிறது. முன்பு அண்ணா பிறந்தநாளில் சிறைக் கைதிகளை முன்விடுதலை செய்யும் வழக்கம் இருந்துவந்தது. காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு, பவானி ஆற்று நீர் தடுப்புப் பிரச்னை என ஏராளமான பிரச்னைகள் நமக்கு இருக்கின்றன. அதைப் போலவே, சிறைக் கைதிகளின் கோரிக்கையும் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. ஆயுள் கைதிகளின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும். நான் சட்டம் படித்தவனல்ல. கருணை அடிப்படையில் அரசு முடிவெடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறேன்" என்றார் நிதானமாக. 

- ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்